இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 6
ஆறு நண்பா…… மீதமுள்ள ஆறு சார்பெழுத்துக்களைத் தொடர்வோமா….? அடுத்து நாம் பார்க்கப்போவது குற்றியலுகரம். அதாவது குறுமை + இயல் + உகரம். குறுமை என்றால் குறுகிய, இயல் என்றால் ஓசை, உகரம் என்றால் ‘உ’ என்னும் எழுத்து என்று அர்த்தம். அதாவது குறுகிய ஓசையை உடைய உ என்னும் எழுத்து என்பதுதான் குற்றியலுகரம் என்னும் வார்த்தையின் பொருள். உனக்குத் தெரியும் ‘உ’ என்னும் குறிலின் மாத்திரை அளவு 1. அது சில நேரங்களில் ½ மாத்திரை அளவிற்கு ஒலிக்கும். அதுவே குற்றியலுகரம் என்று அழைக்கப்படும். இப்போது அளபெடையினையும், இதனையும் ஒப்பிட்டுப்பார் நண்பா… அளபெடை என்பது ஒலியினை நீட்டி ஒலிக்கச் செய்யும். இங்கே ஒலியினை குறுக்கி ஒலிக்கப்போகின்றோம். அவ்வளவுதான்….. சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லின மெய்யெழுத்துக்களுடன் (க்,ச்,த்,ப்,ட்,ற்) உகரம் சேர்ந்து வரும் போது ( அதாவது கு,சு,டு,து,பு,று ) அது அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். உதாரணமாக, அழகு, அரசு, காடு, பந்து, உப்பு, பயறு போன்ற வார்த்தைகளை உச்சரித்துப்பார். இறுதியில் வரும் உகரம் ½ மாத்திரை அளவிற்கே ஒலிக்கும் எனபது உனக்குப்புரியும். இப்போது இன்னொரு முக்க...