இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 6
ஆறு
நண்பா…… மீதமுள்ள
ஆறு சார்பெழுத்துக்களைத் தொடர்வோமா….?
அடுத்து நாம்
பார்க்கப்போவது குற்றியலுகரம்.
அதாவது குறுமை
+ இயல் + உகரம்.
குறுமை என்றால்
குறுகிய, இயல் என்றால் ஓசை, உகரம் என்றால் ‘உ’ என்னும் எழுத்து என்று அர்த்தம்.
அதாவது குறுகிய
ஓசையை உடைய உ என்னும் எழுத்து என்பதுதான் குற்றியலுகரம் என்னும் வார்த்தையின் பொருள்.
உனக்குத்
தெரியும் ‘உ’ என்னும் குறிலின் மாத்திரை அளவு 1. அது சில நேரங்களில் ½ மாத்திரை அளவிற்கு
ஒலிக்கும். அதுவே குற்றியலுகரம் என்று அழைக்கப்படும்.
இப்போது அளபெடையினையும்,
இதனையும் ஒப்பிட்டுப்பார் நண்பா…
அளபெடை என்பது
ஒலியினை நீட்டி ஒலிக்கச் செய்யும். இங்கே ஒலியினை குறுக்கி ஒலிக்கப்போகின்றோம். அவ்வளவுதான்…..
சில சொற்களுக்கு
இறுதியில் ஆறு வல்லின மெய்யெழுத்துக்களுடன் (க்,ச்,த்,ப்,ட்,ற்) உகரம் சேர்ந்து வரும்
போது ( அதாவது கு,சு,டு,து,பு,று) அது அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
உதாரணமாக,
அழகு, அரசு, காடு, பந்து, உப்பு, பயறு போன்ற வார்த்தைகளை உச்சரித்துப்பார். இறுதியில்
வரும் உகரம் ½ மாத்திரை அளவிற்கே ஒலிக்கும் எனபது உனக்குப்புரியும்.
இப்போது இன்னொரு
முக்கியமான விசயம் சொல்கிறேன் கேள். எப்போதுமே இரண்டு எழுத்துச்சொற்களில் முதல் எழுத்து
நெடிலாக இருந்தால் மட்டுமே (எ.கா.: காசு) அது குற்றியலுகரமாகும். அவ்வாறு இல்லாமல்
முதல் எழுத்து குறிலாக இருப்பின் ( எ.கா.: பசு) அது குற்றியலுகரமாக இருக்காது.
பசு என்ற
வார்த்தையினைச் சொல்லிப்பார், உகரம் ஒரு மாத்திரை அளவிற்கு ஒலிக்கும். எனவே இது முற்றியலுகரம்
என்றழைக்கப்படும்.
புரிந்ததா…?
அடுத்தது,
குற்றியலிகரம்.
அங்கே உ கரம்
வந்தது போல இங்கே இகரம்.
இ கரம் தனது
ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ½ மாத்திரையாக ஒலிப்பதுதான் குற்றியலிகரம்.
இரண்டு இடங்களில்
மட்டுமே குற்றியலிகரம் வரும்.
1. 1. இரண்டு
சொற்கள் சேரும்போது முதல் சொல் குற்றியலுகரச்
சொல்லாக இருந்து, அதனுடன் சேரும் சொல்லின் முதல் எழுத்து ‘ய’ கரமாக இருந்தால், அவை
சேரும் போது உ என்னும் எழுத்து இ என்னும் எழுத்தாகும். அந்த இ ½ மாத்திரை அளவில் ஒலிக்கும்.
உதாரணம்:
என்பது + யாது = என்பதியாது
2. 2. அடுத்ததாக
‘மியா’ என்னும் சொல்லை ஞாபகம் வைத்துக்கொள். இது ஒரு அசைச்சொல். செய்யுளில் ஓசை நயத்திற்காக
இதனை வைத்துக்கொள்வார்கள். இதில் உள்ள இகரம் (ம் + இ) குற்றியலிகரமாகும்.
உதாரணம்:
கேள் + மியா = கேண்மியா
அடுத்ததாக
ஐகாரக்குறுக்கம்.
ஐ என்னும்
எழுத்தினைத் தனியாக ஒலித்தால் அதற்கு இரண்டு மாத்திரை என உனக்குத் தெரியும். ஆனால்
அதனை ஏதேனும் சொற்களில் சேர்த்து ஒலிக்கும்போது கால அளவு குறைந்து ஒலிக்கும். அதுவே
ஐகாரக்குறுக்கமாகும்.
உதாரணமாக
தை, வை, இளைஞர், பறவை, வையம் போன்ற வார்த்தைகளை ஒலித்துப்பார்.
அடுத்து ஔகாரக்கூறுக்கம்.
இதுவும் அதுபோலத்தான்,
ஔ என்னும் எழுத்துக்கு இரண்டு மாத்திரை. ஆனால் சொல்லில் ஒலிக்கும் போது 1 ½ மாத்திரை
அளவில்தான் ஒலிக்கும். அதுவே ஔகாரக்குறுக்கம்.
ஔவையார்,
வௌவால் போன்ற வார்த்தைகளை ஒலித்துப்பார். புரியும்.
அடுத்து மகரக்குறுக்கம்.
மற்ற குறுக்கங்களைப்
போலவே ‘ம’கரம் தன் மாத்திரை அளவை விடக் குறைந்து ஒலிப்பதுதான் மகரக்குறுக்கம்.
வரும் வளவன்
என்று சொல்லிப்பார். மகரம் தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது புரியும்.
அடுத்து ஆய்தக்குறுக்கம்.
ஆய்த எழுத்தானது
தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது.
உதாரணம்
: கல் + தீது = கஃறீது, முள் + தீது = முஃடீது
என்ன நண்பா……
ஒரு வழியாக பத்து சார்பெழுத்துக்களையும் பார்த்து விட்டோமா…..?
என்னடா இது
பிழையில்லாமல் எழுதச் சொல்லித்தருகின்றேன் எனக்கூறி விட்டு ஏதேதோ சொல்கிறேன் என்று
பார்க்கிறாயா…?
கவலைப்படாதே
நண்பா…. உனக்கே தெரியும் அடிக்கல் வரிசை வைக்காமல் கட்டிடம் எப்படிக் கட்ட முடியும்.
எழுத்துக்களைப்
பற்றிய அடிப்படை அறிவினைத் தெளிவு செய்யாமல், எழுத்துப்பிழையினை எப்படித் தவிர்க்க
முடியும்.
அதனால்தான்
எழுத்துக்களைக் குறித்த சின்ன அறிமுகத்தினை உனக்குச் சொல்லித்தந்தேன்.
உண்மையில்
சார்பெழுத்துக்கள் ஒவ்வொன்றினைப் பற்றியும் ஒரு நாள் முழுக்கப் பேசலாம். ஆனால் இப்போதைக்கு
இது போதும்.
ஒருமுறை, ஆறு நாட்களாக நாம் பேசிய விசயங்களை மனதினில் அசைபோட்டுப் பார். உனக்கு இப்பொழுது சில
விசயங்கள் மறந்து போனது போல இருக்கலாம். ஆனால் கவலைப்படாதே….. நமது முக்கிய நோக்கமான
பிழைதிருத்தம் குறித்துப் பேசும் போது உனக்கு மீண்டும் அவை நினைவுக்கு வரும். இல்லையெனில்
நான் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்.
சரியா…..நாளை
பார்க்கலாம்…காத்திரு……
-நா.கோபாலகிருஷ்ணன்
சூப்பர் சகோ
ReplyDelete