சிறுவாடு

 


இந்த முழு அடைப்புக்காலம் நிறைய விசயங்களை நம்மைச் சந்திக்க வைத்திருக்கின்றது. 


முக்கியமாய் பெரும்பான்மையான மக்கள் சந்தித்திருப்பது நிதி சார்ந்த பிரச்சினைகள்தான். 

ஒரு எதிர்பாராத இடர்வரும்போது அதனை எதிர்கொள்வதற்கு, நாம் எந்த அளவிற்குத் தயாராய் இருக்கின்றோம் என, இந்தக்காலமானது நமக்கு சுயதரிசனம் காட்டியிருக்கின்றது. 


முன் தலைமுறையில் இல்லாத நுகர்வுக் கலாச்சாரத்தினை இப்போது நாம் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம். தேவையோ இல்லையோ எல்லாப் பொருட்களையும் வாங்கிக் குவித்துள்ளோம். 


இந்த முழு அடைப்புக்காலம் வந்தவுடன் நாம் அனைவரும் யோசித்தது அடுத்த மாத இ.எம்.ஐ. பற்றித்தான். முழுச்சாப்பாடு இல்லையெனினும் கஞ்சி குடித்து வாழ்ந்து விடலாம் என்ற தைரியம் இருந்தாலும், இ.எம்.ஐ. மட்டும்தான் பூதத்தினைப் போல முன் நிற்கின்றது. 


இப்போது நம்மை அறியாமலே நாம் அறிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விசயம், நம்மிடம் என்ன சேமிப்பு உள்ளது என்பது…..


எனக்குத் தெரிந்து எனது சுற்று வட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டு தன்னைத் தானே துப்பிக்கொண்டவர்கள் பெருவாரியானவர்கள்.


ஐந்து இலக்கத்தில் சம்பாதிக்கும் சிலரும், மிஞ்சிப்போனால் இரண்டு மாதம் தாண்டும் அளவுக்கான தொகையினைக் கையில் வைத்திருக்கவில்லை என்பதே நிஜம். அதன் பயனை நிறைய தங்கநகைக்கடன் நிறுவனங்கள் அனுபவிக்கின்றன.


வீடு, மனை என்று சில முதலீடுகள் இருந்தாலும், உடனடியாகப் பணமாக மாற்றக்கூடிய தங்கம் போன்ற முதலீடுகளும் முக்கியம் என சில நண்பர்களுடன் உரையாடும்போது கூறினார்கள்.


ஆனால் தங்கம் தவிர்த்த இன்னும் சில வழிமுறைகளை யாருமே யோசித்திருக்கவில்லை என்பதுதான் நிஜம். 

(90% தங்கத்தை கூட வீட்டம்மாவின் வற்புறுத்தலில்தான்  வாங்கியிருப்பார்கள்….)


வாங்குற சம்பளம் இருக்குற செலவுக்கே பத்தலை இதுல என்னத்த சேமிப்பது என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டார்.


இங்கே கேள்வி சேமிப்பது பற்றி அல்ல…. பண நிர்வாகத்தினைப் பற்றி. 


ரெம்ப சாதாரணமாய் ஒரு விசயம் சொல்லலாம். மளிகைக் கடையில் மிச்சக்காசுக்குத் தரும் சாக்லேட் விசயம்.


ஒரு சாக்லேட்டின் விலை ஐம்பது காசு. ஒரு மாதத்தில் இரண்டு முறை மட்டுமே நீங்கள் இப்படி ஏமாற்றப்பட்டால், ஒரு வருடத்தில் 12 ரூபாய் ஆகிறது.

12 ரூபாயில் என்னய்யா ஆகப்போகின்றது என்பதுதானே கேள்வி…?


ஒரு கோப்பை தேநீரின் விலை 10ரூபாய் …. ஏதாவது ஒரு தேநீர்க்கடையில் இலவசமாய் உங்களால் ஒரு தேநீர் அருந்தமுடியுமா…?


சரி ஐம்பது பைசா சரியாய் வாங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா…..?


அதுதான் ஆரம்பப்புள்ளி. 


கடையில் மிச்சம் வாங்காத பணத்தில் ஆரம்பித்து பணம் புரளும் அனைத்து இடங்களிலும் நாம் நமது கவனக்குறைவில் தவற விடும் பணத்தின் அளவு குறைந்தது ஒரு வருடத்திற்கு ஐந்தாயிரமாவது வரும்.

அதுபோல ஆடம்பரம் என நினைத்து நாம் செய்யும் அனாவசியச் செலவுகளும் ஒரு வருடத்தில் குறைந்தது ஐந்தாயிரமாவது வரும். 


1991ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ350. இப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4800 னை நெருங்கிவிட்டது. இருபது வருடத்தில் கிட்டத்தட்ட 14 மடங்கு வளர்ச்சி. 


நீங்கள் மிச்சம் பிடிக்கும் பணத்தில் இரண்டு கிராம் தங்கம் வாங்கி வையுங்கள். இருபது வருடம் கழித்து உங்கள் குழந்தைக்கு சுமார் ரூ1,30,000/-கிடைக்கும். ( அப்போது அது மிகச் சாதாரணமான தொகையாக இருந்தாலும்… யார் இலவசமாய்க் கொடுப்பார்கள்…?)


நமது குழந்தைப்பருவ காலத்தில் அம்மாக்களை யோசித்துப் பாருங்கள். 


அப்பா எவ்வளவு கொடுத்தாலும் அதில் கொஞ்சம் மிச்சம் பிடித்துக் கடுகு டப்பாவிலோ, பருப்பு டப்பாவிலோ போட்டு வைத்திருப்பார். எங்கள் ஊர்பக்கம் அதனை சிறுவாடு என்பார்கள். 


பால் பாக்கெட் கவரில் ஆரம்பித்து எந்தெந்த வகையிலெல்லாம் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கிடைக்கும் என்று பார்த்திருப்பார். 


அந்த ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் பெரிய பணமா…? இல்லை … ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து உங்களுக்கு உடையாகியிருக்கலாம்… அல்லது மோதிரமாகியிருக்கலாம்… உங்கள் கல்விக்கட்டணம் ஆகியிருக்கலாம். 


அதுவும் ஒரு வகையான நிதிநிர்வாகம்தான். 


சேமிப்பு, முதலீடு என்றவுடன் ஆயிரங்களில் ஆரம்பித்து இலட்சங்களில் யோசிக்கவேண்டியதில்லை. 


ஒரு ரூபாயில் கூட நமது சேமிப்பினை ஆரம்பிக்கலாம்… நூறு ரூபாயில் கூட முதலீட்டினை ஆரம்பிக்கலாம். 


நாம் பெரிய பொருளாதாரப்புலியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை…. தேவையான வாய்ப்புகளை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.


இங்கே நேர்வழியில் பொருள் செய்யவும், பெருக்கவும் நிறைய வழிகள் கொட்டிக்கிடக்கின்றன. 


வாய்ப்பு இருக்குமெனில் இது குறித்து  இன்னும் பகிர்ந்துகொள்வோம். 


- நா.கோபாலகிருஷ்ணன்


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27