உணவும் உணர்வும்

உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டதா ….. என்னைக் கேட்டால் ஆமாம் என்பேன்.


இந்த உணவைத்தான் நீ உண்ணத் தகுதியுடையவன், உண்ண வேண்டியவன்  எனத் திணிப்பதுவும் வன்முறைதான்…..


சில நேரங்களில் சில சம்பவங்கள் நிகழும்போது அது நமக்குப் பல விசயங்களைச் சொல்லிப்போய்விடுகின்றது. 


2010 அல்லது 2011ஆம் வருடம் என்று நினைக்கிறேன். எனது பணி நிமித்தமாக அடிக்கடி விழுப்புரம் சென்று தங்குவது வழக்கம். அப்போது விழுப்புரத்தில் எனக்கு இருந்த பெரும் பிரச்சினை சாப்பாடுதான். ஒன்றிரண்டு கடைகள் தவிர எங்கும் சாப்பிட முடியாது. பெரும்பாலும்  பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்த ஒரு உணவகத்தில்தான்  ( விலை கொஞ்சம் அதிகமென்றாலும்) சாப்பிடுவேன்.


ஒருநாள் காலை அந்த உணவகத்தின் சிறப்பான வெண்பொங்கலை ருசித்துக்கொண்டிருந்தேன். 

எனது எதிர் இருக்கையில் ஒரு நடுத்தர வயதுடைய தம்பதியினர் வந்து உட்கார்ந்தார்கள். கொஞ்சம் கிராமிய சாயல் கொண்ட மனிதர்கள்.

உட்கார்ந்தவுடன் கணவர் மனைவியிடம் இட்லி சாப்பிட்டுக்கலாம் என்றார். சரியென்று தலையசைத்த அந்தப் பெண்மணி நான் பொங்கல் சாப்பிடுவதைப் பார்த்தவர் மெதுவாகக் கணவரிடம் பொங்கல் வேண்டும் என்றார். 

அந்தக் கணவர் ஒரு சில வினாடிகள் மட்டும் தயங்கி சரியென்றார். 


நீ போய் கை கழுவிட்டு வா என்று அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தபோது சர்வர் வந்தார். அந்தப் பெண்மணி நகர்ந்து போனவுடன் சர்வரிடம் பொங்கல் எவ்வளவு என்று கேட்டார். சர்வர் சொன்னவுடன் ஒரு பொங்கல் மட்டும் கொண்டு வரச்சொன்னார். பின்னர் மெதுவாய் சட்டைப்பையினைப் பார்த்துக்கொண்டார். 


அந்தப் பெண்மணி வந்து அமர்ந்தவுடன் பொங்கல் வந்தது. உங்களுக்கு என்ன சொன்னீங்க என்றார் அந்தப் பெண்மணி. அந்தக் கணவன் இல்லை எனக்கு எதுவும் வேணாம். காலைல டீ சாப்ட்டது நெஞ்சைக் கரைக்குது…. நான் மதியம் வீட்டுக்குப் போனப்புறம் சாப்டுக்குறேன் என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்துக் குடித்தார்.


அந்தப் பெண்மணியும் அதனை நம்பி சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஆனால் என்னால்தான் சாப்பிடமுடியவில்லை. இன்றும் எனக்கு அந்தக் கணவனின் முகம் நினைவில் ஆடிக்கொண்டிருக்கின்றது.


இன்றைக்கு மதியம் கிட்டத்தட்ட அதே சம்பவம் மீண்டும் நிகழ்ந்தது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் என் எதிரே ஒரு தாயும், மகளும் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பெண் பத்தாம் வகுப்பு செல்கிறாள் போல, அவர்களின் பேச்சில் தெரிந்தது. அருகிலிருந்த கிராமத்தில் இருந்து பொருட்கள் வாங்க நகருக்கு வந்துள்ளார்கள். 


இருக்கையில் அமர்ந்தவுடன் அந்தப் பெண் சர்வரிடம் பிரியாணி எவ்வளவு என்று கேட்டார். அதற்குள் அந்தச் சிறுமி எனக்கு தந்தூரிச் சிக்கன் வேண்டும் என்றாள். அந்தப் பெண்மணி சர்வரிடம் அது எவ்வளவு என்று கேட்டார். அவர் அரை தந்தூரிக்கான விலையைச் சொன்னார். அந்த சிறுமி எனக்கு வேற எதுவும் வேண்டாம் அது மட்டும் போதும் என்றாள். அந்தப்  பெண் அரை பிளேட் தந்தூரிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு பாப்பாவுக்கு மட்டும் இலை போடுங்க எனக்கு வேண்டாம் என்றார். 


சர்வர் போனபின் திடீரென என்னிடம் சாப்பாடு எவ்வளவு என்றார். சொன்னேன். சரி என்பது போலத் தலையசைத்து விட்டு தண்ணீரை எடுத்துக் குடித்தார். 

தந்தூரி சிக்கனைக் கொண்டு வந்து வைத்தவுடன் அந்தச் சிறுமி ஆர்வமாய் அதைச் சாப்பிட்டாள். இந்தாம்மா நீயும் சாப்பிடு என்று இடையிடையே இரண்டு விள்ளல்களை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டுக்கொண்டே அந்தச் சிறுமி தந்தூரி செய்வதைப் பற்றி அந்தப் பெண்ணிடம் சொல்ல அவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.


இடையில் ஏதோ நினைவு வந்தவர் போல அந்தப் பெண்மணி அந்தச் சிறுமியிடம் அப்பாவுக்கு பிரியாணி ரெம்பப் பிடிக்கும்ல என்றார். என்ன நினைத்தாரோ சர்வரைக் கூப்பிட்டு அரை பிளேட் பிரியாணி பார்சல் வேண்டும் என்றார். பின்னர் திரும்பி மகளைப் பார்த்து சிரித்து அப்பாவுக்கு வாங்கிட்டுப் போவோம் என்றார். 


அந்தப் பெண்மமியின் முகமும் எனக்கு நினைவில் பதிந்து விட்டது. 


பணம் எல்லா விசயங்களை நிர்ணயித்தாலும், உண்மையில் உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. 


இன்றைக்கு என் மனைவியிடம் எனக்கு காலை டிபனில் என்ன பிடிக்கும் என்று கேட்டால், தயங்காமல் பொங்கல் என்று சொல்வார்.


உண்மையில் எனது கல்லூரி நாட்கள் வரை எனக்கு பொங்கல் பிடிக்காது. 


படிப்பு முடித்து, ஒரு இக்காட்டான காலகட்டத்தில் நான் மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எங்கள் விடுதியின் அருகில் ஒரு மெஸ் இருந்தது. அங்கே பொங்கல் ரெம்ப பிரபலம். 


சுவை நன்றாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், காலையில் அந்தப் பொங்கலைச் சாப்பிட்டால் மாலை வரை பசியே எடுக்காது என்பதுதான் அங்கு பொங்கல் அதிகமாய் விற்பதன் ரகசியம். 

காலையில் அங்கே பொங்கல் சாப்பிட்டால் ஒரு வேளை சாப்பாட்டுச் செலவு மிச்சம் ஆகும். அங்கே சாப்பிட்டுப் பழகிப் பழகி பின்னாட்களில் பொங்கல் பிடித்த உணவாய் மாறிப்போனது. 


இப்படி உணவின் பின்னால் இருக்கும் உணர்வுகளைப் பற்றிப் பேச எல்லாரிடமும் பலவிதமான கதைகள் கண்டிப்பாய் இருக்கும். எனவே என்னால் கொஞ்சம் சப்தமாய் சொல்ல முடியும் உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டதுதான்.


பின்குறிப்பு: தி கிரேட் இண்டியன் கிச்சனுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27