இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் 2
இரண்டு
என்ன நண்பா
நேற்று ஐந்து இலக்கணம் பற்றிப் பேசினோம் ஞாபகம் இருக்கின்றதா..?
எழுத்து இலக்கணம்
என்றால் உனக்குப் பெயரிலேயே தெரிந்திருக்கும். எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்
என்று கேட்பது போல……
எழுத்திற்கான
வரையறை மற்றும் அது குறித்த விளக்கங்களைக் கூறுவது எழுத்திலக்கணம்
சொற்கள் மற்றும்
வாக்கிய அமைப்பினைப் பற்றிப் பேசுவது சொல் இலக்கணம்.
அடுத்ததாக
யாப்பு. யாப்பு என்றால் கட்டுதல் என்ற பொருள். மளிகைக்கடையில் சாமான்கள் வாங்கினாயென்றால்
முறையாக ஒன்றின் கீழ் ஒன்று வைத்துக் கட்டித்தருகிறார்கள் அல்லவா, அது போல ஒரு செய்யுளை
முறையாக வடிவமைத்துக் கொடுப்பதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம்.
அடுத்து அணி
இலக்கணம். அணி என்றால் அணிகலன். நாம் என்னதான் அழகாக இருந்தாலும்(!), கழுத்தில் ஒரு
சங்கிலி, கையில் ஒரு மோதிரம் என்று அழகுக்கு அழகு சேர்த்துக் கொள்கிறோம் அல்லவா, அது
போல செய்யுளின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்க எந்தெந்த அணிகலன்கள் உள்ளன எனச் சொல்லும்
இலக்கணம் அணி இலக்கணம்.
இறுதியாக,
பொருள் இலக்கணம்.
தமிழ் மொழிக்கே
உரித்தான சிறப்பான ஒரு விசயம் இந்த பொருள் இலக்கணம் நண்பா.
மொழிக்கு
மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.
அன்பு, பாசம்,
காதல் போன்ற உணர்வுகளை அகம் என்றும், வீரம், கல்வி, கொடை போன்றவற்றை புறம் என்றும்
பிரித்து பொருள் இலக்கணம் தந்துள்ளனர்.
எவ்வளவு சிறப்பு
பார்த்தாயா…?
நண்பா…. இப்போது
ஐந்து இலக்கணத்தைப் பற்றியும் சுருக்கமாய்த் தெரிந்து கொண்டாய் அடுத்து என்ன செய்யலாம்…?
“நண்பா நான்
பிழையின்றி எழுத வழி கேட்டால் நீ நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறாய் “ என்று நீ உன்
மனதுக்குள் கேட்பது என் காதில் விழுகின்றது.
ஆனால் அடிப்படையாய்ச்
சில விசயங்களைத் தெரிந்து கொண்டு, அதன்பின் நமக்குத் தேவையான விசயத்திற்குப் போகலாமே.
சமையல் செய்வதற்கு
முன் அதற்குத் தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு சமைப்பதுதானே சரி.
அடுப்பைப்
பற்ற வைத்து விட்டு எண்ணெய் வேண்டுமென்று அடுத்த வீட்டிற்கு ஓடக்கூடாதல்லவா….?
சரி நண்பா
விசயத்திற்கு வருவோம். யாப்பு, அணி, பொருள் ஆகிய இலக்கணங்களை இப்போதைக்கு நாம் பார்க்க
வேண்டியதில்லை. ஆனால் எழுத்து மற்றும் சொல் இலக்கணத்தின் ஒரு சில பகுதிகளைத் தெரிந்து
கொள்ளுதல் மிகவும் அவசியம்.
முதலில் எழுத்திலக்கணம்
பற்றிப் பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களின்
எண்ணிக்கை 247 என்று உனக்குத் தெரியும். (உண்மையில் தெரியும்தானே…?) இதனை முதலில் பிரித்துப் பார்த்து விடலாம்.
உயிர் எழுத்துக்கள்
(12) + மெய்யெழுத்துக்கள் (18) + உயிர்மெய் எழுத்துக்கள் (216) + ஆய்த எழுத்து
(1) = ஆகமொத்தம் 247 எழுத்துக்கள்.
உயிர் எழுத்துக்கள்
என்பவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
ஆகியவைகள்.
மெய்யெழுத்துக்கள்
என்பவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்,
ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகியவைகள்.
தமிழில் மெய்
என்றால் உடம்பு என்று அர்த்தம். உடம்பும், உயிரும் சேர்ந்து பிறப்பவை உயிர்மெய்யெழுத்துக்கள்
ஆகும்.
உதாரணமக “க்”
என்ற மெய்யெழுத்தும், “அ” என்ற உயிரெழுத்தும் சேர்ந்து “க” என்ற உயிர்மெய்யெழுத்துப்
பிறக்கின்றது.
இதுபோல
12 உயிரும், 18 மெய்யும் சேர்ந்து 216 (12 X 18) உயிர்மெய் எழுத்துக்களைப் பெற்றெடுக்கின்றது.
கடைசியாக
நமது கதாநாயகன் ஆய்த எழுத்து (ஃ) ( வேங்கை
மகன் ஒத்தையில நிக்கான் பாட்டினைப் பிண்ணனியில் இசைத்துக்கொள்ளவும்) தனியாய் நிற்கின்றார்.
இவருக்கு முப்பாற்புள்ளி என்ற பெயரும் உண்டு.
சரியா நண்பா……
இப்போது 247 எழுத்துக்களையும் அறுவை சிகிச்சை செய்து பார்த்தாயிற்று. அடுத்தது என்ன?
இதுவரை எண்ணிக்கை
பற்றித்தானே பார்த்தோம். அடுத்ததாக அவற்றை எப்படி வகை பிரித்துள்ளார்கள் என்று பார்ப்போம்.
தமிழின் எழுத்துக்களை
இரண்டு பெரும் பிரிவுகளில் பிரித்துள்ளார்கள்.
அவை, முதனமை
எழுத்துக்கள் மற்றும் சார்பு எழுத்துக்கள்
முதன்மை எழுத்துக்கள்
Ø
உயிர்
எழுத்து
Ø
மெய்
எழுத்து
சார்பு எழுத்துக்கள் (மொத்தம் பத்து)
Ø
உயிர்
மெய் எழுத்து
Ø
ஆய்த
எழுத்து
Ø
உயிரளபெடை
Ø
ஒற்றளபெடை
Ø
குற்றியலிகரம்
Ø
குற்றியலுகரம்
Ø
ஐகாரக்குறுக்கம்
Ø
ஔகாரக்குறுக்கம்
Ø
மகரக்குறுக்கம்
Ø
ஆய்தக்குறுக்கம்
247 எழுத்துக்களைப் பற்றிச் சொன்னாய்..., புரிந்த மாதிரி இருந்தது. இப்போது புதிதாய் முதன்மை எழுத்து, சார்பு எழுத்து
என்று விதம் விதமாய்ச் சொல்கிறாயே… என்னடா இது என்று பயப்படாதே….. ரெம்பச் சாதாரண விசயம்தான்….
நாளை பேசுவோம்….
-
நா.கோபாலகிருஷ்ணன்
அருமையாகவும் எளிதாகவும் தொடர்கிறது... பலருக்கும் உதவும்...
ReplyDeleteமுதல் பகுதியும் வாசித்தேன்...
தொடர வாழ்த்துகள்...
நன்றி சகோ
Deleteஅருமை சகோ ....மிக எளிய நடையில் ஒரு அற்புதமான விளக்கம்
ReplyDelete