இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 4
நான்கு
என்ன நண்பா
நலமா…? மூன்று நாட்களும் நாம் பார்த்தது அனைத்தும் நினைவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.
இன்று சார்பெழுத்துக்கள்
பற்றிப் பார்ப்போம் என்று சொன்னேன்.
அதனைப் பற்றிப்
பார்க்கும் முன் இன்னொரு முக்கியமான விசயத்தினைப் பார்த்துவிடுவோம்.
‘மாத்திரை’
இதனைக் கேட்டவுடன்
நீ நோய்க்காக விழுங்கும் மாத்திரை பற்றிப் பேசப் போகின்றோம் என நினைக்காதே….. தமிழ்
இலக்கணத்தில் மாத்திரை என்பது எழுத்துக்களை ஒலிப்பதற்குரிய கால அளவினைக் குறிப்பது.
ஒரு மாத்திரை
என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தின் அளவாகும்.
ஒரு எழுத்து
ஒலிக்கும் காலத்தைக்கூடக் கணக்கிட்டு நமது இலக்கணம் எழுதப்பட்டுள்ளது எனில் எவ்வளவு
நுட்பமான மொழி நமது மொழி என்று தெரிந்துகொள்.
ஒரு குறில்
எழுத்திற்கான மாத்திரை என்பது 1 ஆகும். அதாவது ஒரு முறை கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
இந்த எழுத்தினை நீ ஒலித்துவிடலாம்.
ஒரு நெடில்
எழுத்திற்கான மாத்திரை என்பது 2 ஆகும். ஒரு நெடில் எழுத்தினை நீ ஒலிக்கும் வேளையில்
இரண்டு முறை கண் இமைத்து விடலாம்.
புரிகிறதா…?
இதுபோலவே
மெய்யெழுத்துக்களுக்கு ½ மாத்திரையும், ஆய்த எழுத்திற்கு ½ மாத்திரையும் கால அளவு ஆகும்.
மாத்திரை
பற்றி உனக்கு இப்போதே சொன்னதற்குக் காரணம் இருக்கின்றது.
நாம் இனிக்காணப்போகும்
எட்டு விதமான சார்பெழுத்துக்களும் ( பத்து சார்பெழுத்துக்களில் உயிர்மெய் மற்றும் ஆய்தம்
பற்றிப் பார்த்துவிட்டோம் என நினைவில் கொள்) இந்த மாத்திரையின் அடிப்படையில்தான் பிறக்கின்றது.
அதற்காகத்தான் இதனை இப்போதே விளங்கிக்கொள்ளச் சொன்னேன்.
சார்பெழுத்துக்களில்
முதலில் உயிரளபெடை மற்றும் ஒற்றளபெடை பற்றிப் பார்ப்போம்.
அளபெடை என்ற
வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்.
அளபு என்றால்
மாத்திரை, எடை என்றால் எடுத்தல் என்று அர்த்தம்
“செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின்
முதலிலும், இறுதியிலும் நிற்கும் எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு
ஒலிக்கும். இதுதான் அளபெடை”
என்னடா இப்படி
நீண்ட மொழியில் புரியாமல் என்னவோ சொல்கிறாய் என்று முகத்தைச் சுருக்காதே, ஒன்றும் பெரிய
விசயம் அல்ல.
நான் யாப்பு
இலக்கணம் பற்றிச் சொன்னேன் ஞாபகம் இருக்கின்றதா….?
யாப்பு என்றால்
கட்டுதல் என்று பொருள் எனச் சொன்னேனே… ஞாபகப்படுத்திக்கொள்.
ஒரு செய்யுளை
இயற்றும்போது அதற்கென்று இலக்கணம் உள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளை அமைப்பதற்கும், அதன்
ஓசைக்கும் தனி இலக்கணம் உள்ளது. அது குறித்து வேறு சமயம் கிடைக்கும்போது சொல்கிறேன்.
இப்போதைக்கு, ஓசை என்பதனை மட்டும் கவனத்தில் கொள்.
ஒரு செய்யுளை
எழுதும் வேளையில் அதில் புலவர் ஒரு வார்த்தையினை எழுதுகின்றார். அதன் ஓசை அந்தச் செய்யுள்ளுக்கு
ஏற்றபடி இல்லாது கொஞ்சம் குறைந்து ஒலிக்கின்றது என வைத்துக்கொள்வோம். அச்சமயத்தில்
அங்கு ஒரு எழுத்தினைக் கொஞ்சம் நீண்டு ஒலிக்க வைக்கச் செய்யப்படுவதே அளபெடை எனப்படுகின்றது.
இன்னும் எளிமையாக
விளங்கிக்கொள்ள வேண்டுமெனில், நீ உன் நண்பர்களுடன் ஒரு குழு விளையாட்டினை விளையாடப்போகின்றாய்.
அப்போது உனக்கு ஒரு ஆள் குறைவாக இருக்கின்றான் என வைத்துக்கொள்வோம். நீ என்ன செய்வாய்
யாரோ ஒரு சிறுவனை ‘ஒப்புக்குச் சப்பாணி’ எனச் சேர்த்துக்கொள்வாயல்லவா…. கிட்டத்தட்ட
அதுபோலத்தான் இதுவும்.
அளபெடையில்
இரண்டு உண்டு. ஒன்று உயிரளபெடை. இன்னொன்று ஒற்றளபெடை.
முதலில் உயிரளபெடை.
“செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய,
மொழிக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கின்ற உயிர் நெடில் எழுத்துக்கள் ஏழும்
தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு அளபெடுத்து ஒலிப்பது உயிரளபெடை ஆகும்”
நண்பா மீண்டும்
முகத்தைச் சுருக்காதே….. ஒன்றும் விசயம் இல்லை.
உயிர் நெடில்
எழுத்துக்கள், அதாவது ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
ஆகிய ஏழு எழுத்துக்களும் அளபெடுப்பதுதான் உயிரளபெடை. அவ்வளவுதான்…
அளபெடுப்பது
சரி அதனை எப்படி எழுதுவார்கள் என்பதுதான் உனது அடுத்த கேள்வியாய் இருக்கும். ஏனெனில்
மாத்திரை (ஒலி) நீளும் என ஒலியைப் பற்றிப் பார்த்துவிட்டோம். அடுத்து வரி வடிவம்தானே…..
ஒரு எழுத்து
அளபெடுக்கும்போது, அதனது இன எழுத்தினை அதற்கு அருகில் எழுதுவார்கள்.
அதென்ன இன
எழுத்து என்கிறாயா….? உன்னை நான் அறிவேன் நண்பா….
ஆ – அ, ஈ –இ, ஊ
– உ, ஏ – எ, ஐ – இ, ஓ-
ஒ, ஔ – உ ஆகியவை இன
எழுத்துக்கள்.
உதாரணமாக
கீழ்க்கண்ட சில அளபெடைச் சொற்களைப்பார்.
‘கெடுப்பதூஉம்’
‘கெடாஅ’
‘குடிதழீஇ’
மீண்டும்
நெற்றியைச் சுருக்காதே…..
முதல் வார்த்தையில்
உள்ள ‘தூ’ என்பது ‘த் + ஊ’. ஆகவே அளபெடுக்கையில்
‘ஊ’க்கு இனமான ‘உ’ வினை எழுதியுள்ளோம்.
அது போலவே
‘டா’ என்பது ட் + ஆ, ‘ழீ’ என்பது ‘ழ்+ஈ’
விளங்கிக்கொண்டாயா…….
இந்த உயிரளபெடையில்
மொத்தம் மூன்று வகைகள் உள்ளன…..
பயப்படாதே…
இன்றைக்கு இத்தோடு நிறுத்திக்கொள்வோம். அதனைப் பற்றி நாளைக்குப் பார்க்கலாம். காத்திரு…..
-
நா.கோபாலகிருஷ்ணன்
மிக மிக அருமையான விளக்கம் சகோ.. வாழ்த்துகள் சகோ
ReplyDeleteநன்றி சகோ
Delete