HR _ ஆள் பிடிக்கும் வேலையா?
பல தனியார் கார்ப்பரேட்டுகளின் பணியாளர்களில் பெரும்பான்மையான தோழர்களுக்கு பிடிக்காத ஒரு சொல் ஹெட்ச் ஆர். தமிழில் சொன்னால் மனித வளம்.
உண்மையைச் சொன்னால் ஒரு பணியாளரை, அவர் வேலை செய்யும் நிறுவனத்துடன் உணர்வுப் பூர்வமாய் இணைக்கும் வேலையைச் செய்யும் மக்கள்தான் இந்த ம.வ. மேலாளர்கள்.
அவர்கள் எந்த விதமான உணர்வினை ஊட்டுகிறார்கள் என்பதைப் பொருத்துதான் நிறுவனத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்….
மிக மோசமான விசயம் என்னவென்றால், பெரும்பான்மையான மேலாளர்கள் இது ஆள் பிடிக்கும் வேலையென்றும், அடியாள் வேலையென்றும் தங்கள் மனதுக்குள் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். ஒரு சிலைக்கான கல்லை உடைப்பவன், அதன் உன்னதத்தை அறியாமல் செய்வது போல………..
ஒவ்வொரு பணியாளர்களுக்குள்ளும் ஒழிந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதும், ஒவ்வொரு பணியாளர்களின் சரியான தேவைகளை நிறுவனத்திற்கு எடுத்துச் செல்வதும், நல்லன கெட்டன பார்க்கும் போது வேண்டியவர், வேண்டாதவர் எனப் பிரித்துப் பார்க்காது இருத்தலும், பணியாளர்கள் தடுமாறும் நேரத்தில் முன்னின்று மேலெடுத்துச் செல்வதுமான ஒரு தலைவனுக்கு உரிய பொறுப்பு அவர்களுக்கு இருத்தல் வேண்டும்.
முக்கியமாய் ஒரு நல்ல தலைவன் தம் தொண்டர்களுக்குள் அரசியல் செய்ய மாட்டான் என்பதனையும் அறிந்திருத்தல் வேண்டும்.
ஒரு பணியாளன் என்ன சந்தோசத்தோடு உள்ளே வருகின்றானோ, அதே மகிழ்ச்சியோடு அங்கு பணியாற்ற வேண்டும்…. ஒருக்கால் அவன் வெளியேற நினைத்தால் அதே மகிழ்ச்சியோடு வெளியே செல்ல அவனுக்கு ஆவண செய்ய வேண்டும். இப்படியான ஒரு ம.வ.மே. ஒரு நிறுவனத்திற்கு அமைந்தால், அதன் வளர்ச்சி விகிதம் மிகப் பெரியதாய் இருக்கும். இதனை இன்றைக்கும் பல நிறுவனங்களில் கண்கூடாகப் பார்க்கலாம்.
ஆனால், இன்னும் சில நிறுவனங்களில் ஓப்பனிங் சூப்பராக இருக்கும், வேலை பார்க்கும் போதும் நன்றாய் இருக்கும். தப்பித் தவறி வெளியே போக நீங்களாய் முடிவெடுத்தால் அவ்வளவுதான் உங்கள் பினிஷிங் சரியிருக்காது. அதே அவர்கள் உங்களை வெளியே அனுப்ப நினைத்தால் பினிஷிங் பட்டையைக் கிளப்பிவிடும்.
இன்னும், சில நிறுவனங்களில் உள்ளே சந்தோசமாய்ப் போய்விடலாம். ஆனால் அங்கே பணியாற்றுவதற்குப் பதில் நரகத்தில் இரண்டு ஷிப்ட் தண்டனை வாங்கி வந்தாலும் இதற்குப் பரவாயில்லை எனத் தோன்றும்.
ஒரு விசயம் என்னவென்றால், எனக்குத் தெரிந்து எந்த நிறுவனத்திலும் ஓப்பனிங்கில் அதாவது உள்ளே நுழைகையில் எந்த குழப்பமும் இருக்காது… வரவேற்பு பலமாகவே இருக்கும். இதற்கு காரணம், தனது வேலை ஆள் பிடிப்பது மட்டும்தான் என எண்ணிக் கொள்ளும் ம.வ.மே.க்கள்தான். மேலே சொன்ன வொர்க்கிங், பினிஷிங் குழப்பங்களுக்கும் சாட்சாத் அந்த எண்ணம்தான் காரணம்.
ஒரு ம.வ.மே. ஒருவர் என்னிடம் சொன்னார். “ சார் யார் போனாலும் கம்பெனி நடக்கும் சார்….. கூரை மேல் சோற்றைப் போட்டால் ஆயிரம் காக்கா…”
உண்மைதான் யார் போனாலும், இருந்தாலும் கம்பெனி நடக்கும். ஆனால் அது எந்தப் பாதையில்…?
ஒரே ஒரு உண்மையான கீழ் மட்டப் பணியாளனை இழந்து விட்டு ஆயிரம் மேலாளர்களை நியமித்தாலும், நிறுவனத்திற்குத் தேவையான வேலை உண்மையாய் நடந்து முடியாது.
வெளியில் ஆயிரம் காக்கைகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையில் உள்ளிருக்கும் குயில்களின் குரல்வளையை நெறிக்க ஆரம்பிக்கும் சில ம.வ.மே. க்களுக்கு இந்த உண்மை புரிவதில்லை.
மனதினைக் காயப்படுத்தி வெளியே அனுப்பும் ஒவ்வொரு உண்மையான பணியாளனும், அவனைச் சார்ந்த ஆயிரம் பேரிடம் கண்டிப்பாய்ப் பகிர்வான். ஆயிரம், இரண்டாயிரம் ஆகக்கூடும் காலப்போக்கில் லட்சமாய் ஆகக்கூடும்…. அப்போது வாழையிலை விருந்து வைத்தாலும் காக்கைகள் கூட வராது.
அன்பினை விதைத்தால் அன்பினை அறுவடை செய்யலாம். மாறாக வெருப்பினை விதைத்தால்…..
ஒரு தவத்தினைப் போல், அதன் அருமை உணர்ந்து மனித வளப் பணியினைச் செய்யும் சில சிறப்பான மனித வள மேலாளர்களுக்கு இது மன வருத்தம் தரக்கூடும். ஆனால் உங்கள் சக பணியாளர்களுக்கும் அன்பினை விதைக்கக் கற்றுக் கொடுங்கள்….!
-நா.கோபாலகிருஷ்ணன்
மனதினைக் காயப்படுத்தி வெளியே அனுப்பும் ஒவ்வொரு உண்மையான பணியாளனும், அவனைச் சார்ந்த ஆயிரம் பேரிடம் கண்டிப்பாய்ப் பகிர்வான். ஆயிரம், இரண்டாயிரம் ஆகக்கூடும் காலப்போக்கில் லட்சமாய் ஆகக்கூடும்…. அப்போது வாழையிலை விருந்து வைத்தாலும் காக்கைகள் கூட வராது.
ReplyDeleteஇதனை வார்த்தை மாறாமல் அப்படியே நான் பணி புரிந்த சமயத்தில் ஒரு முதலாளியிடம் சொல்லி உள்ளேன். சிறப்பான பதிவு.
நன்றி அண்ணா.... எல்லா பெருநிறுவனங்களும் இந்தப் பாதையில்தான் பயணிக்கின்றன.
Delete