இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 5

ஐந்து

நண்பா நலமா….?

நேற்று உயிரளபெடை பற்றிப் பார்த்தோம், இறுதியில் அது மூன்று வகைப்படும் எனச்சொன்னேன் ஞாபகம் உள்ளதா.

அந்த மூன்று வகைகளைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.

அவை,

1.செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)

2.இன்னிசை அளபெடை

3.சொல்லிசை அளபெடை

மலைக்காதே…….. இவை என்னென்ன என்று சுருங்கப்பார்த்துவிடலாம்.

ஒரு செய்யுளில் இசை குறையும்போது இசையை நிறைக்க வருவது செய்யுளிசை அளபெடை. (முதலில் பார்த்த பொதுவான அளபெடை விதியினை ஒத்து உள்ளதா…. ஆமாம் சரிதான்…. நேரடியான அளபெடை இது)

ஓசை குறையாவிட்டாலும், இனிய ஓசை வேண்டி அளபெடுத்து வருவது இன்னிசை அளபெடை ஆகும். (அளபெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாதபோதும் ஓசை இன்னும் இனிமையாக வேண்டும் என அளபெடுக்கவைப்பது)

ஒரு பெயர்ச்சொல் அளபெடுத்து பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ வருவது சொல்லிசை அளபெடை ஆகும்.

“நல்லாத்தானா போய்ட்டு இருந்துச்சு….. இப்போ எச்சம் அது இதுன்னு சொல்றியேப்பா”என பயப்படாதே.

ஒரு செயலைக் குறிக்கும் சொல்லான வினைச்சொல் எச்சப்பொருளில் நிற்பது எச்சவினை எனப்படும்.  

உதாரணமாக “படித்த” என்ற வார்த்தையைப் பார்ப்போம்.

படித்தான் என்று சொன்னால், வினை முடிந்து போயிருக்கும். படித்த என்று சொன்னால், இன்னும் ஏதேனும் ஒரு வார்த்தை அதனுடன் சேர்த்தால்தான் அர்த்தம் நிறைவாகும்.

படித்த பையன், படித்த பெண், படித்த மாணவன் … இப்படி.

இவ்வாறு ஒரு முடிவுறாத சொல்லை ஒரு பெயரினைக் கொண்டு நிறைவு செய்யும்போது அது பெயரெச்சம் என்றும், ஒரு வினையினைக் கொண்டு நிறைவு செய்யும்போது வினையெச்சம் ( உதாரணமாக ஓடி வந்தான், பாடி முடித்தான் ) என்றும் அழைக்கப்படும்.

சரியா …. இப்போது மீண்டும் சொல்லிசை அளபெடை பற்றிப்பார்.  

“ஒரு பெயர்ச்சொல் அளபெடுத்து பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ வருவது சொல்லிசை அளபெடை ஆகும்.”

புரிந்து கொண்டாயா….?

அடுத்ததாக ஒற்றளபெடை.

‘செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு மெய்யெழுத்து அளபெடுத்து ஒலிப்பது ஒற்றளபெடை ஆகும்”

ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யழுத்துக்கள், மற்றும் ஃ என்ற ஒரு ஆய்த எழுத்து ஆகமொத்தம் 11 எழுத்துக்கள் ஒரு குறிலை அடுத்தும் அல்லது இருகுறிலை அடுத்தும் செய்யுளின் இனிய ஓசைக்காக அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

அதாவது இந்தப் பதினோரு எழுத்துக்களும் ஒரு குறில் எழுத்தினை அடுத்து வரும்போதோ அல்லது இரண்டு குறில் எழுத்தினை அடுத்து வரும்போதோ அளபெடுக்கும்.

ஒற்றளபெடையில் அளபெடுப்பதை வரிவடிவத்தில் குறிக்க, அதே மெய்யெழுத்து மீண்டும் ( உதாரணமாக ‘எங்ங்கிறைவனுளன்’, ‘வெஃஃகுவார்’ ) எழுதப்படும்.

என்ன நண்பா…. அளபெடை என்றால் என்ன… உயிரளபெடை, ஒற்றளபெடை என்றால் என்ன எனத் தெரிந்துகொண்டாயா….?

நாளை மீதம் உள்ள ஆறு சார்பெழுத்துக்களைத் தொடரலாம்….. காத்திரு……



  


Comments

  1. Replies
    1. நன்றி ஐயா..... ஏதேனும் பிழைகளிருப்பினும் சுட்டிக்காட்டுங்கள். நன்றி

      Delete
  2. அருமையான விளக்கம் சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு