இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் - நாள் 3

மூன்று

என்ன நண்பா சுகமா….. நேற்றைக்கெல்லாம் நாம் கற்றுக்கொண்டதைஅசை போட்டாயா…. இல்லை உயிரளபெடை, ஒற்றளபெடை என  இப்பவே கண்ணைக் கட்டுதே என்று புலம்பிக் கொண்டிருந்தாயா….

ஒன்றும் கடினம் இல்லை நண்பா…. மிகச்சுலபம்தான்.

முதன்மை எழுத்துக்கள் என்பவை குடும்பத்தில் உள்ள தலைவன் / தலைவி மாதிரி. அதாவது சுயமாய்ச் சம்பாதிப்பவர்கள்.

சார்பு எழுத்துக்கள் என்பவை அவர்களைச் சார்ந்து வாழும் குழந்தைகள் அல்லது மற்ற உறுப்பினர்கள் போன்றவர்கள்.

புரிகின்றதா….

இன்னும் சொல்கிறேன் கேள்.

முதன்மை எழுத்துக்கள் என்பவை தனி ஒலிக்குறிப்பு உடையவை. சார்பு எழுத்துக்கள் என்பவை முதன்மை எழுத்துக்களின் ஒலியின் அடிப்படையில் இயங்குபவை மற்றும் தனித்து இயங்காதவை.

சரி, 247 எழுத்துக்களின் எண்ணிக்கையின் போது முதன்மை எழுத்துக்கள் முப்பதையும் ( உயிர் – 12மற்றும் மெய் 18) , சார்பெழுத்துக்களில் உயிர்மெய் எழுத்தினையும், ஆய்த எழுத்தினையும் மட்டும் ஏன் எடுத்துக்கொள்கிறோம் என்பதுதானே உன் குழப்பம்.

உனக்கு எப்படித் தெரியும் எனக்கேட்காதே…. உன் முகத்தில் தெரிகிறது.

247 எண்ணிக்கை என்பது வரி வடிவங்கள். நீ சொல்வது போல் சார்பெழுத்துக்களில் உயிர்மெய், ஆய்தம் தவிர மற்ற எதற்கும் தனித்துவமான வரி வடிவம் இல்லை. அவை முதன்மை எழுத்துக்களின் வரி வடிவத்தில்தான் வடிக்கப்படுகின்றன.

ஒலி வேறு … வடிவம் வேறு…..

போதுமா…… இனிக் குழப்பிக்கொள்ளாதே…!

முதன்மை எழுத்துக்களில் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் உள்ளன எனப்பார்த்தோம்.

இப்போது அவற்றின் உட்பிரிவினைப் பார்ப்போம்

 உயிர் எழுத்தானது குறில், நெடில் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

குறில் என்றால் குறுகிய ஓசையும், நெடில் என்றால் நெடிய ஓசையும் உடையது.

குறில் எழுத்துக்கள் (5) – அ, இ, உ, எ, ஒ

நெடில் எழுத்துக்கள் (7) – ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ

அடுத்ததாக மெய்யெழுத்து மூன்று விதமாகப் பிரிக்கப்படுகிறது.

வல்லினம் – க்,ச்,த்,ப்,ற்

மெல்லினம் – ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

இடையினம் – ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

வல்லினம் என்பது வலிமையான ஓசையும், மெல்லினம் மென்மையான ஓசையும், இடையினம் இரண்டுக்கும் இடையில் ஒலிக்கும் ஓசையும் உடையது.

புரிந்ததா….?

உயிர்மெய் எழுத்துப் பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். அதில் தெரிந்து கொள்ள வேண்டியது இதனையும் உயிர்மெய்க்குறில், உயிர்மெய் நெடில் என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்பதுதான்.

மெய்யோடு உயிர்க்குறில் எழுத்து ( உதாரணமாக “க்” + “அ” = க ) சேர்ந்தால் உயிர்மெய்க்குறில்  பிறக்கும்

மெய்யோடு உயிர்நெடில் எழுத்து ( உதாரணமாக “க்” + “ஆ” = கா ) சேர்ந்தால் உயிர்மெய்நெடில் பிறக்கும்

சரியா….?

ஆய்தஎழுத்து பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இது எப்போதும் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதது. ( வேங்கை மகன் ஒத்தையில நின்னா உபயோகம் இல்லை) பிற எழுத்துக்களுடன் சேர்ந்துதான் இயங்கும்.

அடுத்ததாக சார்பெழுத்துக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சுருக்கமாகப் பார்க்கும் முன் ஒரு சிறிய நினைவூட்டல் செய்துகொள்ளலாமா

பின்வரும் படத்தைப் பார்….

 




மூன்று நாட்களாய் நாம் கற்றது அத்தனையும் ஞாபகத்திற்கு வந்துவிட்டதா…?!

அவ்வளவுதான் …. நாளை சார்பெழுத்துக்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துவிடலாம் ….. காத்திரு ….


- நா.கோபாலகிருஷ்ணன்


Comments

  1. படிக்க ஆரம்பித்துள்ளேன். எளிதாக உள்ளது. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எளிமையான அருமையான விளக்கம் ... தொடருங்கள் சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு