உணவும் உணர்வும்
உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டதா ….. என்னைக் கேட்டால் ஆமாம் என்பேன். இந்த உணவைத்தான் நீ உண்ணத் தகுதியுடையவன், உண்ண வேண்டியவன் எனத் திணிப்பதுவும் வன்முறைதான்….. சில நேரங்களில் சில சம்பவங்கள் நிகழும்போது அது நமக்குப் பல விசயங்களைச் சொல்லிப்போய்விடுகின்றது. 2010 அல்லது 2011ஆம் வருடம் என்று நினைக்கிறேன். எனது பணி நிமித்தமாக அடிக்கடி விழுப்புரம் சென்று தங்குவது வழக்கம். அப்போது விழுப்புரத்தில் எனக்கு இருந்த பெரும் பிரச்சினை சாப்பாடுதான். ஒன்றிரண்டு கடைகள் தவிர எங்கும் சாப்பிட முடியாது. பெரும்பாலும் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்த ஒரு உணவகத்தில்தான் ( விலை கொஞ்சம் அதிகமென்றாலும்) சாப்பிடுவேன். ஒருநாள் காலை அந்த உணவகத்தின் சிறப்பான வெண்பொங்கலை ருசித்துக்கொண்டிருந்தேன். எனது எதிர் இருக்கையில் ஒரு நடுத்தர வயதுடைய தம்பதியினர் வந்து உட்கார்ந்தார்கள். கொஞ்சம் கிராமிய சாயல் கொண்ட மனிதர்கள். உட்கார்ந்தவுடன் கணவர் மனைவியிடம் இட்லி சாப்பிட்டுக்கலாம் என்றார். சரியென்று தலையசைத்த அந்தப் பெண்மணி நான் பொங்கல் சாப்பிடுவதைப் பார்த்தவர் மெதுவாகக் கணவரிடம் பொங்கல் வேண்டும் எ...