சிறுவாடு 5

 


நீங்கள் இருக்கும் பகுதியில் சிறிய அளவில் ஒரு காய்கறிக் கடையினை நீங்கள் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்கின்றீர்கள். 


என்ன செய்வீர்கள்..?


ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு போய் மார்க்கெட்டில் கிடைக்கும் எல்லா காய்கறிகளையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து விற்கப் பார்ப்பீர்களா…?


அப்படிச் செய்தால் நீங்கள் போட்ட பணத்தினை திரும்ப எடுக்க முடியுமா…? 


சந்தேகம்தான் இல்லையா…


எந்த ஒரு விசயத்தினையும் பிளான் பண்ணி பண்ணணும்னு தலைவர் சொல்லியிருக்கார்ல…. அதுனால உட்காந்து பிளான் பண்ணுவீங்க…


 முதல் விசயம் நம் கையில் எவ்வளவு பணம் இருக்கு…. இரண்டாவது விசயம் இடம்…. மூணாவது விசயம் நம் பகுதியில் இருக்கும் மக்கள் என்னென்ன காய்கறிகள் வாங்குவார்கள்…. தோராயமாக ஒவ்வொரு காய்கறியும் எவ்வளவு கிலோ விற்கும்…. 


இதெல்லாம்தானே அடிப்படையான விசயம்.


இதுவும் பங்குச்சந்தையும் ஒண்ணுதாங்க…


முதலில் நீங்கள் எவ்வளவு முதலீடு பண்ணப் போறீங்க…. காய்கறிக்கடையில் எல்லாப் பணத்தையும் போட்டு விட்டு தினசரித் தேவைக்கு கையில் இல்லாமல் திண்டாட மாட்டீர்கள் இல்லையா… அது போல இங்கும் உங்கள் அனைத்து செலவு, சேமிப்புகள் எல்லாம் போக மீதியுள்ளதை முதலீடு செய்யவேண்டும்.


இரண்டாவது இடம்…. எந்த ஸ்டாக் மார்க்கெட்டில் எந்த புரோக்கர் ( இப்போது ஆன்லைன் ஆப்கள்) மூலம் வாங்கப்போகிறோம் என்பதுதான் இங்கே இடம் ( இதனைப் பற்றி இன்னும் விரிவாகப் பின்னால் பேசலாம்)


மூன்றாவது என்ன வாங்கப்போகிறீர்கள்…. அங்கே விதம் விதமான காய்கறிகள் … இங்கே விதம்விதமான நிறுவனங்களின் பங்குகள் …


அவ்வளவுதான்….


வெங்காயமும், தக்காளியும் கொஞ்சம் நன்றாக விற்கும். அப்படியானால் அதை எவ்வளவு விற்க முடியுமோ அவ்வளவு வாங்குவீர்கள்…. அதற்காகக் கையில் உள்ள எல்லாப் பணத்திற்கும் அதையே வாங்கினால் என்ன ஆவது…. அது போலத்தான் எவ்வளவுதான் நல்ல பங்குகள் என நீங்கள் முடிவு செய்து வைத்திருந்தாலும் மொத்தப் பணத்தினையும் அதில் முடக்கக்கூடாது… 


வெங்காயம் மொத்த விலை கிலோ முப்பதுக்கு வாங்குகிறீர்கள்…. உங்கள் கடையில் வந்து 40 ரூபாய்க்கு விற்க பார்க்கின்றீர்கள்…. ஆனால் பக்கத்து எரியா கடைகளில் 35 ரூபாய்க்கு விற்றால் உங்களிடம் யார் வாங்க வருவார்கள்…. அப்படியானால் மார்க்கெட்டுக்குத் தகுந்தார்போல் விற்றாகவேண்டும்…. பங்குகளும் அப்படித்தான்…


நீங்கள் மார்க்கெட்டில் நுழையும்போது வெங்காயம் சாப்பிட்டால் கடவுள் காட்சி தருவார் என எவனோ புரளியினைக் கிளப்பிவிட வெங்காயம் கிலோ 50 ஆகிறது. நீங்களும் அடித்துப் பிடித்து அதனை வாங்கி வந்து உங்கள் கடைக்கு வந்து பார்த்தால்… அது வெறும் புரளி என்று தெரிந்து போகிறது. இப்போது வெங்காயம் உங்கள் பகுதிக்கடைகளில் கிலோ ரூ35க்கு விற்றால் நீங்களும் அதற்குத்தான் விற்க முடியும். வேண்டுமானால் ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்து விலையேறுகிறதா எனப் பார்க்கலாம். விலையேறாது என உறுதி செய்தால் விற்றுத்தான் ஆகவேண்டும். சில நேரங்களில் பங்குச்சந்தையில் இப்படித்தான் கன்னாபின்னவென்று சில பங்குகள் விலையேறும். என்ன ஏதேன்று விசாரிக்காமல் அடித்து பிடித்து வாங்கிப்போட்டால் பிரச்சினைதான்….. 


( இப்படித்தான் சென்ற புதன்கிழமை அதானிபவர் என்ற நிறுவனத்தின் பங்குகள் 152 ரூபாயிலிருந்து 164 வரை போனது… வெள்ளிக்கிழமை ஒரு சில பிரச்சினைகளால் அதன் மதிப்பு குறைய ஆரம்பித்து இன்றக்கு 127 வரை போய்விட்டது…. இதனையும் தற்சமயம் வாங்க ஆளில்லை …. )


இப்போது இன்னும் ஒரு பிரச்சினை வருகின்றது. வெங்காயம் சாப்பிட்டால் ஒரு வைரஸ் தாக்குகிறது எனச் செய்தி பரவுகின்றது. என்ன ஆகும்…? வெங்காய விலை குறைய ஆரம்பிக்கும்….. நீங்கள் இதுவும் புரளி என்று மக்கள் அறிந்து கொள்வார்கள் எனக் காத்திருக்கலாம்…. ஒரு வேளை அந்த செய்தி உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் எல்லாமே போய்விடும் என்ற பயமும் வரும். என்ன செய்வீர்கள்…. சரிப்பா கிலோ 25க்கு கீழே போகக்கூடாது… 25 ரூபாய் வரைக் காத்திருக்கலாம் என்று எண்ணுவீர்கள் அல்லவா… பங்கிலும் அப்படித்தான் ( இதனை ஸ்டாப் லாஸ் என்பார்கள்….)


சரி வெங்காயம் 30 ரூபாய்க்கு வாங்கி வந்து விடுகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது உங்கள் பகுதி கடைகளில் இன்றோடு வெங்காயம் தீர்ந்து விடும். நாளை கிடைக்காது. இன்றைக்கு 35 ரூபாய்க்கு விற்கும் வெங்காயம் நாளைக்கு 40 ரூபாய்க்கு விற்க முடியும் என உறுதி செய்தால் என்ன செய்வீர்கள்…? இன்றைக்குக் கொஞ்சம் விற்றுவிட்டு நாளைக்கு மீதத்தினை விற்கலாம் எனப் பொறுமை காப்பீர்கள் அல்லவா…. பங்கிலும் அப்படித்தான்….


இப்படித்தான் நண்பர்களே காய்கறி வியாபாரத்தில் நீங்கள் என்னென்ன செய்கின்றீர்களோ…. இந்த வியாபாரத்தில் என்னென்ன எதிர்பாராத பிரச்சினைகள் வருகின்றதோ அது எல்லாமே பங்குச்சந்தைக்கும் பொருந்தும்.


காய்கறி என்பது நமக்கு நன்றாகத் தெரியும் …. அதனால் லாபம் செய்ய முடியும். 


பங்குச்சந்தையும் நமக்கு நன்றாகத் தெரியுமானால்…. லாபம் பெற முயற்சிக்கலாம்.


காய்கறியினைப் போல பங்குகளையும் வியாபாரம் செய்யக் கற்றுக்கொள்வோம்.


சித்திரமும் கைப்பழக்கம்தானே….


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27