சிறுவாடு 6

 சிறுவாடு 6


இந்த தொடர் பதிவுகளை வாசித்து வரும் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார்.


உரையாடலின் முக்கிய சாராம்சம், முதலீடு பற்றிப் பேசுவதாகச் சொல்லி பங்குச்சந்தை குறித்துப் பேசிக்கொண்டிருப்பது பற்றியும், முதலீட்டின் அவசியம் பற்றியும், எனது சொந்த அனுபவத்தினைப் பற்றியும் இருந்தது.


இந்தத் தொடர் பதிவுகளின் நோக்கம் என்பது வெவ்வேறு விதமான சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பற்றி பேசுவதுதான்…


பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிதல் இல்லாதவர்களும் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும், அதுவும் ஒரு முக்கியமான முதலீட்டு வழி என்பதனையும் தெரிந்து கொள்ளல் வேண்டும் என்பதற்காகவே அதனைப் பற்றி முதலில் பேச ஆரம்பித்தேன்.  ( பங்குசந்தை பற்றிய விரிவான நூலினைத் தனியாக வெளியிடுகிறேன்) 


இதனைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி ( ஆம்…. அதனைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்..) இன்னும் இன்னுமான முதலீட்டு முறைகளையும் பற்றிப் பேசலாம்…. 


அது மட்டுமல்ல, நம்மையறியாது நம் பாக்கெட்டிலிருந்து சில்லறை சில்லறையாக வெளியேறும் ( திருடப்படும் என்று கூடச் சொல்லலாம்) நம் பணத்தினையும் எப்படிப் பாதுகாப்பது என்பதனையும் கூட தெரிந்து கொள்ளலாம். 


சிறுவாடு என்னும் இந்தத் தலைப்பில் வரும் / வரப்போகும் பதிவுகள் அனைத்துமே பண நிர்வாகம் மற்றும் நேர் வழியில் பொருள் செய்தல்  குறித்த எனது அடுத்த புத்தகத்திற்காகச் சேகரித்த பல முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் சேமிப்புத் திட்டங்கள் குறித்த சில குறிப்புகள்தான். 


திடீர் என்று இதனைச் செய்ய சில காரணமும் உண்டு….

2002 ஆம் வருடத்தில் நான் என்னுடைய முதல் பணியில் சேர்ந்தபோது எனது ஊதியம் ரூ5000 ம்தான். ஆனால் மாதம் ரூ7000 செலவு செய்தேன் ( பெரிதாய் ஒன்றும் இல்லை … உணவு, புத்தகம், திரைப்படங்கள் மட்டும்தான்..) பின்னர் 2003 ஆம் வருடம் சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு புயலின் பின்னே பணத் தேவைகள் அதிகரித்தபின், அப்போது வாங்கிக்கொண்டிருந்த மாத சம்பளம் ரூ10000  போதவில்லை. மறைமுகமாய் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும், அனைத்துப் புலன்களையும் அடக்கிக்கொண்டு நேர்வழியில் பொருள் செய்யும் வழிமுறைகள் தேடினேன். அப்போது நிறைய முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான நிறைய வழிகளைக் கண்டறிந்தேன்…. பயணித்தேன் …பல வேளைகளில் எனது பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவை கைகொடுத்தது. சில வேளைகளில் கைகளையும் சுட்டது. 


ஒரு கட்டத்தில் ஐந்து இலக்க வருமானம், பொருளாதாரப் பிரச்சினைகள்  இல்லாத வாழ்க்கை என்று வந்தபோது சேமிப்பு மற்றும் முதலீடுகள் குறித்த தேடுதல் குறைந்து ஒரு சமயத்தில் சேமிப்பு  மற்றும் என்றால் தங்கம் மற்றும் இடங்கள்தான் என்ற எண்ணத்திற்கும் வந்தாயிற்று. 


சென்ற முழு அடைப்பின் போது, நமது சுய தவறுகளை யோசிக்க நீண்ட நேரம் கிடைத்தபோதுதான் இது குறித்து யோசிக்க ஆரம்பித்து, மீண்டும் எண்ண ஓட்டங்களை மாற்றிக்கொண்டு முதலீடுகள் குறித்த தேடுதல்களை மீண்டும் ஆரம்பித்தேன்.


பெரும்பாலான மக்களின் மனநிலை என்பது இப்படித்தான் இருக்கக் கூடும். பணத்தேவைகள் இல்லாத போது சேமிப்பின் அவசியத்தினை யோசிப்பதில்லை.  ஆனால் முதலீடு மற்றும் சேமிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, அதனைப் பற்றிப் பேச நேரம் காலம் என்பதெல்லாம் கிடையாது. 


இப்போது பங்குச்சந்தைக்கு வருவோம்….


காய்கறிகளை மார்க்கெட்டில் வாங்கலாம்…. பங்குகளை எங்கே வாங்குவது … பங்குகளையும் மார்க்கெட்டில்தான் வாங்கவேண்டும். அதற்கென உள்ள மார்க்கெட்டில்….


இந்தியாவினைப் பொருத்தவரை இரண்டு பெரிய பங்குச்சந்தைகள் உள்ளன. ஒன்று தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange சுருக்கமாக NSE), மற்றொன்று மும்பை பங்குச்சந்தை  (Bombay Stock Exchange சுருக்கமாக BSE).


பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள் இதில் ஏதோ ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ இணைந்து பட்டியலில் இடம்பெற்று இருக்கும். 


பொதுவாக NSE ல் பங்கு வாங்கி விற்பவர்கள் அதிகமாக இருப்பதால் புதிதாய் வருபவர்கள் அதனையே தேர்வு செய்வார்கள். 


சரி இந்த மார்க்கெட்டிற்கு எப்படிப்போய் பங்குகளை வாங்குவது…?


அதற்கு புரோக்கர்கள் இருக்கிறார்கள். முன் காலத்தில் பங்குகளின் விபரம் காகிதத்தில் தரப்படும். எனவே புரோக்கர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசியிலே தகவல் கொடுத்து பங்குகளை வாங்குவதனையும் விற்பதனையும் செய்யவேண்டும். 

இப்போதெல்லாம் டிஜிட்டல் மயம்தான் என்பதால், ஆன்லைனிலேயே வாங்குவது விற்பதுமாய் இன்னும் சுலபமாகிவிட்டது.


அதற்காக, ஜெரோதா (ZERODHA) , ஏஞ்சல் புரோக்கிங் (ANGEL BROCKING), அப்ஸ்டாக்ஸ் (UPSTOX), ஐசிஐசிஐ டைரக்ட் (ICICI DIRECT) போன்ற பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. 


இந்த நிறுவனங்களின் மூலம் நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்யலாம்.


அதற்கு முதலில் உங்கள் பெயரில் ஒரு டீமேட் அக்கவுண்ட் திறக்கவேண்டும்.


அது என்ன டீமேட் அக்கவுண்ட்….?


பார்க்கலாம்….


-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27