சிறுவாடு - 2

  ஒரு சில வருடம் முன்பு நானும் நண்பர்கள் சிலரும், ஒரு கடையில் மாலை வேளைகளில் வழக்கமாய் வடை சாப்பிடுவோம். அற்புதமான சுவையில் இருக்கும். ஒரு வடையில் ஆரம்பித்தது, அதன் சுவைக்கு அடிமையாகி ஆளுக்கு மூன்று , நான்கு எனக் கணக்கில்லாமல் போக ஆரம்பித்தது. 


ஒரு கட்டத்தில் அது உடம்பினைக் கெடுக்கும் அளவிற்குப் போய்விட, அன்றிலிருந்து வடை சாப்பிடுவதை விட்டு விடலாம் என முடிவு செய்தோம்.


நண்பர்களில் ஒருவர்  இதனால் அவருக்கு ஒரு மாதத்திற்கு 300 ரூபாயாவது மிச்சம் ஆகிறது என்றார்.


நான் சிரித்துக் கொண்டே ஆமாம் ஆமாம் இதனைக் கொண்டு பங்குச் சந்தையில் போடுங்கள் எனக் கிண்டலாகச் சொன்னேன்.


அவ்வளவுதான் பிடித்துக் கொண்டார்.


நண்பா எனக்கும் பங்கு வர்த்தகம் செய்ய ஆசை... ஆனால் எல்லோரும் அது சூதாட்டம் அது இதென்று பயமுறுத்தி அதைச் செய்யவிடாமலே ஆக்கி விட்டார்கள். உனக்கு அது பற்றித் தெரியும் அல்லவா, எனக்குச்  சொல்லிக்கொடு என்று அனத்த ஆரம்பித்து விட்டார். 


ஆனால், நான் சில தனிப்பட்ட காரணத்தினால் அப்போது அதிலிருந்து வெளியில் வந்து வெகு காலம் ஆகியிருந்தது.


வேறு வழியின்றி, அவருக்காகச் சில அடிப்படை விசயங்களைச் சொல்லிக் கொடுத்து, ஒரு சுபயோக சுபதினத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்து சில பங்குகளை வாங்கச் சொல்லிக் கொடுத்தேன். அவரும் முட்டி மோத ஆரம்பித்தார்.


பின்னர், பணி நிமித்தமாய் இருவரும் பிரிந்து போய், சென்ற வருடக் கடைசியில்தான் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.


மனிதர் இப்போது பங்குச்சந்தை பற்றி எனக்கு வகுப்பெடுத்தார்.


அவர் சொன்ன விசயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது.


ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் பங்குகளில் முதலீடு செய்கிறாராம். அதிகமாக சில சமயம் 10000.  மற்ற முதலீடுகள் என்ன இருந்தாலும் இது தனி.


அதில் இருந்து, இன்றைக்குக் கிட்டத்தட்ட நான்கு லட்சத்திற்குப் பக்கம் சேமித்துவிட்டார். 


எல்லாம் நீ ஆரம்பிச்சு வச்சது நண்பா என்றார்.


யோவ் நான் புள்ளிதான வெச்சேன். நீ கோலமே போட்டு விட்டாயே என்றேன்.


அதாகப்பட்டது மக்களே, பொறுமையும் கொஞ்சம் பு த்திசாலித்தனமும் இருந்தால், நம் சிறு பணத்தினையும் நேர்மையான முறையில் வெகுவாய்ப் பெருக்க நிறைய வழிகள் கொட்டிக் கிடக்கின்றன.


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

  1. உண்மைதான்.
    சேமிப்பு எனபது சிறு சிறு தொகையாக இருக்கும் ஆனால் நாளடைவில் அது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27