சிறுவாடு 4

 

பண முதலீட்டினை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் எல்லோரது மனதிலும் எழும் வார்த்தை பங்குச்சந்தை.


அது ஒரு சூதாட்டம் என்று பயமுறுத்தும் சிலரிலிருந்து, நான்லாம் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பார்க்குறேன் என்று சொல்லித்திரியும் சிலர் வரை, நம்மை ஒரு குழப்பத்திலேயே வைத்திருக்கிறார்கள்.


என்னோடு பணி புரிந்த நண்பர் ஒருவர் கேட்டார்…. யப்பா அது என்னவோ பெட்டி பெட்டியா ஒரு வரைபடம் போட்டு வச்சுருக்கானுகளே… அது என்னன்னு புரிஞ்சுகிட்டா ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்ல …. எனக்கு அத மட்டும் சொல்லிக்கொடு. 


முதன்முதலில் பங்குச்சந்தை பற்றி எனது நண்பர் ஸ்ரீதர் எனக்குச் சொல்லிக்கொடுத்தபோது கூட நானும் அப்படித்தான் யோசித்தேன். ஒரு நாளைக்கு ஆயிரம் சம்பாதிக்கணும். 


நான் என் கையில் இருக்க நகையெல்லாம் அடமானம் வெச்சு பங்குச்சந்தையில் போடறேன்…. ஒரு வருசத்துல இரட்டிப்பாக்கிட மாட்டேனா… ?...... என் வேலைப்பளு தாங்க முடியல, வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரம் டிரேடிங்க் பண்ணுனா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காதா…?.... நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்னு சொல்ற அளவுக்குப் பொறுமை இல்லாதவரா…? உட்கார்ந்து ஒவ்வொண்ணா ஆராய முடியாது.. குருட்டாம்போக்கில் அடிப்போம் என யோசிப்பவரா…? … தயவு செய்து பங்குச்சந்தை பக்கம் ஒதுங்காதீர். 


பங்குச்சந்தையில் பணம் பண்ண நிறைய வாய்ப்புகள் இருப்பது போலவே, பணத்தினைத் தொலைக்கவும் வாய்ப்புகள் நிறைய உண்டு. 


பணம் செய்யவும், தொலைக்காமல் இருக்கவும் நமக்கு சில விசயங்கள் கண்டிப்பாய் வேண்டும்.


1) பங்குச்சந்தை பற்றிய அறிவு

2) வாங்கும் பங்குகளுடைய நிறுவனம் பற்றிய தெளிவு

3) மிக முக்கியமாய் பொறுமை.


எல்லாம் சரிதான் ஐயா, பங்குச்சந்தைன்னா என்னன்னு முதல்ல சொல்லுங்க….


பங்குச்சந்தை என்றால் என்னவென்று தெரிந்துகொள்வது பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை. 


உங்கள் கையிலிருந்து  முதலீடு போட்டு நீங்கள் ஒரு வியாபாரம் ஆரம்பிக்கின்றீர்கள். நீங்கள்தான் அதன் முதலாளி. ஆங்கிலத்தில் அதனை proprietorship என்பார்கள். 


நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து ஒரு வியாபாரம் செய்யும்போது அதனை partnership என்பார்கள்.


உங்கள் வியாபாரம் பெருகியவுடன், உங்கள் வியாபார நிறுவனத்தினை கம்பெனி சட்டத்தின் படி லிமிடேட் கம்பெனியாகப் பதிவு செய்து விட்டால் உங்கள் கம்பெனி லிமிடேட் கம்பெனி ஆகின்றது. 


சரி லிமிடேட் கம்பெனிக்கும் proprietorship க்கும் என்ன வித்தியாசம். 


அடிப்படையாய் சொல்லவேண்டுமெனில், proprietorshipன் கடன்கள் அந்த முதலாளியினைச் சார்ந்தவை. 


லிமிடேட் கம்பெனியின் கடன்கள் கம்பெனியைச் சார்ந்தவை. 


கம்பெனி பற்றிய விபரங்களை இதற்குமேல் இப்போது போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம். நமக்குத் தேவையான விசயத்திற்குப் போவோம்.


ஒரு லிமிடேட் கம்பெனி செபி என்றழைக்கப்படும் SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA வில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் பங்குகளை வெளியிடலாம். 


அது என்ன பங்குகள் …?


ஒன்றுமில்லை. இப்போது ஒரு நிறுவனம் 10 கோடி ரூபாய் முதலீட்டினில் வியாபாரம் செய்கின்றது. அடுத்ததாக இன்னும் ஒரு 5 கோடி ரூபாய்க்குத் தனது வியாபாரத்தினை விரிவு செய்ய நினைக்கின்றது. 


இப்போது அந்தப் பணத்தினைத் திரட்டுவதற்காக அது பொது மக்களிடம் வருகின்றது. உன்னால் முடிந்த பணத்தினைக் கொடு நீயும் என் வியாபாரத்தில் பங்காளி ஆகிக்கொள் என்றழைக்கிறது. அதற்காக தனது நிறுவனத்தின் பங்குகளை வெளியிடுகிறது. 


பொதுவாக ஒரு பங்கின் முகமதிப்பு என்பது 10 ரூபாய் ( முகமதிப்பு என்றால் என்னவென்று பின்னால் பார்ப்போம்) அதன் அடிப்படையில் 5 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐம்பது லட்சம் பங்குகள் வெளியிடும். அது IPO (INITIAL PUBLIC OFFER) எனப்படும். 


அப்படியானால் ஒரு பங்கு 10 ரூபாய்க்குத்தான் விற்கப்படுமா…. இல்லை அந்த நிறுவனத்தின் மதிப்பினைப் பொருத்து அதற்கு மேற்பட்ட விலையிலும் விற்கப்படும். இது குறித்தும் பின்னால் பார்க்கலாம். 


இப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம், ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான முதலீட்டினைப் பெறப் பங்குகள் வெளியிடுகின்றது. 


இந்தப்பங்குகளை நீங்கள் வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர் ஆகின்றீர்கள். அந்த நிறுவனத்தின் லாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும். அதனை டிவிடெண்ட் என்பார்கள். 


எனில், இந்த டிவிடெண்ட் மட்டும்தான் நமது வருமானமா …. இல்லை அந்த நிறுவனத்தின் மதிப்பு (அதாவது லாபம்) உயர உயர நீங்கள் வாங்கிய பங்கின் மதிப்பும் உயரும். அதுதான் நமது பங்கு முதலீட்டின் முக்கியமான வளர்ச்சி 


இவ்வளவுதான் அடிப்படையான விசயம். 


சரி இந்தப் பங்குகளை எங்கு எப்படி வாங்குவது…. எப்படி விற்பது….. 


பார்க்கலாம்….


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27