சிறுவாடு 3

 பணத்தினை நேர்மையான முறையில் பெருக்க நிறைய  வழிகள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொன்னேன்…..


என் நண்பர் ஒருவர் சொன்னார்…. நான் இரண்டு இன்சுயூரன்ஸ் பாலிசிகள் எடுத்துள்ளேன்… ஒரு லைப் இன்சுயூரன்ஸ் மற்றும் ஒரு டேர்ம் இன்சுயூரன்ஸ். போதாக்குறைக்கு ஒரு மெடிக்கல் இன்சுயூரன்ஸ் எடுத்துள்ளேன்… வேறு என்ன முதலீடு செய்ய வேண்டும் …?


இன்சுயூரன்ஸ் என்பது சேமிப்பு அல்லது முதலீடு என்று உங்களுக்கு யார் சாமி சொன்னார்கள் என்று கேட்டேன். 

உண்மையில் இன்சுயூரன்ஸ்  என்பது முதலீடு என்றுதான் இன்றைக்கும் நிறைய நண்பர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இன்சுயூரன்ஸ் என்பது நிச்சயமாய் முதலீடு கிடையாது. இன்சுயூரன்ஸ் ஒரு பெரிய கடல், அதனைப் பற்றி இன்னொரு பதிவினில் இன்னும் விபரமாய்ப் பேசுவோம்.


நான் ஏற்கனவே சொன்னபடி முதலீடு என்பது நம் பணத்தினைப் பெருக்கச்செய்வது.


சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸ் ஆப்பில் ‘வாரன் பஃபெட்’ சொன்னதாக ஒரு வாசகம் வந்தது, “நீ தூங்கும்போது உன் பணம் உனக்காகச் சம்பாதிக்க வில்லையென்றால், நீ சாகும்வரை உழைத்துக் கொண்டேதான் இருக்கவேண்டும்”


உண்மையான வார்த்தைகள். 


பொதுவாக நம் ஊரில் பணம் செய்வது பற்றிப் பேசினால், கொள்ளைக்காரன் போலத்தான் பார்ப்பார்கள்… பேராசைதான் பெரு நஷ்டமே ஒழிய ஆசைப்படுவதில் தப்பில்லை. 


நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நம் எதிர்காலத்திற்காகக் கொஞ்சம் முதலீடு செய்யப்போகிறோம். அந்த முதலீடு முடிந்த அளவு கொஞ்சம் அதிகமாக வளர்ந்தால் நல்லதுதானே… அதற்கான வழிமுறைகளை தேடி அறிந்து கொள்வதில் தப்பில்லை.


ஒரு உதாரணத்திற்கு நீங்கள் இந்த மாதத்திலிருந்து ரூ1000 மாதாமாதம் சேமிக்கலாம் என முடிவு செய்து, ஒரு உண்டியலில் போட ஆரம்பிக்கின்றீர்கள். இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ரூ24000 கிடைக்கும். அந்தப் பணம் உங்களுக்கு எதனையும் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. போட்ட பணம் உங்களுக்கு கிடைத்துவிட்டது அவ்வளவுதான். 


இந்த ஆயிரம் ரூபாயினை ஏதோ ஒரு வங்கியில் சிறுசேமிப்புத் திட்டத்தில் கட்டுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்றைய தேதிக்கு சராசரியாக 5.5% வட்டி தருகின்றனர். இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ரூ25416 கிடைக்கும். உங்கள் பணம் ரூ1416 னை உங்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.


அதே வேளையில், இந்த ஆயிரம் ரூபாயினை ஒரு நல்ல மியூச்சுவல் பண்டில் உள்ள எஸ்.ஐ.பி. (systematic investment plan) திட்டத்தில் மாதாமாதம் கட்டினால் என்ன ஆகும். இன்றைய முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சராசரியில் பார்த்தால் உங்களுக்குத் தோராயமாக ரூ27,243/ - கிடைக்கக்கூடும். உங்கள் பணம் உங்களுக்கு ரூ3243 னை உங்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது


இதெல்லாம் வேண்டாம் என்று இந்த ஆயிரம் ரூபாயினை பங்குச்சந்தையில் போடுகின்றீர்கள்… என்னவாகும்…? அது உங்கள் திறமை ….


இவ்வளவுதான் நண்பர்களே… முதல் வகையில் நாம் ரிஸ்க்கே எடுக்கவில்லை. நமது பணம் அப்படியே கிடைத்தது. இரண்டாவது வகையில் கொஞ்சம் பாதுகாப்பான ரிஸ்க் எடுத்தோம்… கொஞ்சம் லாபம் கிடைத்தது. மூன்றாவது வகையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுத்தோம்… இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தது…. நான்காவதாக நாம் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராகிறோமோ அந்த அளவிற்கு லாபமும் கிடைக்க வாய்ப்பு இருக்கும்.


சரி ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?


நம் அறிவினை விரிவு செய்ய வேண்டும். 


சிறு சேமிப்புத்திட்டம் பற்றிய தெளிவு இருந்தால்தான் நாம் சரியான திட்டத்தினைத் தேர்வு செய்ய இயலும். 


மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன எனத் தெரிந்தால்தான் அதனைப் பற்றி யோசிக்க இயலும். ( மியூச்சுவல் பண்ட் குறித்து இன்னொரு பதிவினில்  விரிவாகப் பேசலாம்) 


பங்குச்சந்தை பற்றிய அறிவினை வளர்த்துக் கொண்டால்தான், நாம் லாபத்தைப் பார்க்க முடியும். 

நான்காவது வகையில் பங்குசந்தை பற்றி சொல்லும்போது இலாபம் வர வாய்ப்பு இருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன் என்பதனை பாருங்கள்.


ஏனெனில் குறைந்த தெளிவுடன் எடுக்கும் ரிஸ்க் மிகுந்த ஆபத்தைத் தரக்கூடும். அதே வேளை சரியான தெளிவுடன் எடுக்கும் ரிஸ்க் நல்ல லாபத்தினையும் தரக்கூடும்.


இப்படி நம் பணத்தினை வளர்க்கும் சில வழிமுறைகளைத் தேடி அடைவதில் தவறேதும் இல்லை. 


நேர் வழியில் பொருள் செய்வோம்.


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27