யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

இலக்கியம் என்பது வாழ்வினைச் சார்ந்தது என்று கூறாமல் கூறியவர்கள்  நம் முன்னோர்கள்.

வாழ்வின் நிகழ்வுகளை அகம் புறம் எனப்பிரித்து அதன் அடிப்படையில் இலக்கியம் வரைந்தவர்கள்.

புற வாழ்க்கையின் சிறப்பினைப் பேசும்  தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு பெருமை வாய்ந்த நூல் புறநானூறு.

 புறநானூற்றின் 192 வது பாடல், கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல், ஒரு நிறை வாழ்விற்கான அர்த்தம் சொல்லும் பாடல். உலகம் முழுதையும் ஒன்றெனக் காணக் கூறும் பாடல்.   

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

-          எல்லா ஊர்களும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர். தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும் கூட அடுத்தவரால் வருவதில்லை. பிறப்பினைப் போல சாதலும் புதிதல்ல…வாழ்வினை இன்பமென நினைத்து மகிழ்ந்ததுமில்லை, அதுபோன்றே துன்பமென வெறுத்து ஒதுங்கியதுமில்லை.  மின்னலுடன் வரும் மழைநீர் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கல்லினைக்கூட ஆற்றின் நீர் வழியில் தள்ளிச் சென்று பள்ளத்தில் இடுகின்றது. ஆகவே,  இயற்கையின் வழி நடப்பதுதான் வாழ்வென்று மூத்தவர்கள் கொடுத்த அறிவால் உணர்ந்தோம். எனவே மனிதர்களில் பெரியவரைக் கண்டு வியந்து போற்றியதும் இல்லை. சிறியவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றியதும் இல்லை என்பது இப்பாடலின் பொருள்.

தமிழ் கூறும் நல்லுலகத்தின் வாழ்க்கை நெறிகளினை நம் தலைமுறைக்கு ஊட்டாதது யார் குற்றம்?

-நா.கோபாலகிருஷ்ணன்  

Comments

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு