செம்புலப்பெயனீர்

 தமிழ் இலக்கியத்தினைப் படித்தவர்கள் அறிந்திருக்கலாம், காதலைப் பாடும் தமிழ்ச் செய்யுள்களின் போதையினை. . . .


மனதைத்திருடிப்போகும் அவ்வாறான செய்யுள்களில் இன்றளவும் என் மனதளவில் முதலிடத்தில் நிற்கும் பாடல்...


"யாயும் ஞாயும் யாராகியரோ?

 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

 யானும் நீயும் எவ்வழி யறிதும்?

 செம்புலப் பெயனீர் போல

 அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"


குறுந்தொகையின் 40 வது பாடல் இது.


தலைவன் பிரிந்து போய்விடுவானோ என்று சஞ்சலப்படும் தலைவியினை தேற்றுவதற்காகத் தலைவன் பாடுவது போல எழுதப்பட்ட பாடல். 


என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்?.... என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நீயும் நானும் ஒருவரையொருவர் எவ்வாறு அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் கலந்த மழை நீரினைப்போல நமது அன்பு நெஞ்சங்கள் கலந்துள்ளன.


செம்புலப் பெயனீர் என்னும் சொல்தான் இந்தச் செய்யுள் காலம் கடந்தும் நிற்க ஒரு காரணம்.


மழை நீர் செம்மண்ணில் கலந்து ஓடுவதைக் கவனித்திருப்போம். ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்க இயலாமல் கலந்திருக்கும். ஒன்றுடன் ஒன்று கலந்த இரண்டு அன்பு நெஞ்சங்களுக்கு அதனை உவமைப் படுத்தியதில் இருக்கிறது சிறப்பு.


- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு