அட்டக்கத்தி
எண்பதுகளில் வெளிவந்த பெரும்பான்மையான திரைப்படங்கள் வர்க்க பேதங்களைப் பேசியது. பெரும்பாலும் வில்லன்கள் பணக்காரர்களாகாவும், கதாநாயகன்கள் ஏழைகளாகவும் இருப்பார்கள். ஏழ்மையாய் இருப்பதே புனிதம் என்றும் பணக்காரர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றும் நாயகர்கள் வசனம் பேசுவார்கள். ரசிகர்கள் கைதட்டுவார்கள். வசனம் பேசிய எந்த நாயகனும் ஏழையாய் இருக்க விரும்பியதில்லை. . . ஒரு புறம் செல்வம் சேர்த்துக் கொண்டுதான் இருந்தனர். மாறாக அதனை உண்மையென்று கை தட்டிக் கொண்டிருந்தவன் இறுதி வரை ஏழ்மையில்தான் வாடிக் கிடந்தான். . . இதன் பின்னே இருந்த நுட்பமான அரசியல் அவனுக்குப் புரியவில்லை. நேர்மையாகப் பணம் சம்பாரித்தலும், அதன் மூலம் தன் வாழ்வின் நிலையை உயர்த்திக் கொள்வதில் தவறு இல்லையென்றும் அவன் புரிந்து கொண்டால் திரையரங்குகள் காற்றாடக் கூடும் என்ற சில நாயகர்களின் எண்ணம் காரணமாய் இருக்கலாம் (இதுதான் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் எனச் சொல்லிக் கொள்வது).
தொண்ணூறுகளில் இது மாறத் தொடங்கியது. அவன் கொஞ்சமாய் விழித்துக் கொண்டபோது. .
அதற்கு சிறிதும் சளைக்காத ஒன்றுதான் சாதியை ஒழிக்கப் போகிறோம் என்ற சில திரைப்படங்களின் வருகை.
ஆண்ட குலம் என்று பேசும் சில திரைப்படங்கள், தீராத வன்முறைகளைக் கற்றுத்தருகின்றது. பசும்பொன் என்னும் பெயரின் பின்னால் இருக்கும் சரித்திரத்தையும், அவர் சொல்லிச் சென்ற சமத்துவத்தின் அவசியத்தையும் மறக்கச் செய்கின்றன.
அடிமைத்தளையை உடைப்பதாய்ப் பேசும் சில சம கால இயக்குனர்கள், கீழ் சாதியில் இருப்பதே புனிதம், மேல் சாதியில் இருப்பவர் எல்லாம் அரக்கர் எனப் பேசும் பிரிவினைவாதம் மக்களுக்கு போதிப்பது என்ன?
வெண்மையாய் சுத்தமாய் இருப்பது மேல்சாதி, கருப்பாய் அழுக்காய் இருப்பவன் கீழோன் என்ற குறியீடே தவறு. இதில் சுத்தத்தை அழுக்காக்குவோம் என்று பேசுவதுதான் சமத்துவமா? ஏன் கீழோன் எனக் குறியீடு காட்டும் மக்கள் வெண்மையாய் சுத்தமாய் ஒரு பணக்காரனாய் ஆகலாகாதா. . .?
உண்மையைச் சொன்னால் சில நட்சத்திர வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உங்கள் அடையாளம் தேவைப்படுகிறது.
இந்த அப்பாவி மக்களின் உணர்வுகளை நீங்கள் உண்டு செமிக்கின்றீர்கள்.
அடுத்த பொழுதிற்கான சேமிப்பு இல்லாதவன், சொந்தமாய் உறைவிடம் இல்லாதவன், யாரேனும் நம் வாழ்வை மாற்றி விட மாட்டார்களா என ஏங்கிக் கிடப்பவன், பேருந்துக்கு சில்லறை இன்றி நடந்து செல்பவன், மாத இறுதியில் பெட்ரோலுக்குப் பணம் இன்றி பேருந்துக்கு நிற்பவன் எல்லாம் ஒரு நிறைதான். . . . எல்லாம் மனிதர்கள்தான். . .
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பார்வையை விரித்தவன் மண் இது.
குறைந்த பட்சம் சக மனிதர்களை மட்டுமாவது ஒரு ஜாதியில் சேர்த்துப் பேசப் பழகுவோம். . அவன் கீழ்க் குடியில் இருந்தால் என்ன , மேல் குடியில் இருந்தால் என்ன? இல்லாதவன் இல்லாதவன்தான்..
- நா.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment