பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்.

 மாறிவரும் வாழ்க்கைச் சூழல்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சினைகளை நம்மை எதிர் கொள்ள வைக்கிறது. பிரச்சினைகளின் வீச்சு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதனை முறையாகக் கையாளாத போது அதற்கேற்ற பாதிப்புகளை ஏற்படுத்திப்போய் விடுகிறது.

அதைப் படி, இதைப் படி என்று நம் குழந்தைகளுக்குத் திணித்துக் கொண்டிருக்கிற நாம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க மறந்து விடுகிறோம். வாழ்க்கை என்பது நேர்கோட்டுப் பாதையல்ல, எதிர்பாராத தருணங்களில் எந்தத் திசையில் இருந்து வேண்டுமானாலும் வீசப்படும் கல்லாய் பிரச்சினைகள் நம் முன்னே முளைத்து நிற்கக் கூடும் என்ற எளிய விசயத்தினைக் கூட நாம் கற்றுக் கொடுப்பதில்லை. அதற்குக் காரணம் நாமே அதனைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதாகக்கூட இருக்கலாம்.

பிரச்சினைகளை எதிர்நோக்கவும், அதனைக் கையாளவும் உண்டான மனவலிமை இல்லாத மனிதர்கள், ஒவ்வொரு பிரச்சினையின் போதும் சிதறிப் போகிறார்கள். விளைவு, அவர்களால் நினைத்த வெற்றியினை ருசிக்க முடிவதில்லை. அவர்களுக்கு வாழ்க்கை என்பது வெறும் நாட்களின் நகர்த்தலாய்ப் போய் விடுகிறது.

முதலில், பிரச்சினை என்பது அது எவ்வளவு பெரியதென்றாலும் நம்மை பயமூட்டும் பூதம் அல்ல என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எல்லா பிரச்சினைகளையும் சந்தோசமான மனநிலையோடு எதிர்கொள்ளுங்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணத்தோடு எதனையும் அணுகாதீர்கள். உலகில் உள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளது என்பதனை சொல்லித் தெரிந்துகொள்ளத் தேவையில்லை.

கிரிக்கெட் விளையாடுகையில், உங்களை நோக்கி பந்து வீசப்படும் போது, ஏண்டா நம்மை நோக்கி பந்தினை வீசுகிறான்...எப்படி இந்த பந்தில் அடிபடாமல் இருப்பது....பேசாமல் களத்தில் இருந்து ஓடி விடுவோமா.... இப்படியா யோசிப்பீர்கள். இல்லை அல்லவா. அதனை நமக்கு விடுக்கப்பட்ட சவால் போல எவ்வளவு மனவலிமையோடு எதிர்கொள்வோம். அப்படி ஒரு விளையாட்டின் மகிழ்ச்சியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்.

பொதுவாக, அடுத்தவரின் பிரச்சினைக்கு நம்மால் எளிதான தீர்வினைச் சொல்ல முடியும். அதற்குக் காரணம், அந்தப் பிரச்சினையின் நல்லது கெட்டது நம்மை பாதிக்காது என்பது மட்டும் அல்ல, அதனை நாம் நம் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. அதனால் ஒரு அமைதியான மன நிலையோடு அதனை அணுக இயல்கிறது. நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது கூட, ஒரு மூன்றாம் மனிதரைப் போல அதனை ஆராய்ந்து பாருங்கள். சுலபமாக தீர்வினைக் கண்டுபிடிக்கலாம். இது சொல்வதற்கு எளிதென்றாலும், நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் கடினம். ஆனால், பழக்கப் படுத்திக் கொள்ள முடியாத விசயமென்று ஏதேனும் இருக்கிறதா என்ன?

எந்த பிரச்சினைகளையும், அதன் காரண காரியம் அறிந்து அணுகும் போதும், அதன் அடி ஆழம் வரை பொருமையான மன நிலையில் ஆராய்ந்து பார்க்கும் போதும் எளிதான தீர்வுகள் நம் கண்களுக்குத் தெரியும். 

நாம் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு விதமான தீர்வுகள் உண்டு. சிறியது பெரியது என்ற பாகுபாடில்லை. சமுதாயம் சார்ந்த பிரச்சினை, தனிமனிதனின் பிரச்சினை என்ற வேறுபாடில்லை. எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு விதமான தீர்வுகள் உண்டு.

ஒன்று தற்காலிகத் தீர்வு. மற்றொன்று நிரந்தரத் தீர்வு.

தற்காலிகத் தீர்வு உடனடியாகக் காணப்படுவது. நிரந்தரத் தீர்வு கொஞ்ச காலம் பிடிக்கலாம்.

இதனை எளிதாக விளங்கிக் கொள்ள ஒரு எடுத்துக் காட்டினைப் பார்ப்போம். நீங்கள் அலுவலக வேலையாக ஒரு வெளியூருக்குப் போகின்றீர்கள். அங்கே திடீர் என்று உங்களுக்குக் காய்ச்சல் அடிக்கிறது. உங்களுக்கு அங்கு எந்த மருத்துவரையும் தெரியாது, சென்ற வேலையையும் முடித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள். பக்கத்தில் உள்ள ஒரு மருந்துக்கடைக்குச் செல்வீர்கள். காய்ச்சலுக்கான ஒரு மாத்திரையினை வாங்கிப் போட்டு அப்போதைக்கு சரி செய்து கொள்வீர்கள். இது தற்காலிகத்தீர்வு.

அதன் பின்னே வீட்டுக்கு வந்த பின், உங்கள் மருத்துவரிடம் போவீர்கள். அவர் காய்ச்சலுக்கான காரணம் என்ன என்பதினை ஆராய்ந்து அதனை முற்றிலுமாகக் குணப்படுத்த மருந்து மாத்திரைகள் தருவார். இது நிரந்தரத் தீர்வு.

இப்படித்தான், எந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போதும் அதனை உடனடியாகச் சரி செய்ய சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதன் பின் அது சற்றே அமைதியான பின், அதற்கான நிரந்தரத் தீர்வுகளை எடுக்க வேண்டும்.

ஆனால், ஒரு பெரிய மோசமான விசயம் என்னவென்றால், பொதுவாக மனித மனமானது தற்காலிகத் தீர்வுகளை எடுத்தவுடனே அமைதியாகிப் போகிறது. அதன் பின் நிரந்தரத் தீர்வுகளைப் பற்றி யோசிக்க சோம்பல் கொள்கிறது. இதனால் மீண்டும், மீண்டும் அந்த பிரச்சினை தலை தூக்கும் போதெல்லாம் தற்காலிகத் தீர்வுகளை எடுக்கத் தொடங்குகிறோம். விளைவு என்னவாகும்?

மீண்டும், நம் காய்ச்சல் கதைக்கு வருவோம். முதல் முறை மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டவுடன், காய்ச்சல் ஓரளவுக்குத் தணிகிறது. ஆனால், மறுநாள் மீண்டும் அதிகமாகி விடுகிறது. அப்போதும், நீங்கள் மருத்துவ மனைக்குப் போகாமல், மாத்திரையினை மட்டும் போட்டுக் கொள்கிரீர்கள். இப்படி இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக மாத்திரை போட்டுக் கொண்டு ஒன்றும் கேட்காமல், கடைசியாக மருத்துவரிடம் போனால் உங்கள் உடல்நிலை எப்படி இருக்கும்?

இது போலத்தான், நம் வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தற்காலிகத் தீர்வுகளாக எடுத்துக் கொண்டு, கடைசியாய் ஒன்றுமே ஆகாது என்று வரும் போது நிரந்தரத் தீர்வுகளைத் தேடுகிறோம். அப்போது, அது மிகவும் சிக்கலாகி, தீர்வுகள் தொலை தூரம் உள்ள பிரச்சினையாய் மாறியிருக்கும்.

ஆகையால், எப்போது எந்த பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், தற்காலிகத் தீர்வினைத் தொடர்ந்து நிரந்தரத் தீர்வுக்கான வழிமுறைகளைச் செய்ய ஆரம்பிய்யுங்கள். அதுதான் உங்களைக் காப்பாற்றும்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு விதமான தீர்வுகளையும் உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால், அதனைப் பிரச்சினையாகவே எண்ண வேண்டியதில்லை. ஏதோ தீர்வு கண்டுபிடிக்கப் படவேண்டிய கணித சமன்பாடு என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

விசு பாணியில் சொல்வதென்றால், “ பிரச்சினையை பிரச்சினையாக நினைத்தால்தான் பிரச்சினை. பிரச்சினையை பிரச்சினையாக நினைக்கவில்லை என்றால் பிரச்சினையே இல்லை.”

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு