கல்விக்கடன் பெறுவது எப்படி?

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மேல்படிப்புக்குச் செல்லும் வேளையில் மாணவர்களும் , பெற்றோர்களும் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை கல்விகட்டணம்.

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு வருடமும், கல்விக்கான செலவு என்பது 15% அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் தெரிகின்றது.

இப்படியான இக்கட்டான நேரத்தில் பெருவாரியான மாணவர்களுக்குக் கைகொடுப்பது வங்கிகளில் கிடைக்கும் கல்விக்கடன்தான்.

இந்தப் பதிவினில் கல்விக்கடன் குறித்த சில விபரங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பகிர்ந்துகொள்வோம்.

எந்தெந்த படிப்புகளுக்கு கடன் பெற முடியும்?

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல் படி,  பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கீழ்க்கண்ட படிப்புகளில் சேர கல்விக்கடன் கிடைக்கும்.

Ø  இளநிலைப் பட்டப்படிப்புகள்

Ø  முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம்

Ø  தொழிற்கல்வி படிப்புகள் – பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், நிர்வாகம், கணிப்பொறியியல் போன்றவை

Ø  பல்கலைக்கழகங்களால் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் கணிணிச் சான்றிதழ் படிப்புகள்

Ø  ICWA, CA, CFA போன்ற படிப்புகள்

Ø  IIM, IIT, IISc, XLRI, NIFT போன்ற நிறுவனங்களில் கிடைக்கும் படிப்புகள்

Ø  இந்தியாவில் கிடைக்கும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் படிப்புகள்

Ø  சில மாலைநேரப் படிப்புகள்

Ø  UGC, AICTE, AIBMS, ICMR மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் கிடைக்கும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள்

   வெளிநாட்டுப் படிப்புகள்:

Ø  புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கிடைக்கும் தொழிற்சார்ந்த பட்டப்படிப்புகள்

Ø  முதுகலைப் படிப்புகள் (MBA, MCA, MS Etc)

Ø  CIMA – London, CPA in USA ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் படிப்புகள்.

யாருக்குக் கிடைக்கும்?:

கல்விக்கடன் பெறும் மாணவர்களுக்கான தகுதிகள்:

Ø  இந்திய பிரஜையாக இருத்தல் வேண்டும்

Ø  குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் ( SC/ST க்கு 50%) பெற்றிருக்கவேண்டும்

Ø  தொழிற்கல்வி படிப்புகளுக்கு முறையான தகுதித்தேர்வு / தகுதி கலந்தாய்வின்  மூலம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்

Ø  வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, அந்த பலகலைக்கழகங்களின் அனுமதிக் கடிதம் பெற்றிருக்கவேண்டும்.

பொதுவாக நிர்வாக அடிப்படையில் ( Management Seat ) கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் கிடைக்காது. ஆனால் கலந்தாய்வில் (Counselling) கலந்துகொண்டு இடம்பெற்று, பின்னர் தான் விரும்பிய பாடப்பிரிவு / கல்லூரி கிடைக்கவில்லை எனக்காரணம்காட்டி அந்த அனுமதியினை திருப்பிக்கொடுத்துவிட்டு நிர்வாகப்பிரிவில் சேரும் மாணவர்கள் கல்விக்கடன் பெறமுடியும். ஆனால் இந்தக்கடனுக்கு மத்திய அரசு வழங்கும் வட்டிச் சலுகை கிடைக்காது என்பதனையும் கவனத்தில் கொள்க.

எந்தெந்த செலவுகளுக்குக் கடன் கிடைக்கும்?

Ø  கல்விக்கட்டணம்

Ø  விடுதிக்கட்டணம்

Ø  தேர்வுக்கட்டணம்

Ø  நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கான கட்டணம்

Ø  பேருந்துக்கட்டணம்

Ø  கணிணி மற்றும் படிப்புக்குத்தேவையான உபகரணங்கள் வாங்கும் செலவு

Ø  கல்விச்சுற்றுலா, பிரஜெக்ட் போன்றவைகளுக்கான செலவுகள்

எவ்வளவு கடன் கிடைக்கும்?

பொதுவாக 100% கட்டணமானது கடனாகக் கிடைக்கும்

இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 லட்சம் வரையும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 லட்சம் வரையும் கடன் கிடைக்கும்.

4 லட்சம் வரைக்கான கடனுக்கு ஜாமின் தேவையில்லை. 4 முதல் 7.5 லட்சம் வரையிலான கடனுக்கு மூன்றாம் நபரின் தனிநபர் ஜாமின் தேவைப்படும். 7.5 லட்சத்திற்கு மேல் சொத்து ஜாமின் தேவைப்படும்.

அதேபோல 4 லட்சம் வரையிலான கடனுக்கு முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

4லட்சத்திற்கு மேல் பெற்றால், உள்நாடுகளில் படிக்க 5% மும், வெளிநாடுகளில் படிக்க 15% மும் முன்பணம் செலுத்தவேண்டும்.

அதேபோல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கல்விக்கடன் பெறமுடியும். ஆனால் அவர்களின் மொத்த கடன்தொகை 4 லட்சத்திற்குள் இருந்தால் முன்பணமும், ஜாமினும் தேவையில்லை. மாறாக 4 லட்சத்திற்கு அதிகமானால் அதற்குரிய கட்டணம் மற்றும் ஜாமின் கொடுக்க வேண்டியிருக்கும்.

எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும்?  

ஒவ்வொரு வங்கிகளைப் பொருத்து வட்டி சதவீதம் மாறுபடும்.

பொதுவாக 12% முதல் 14% வரை ஆண்டு வட்டி வசூலிக்கப்படும்.

எப்படித் திருப்பிச்செலுத்துவது?

படிப்பினை முடித்த 6 மாதம் அல்லது ஓராண்டிலிருந்து திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம்.

7.5 லட்சம் வரை கல்விக்கடன் வாங்குபவர்கள் 10 ஆண்டுகளுக்குள்ளும், 1.5 முதல் 15 லட்சம் வரை கடன்பெறுபவர்கள் 15 ஆண்டுகள் வரையிலும் கடனைத் திருப்பிச்செலுத்தலாம்.

அதே போல படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலில் குறைந்த ஊதியம்தான் கிடைக்கும். அவர்கள் துவக்கத்தில் குறைந்தபட்சத் தொகையினைச் செலுத்திவிட்டுப் பின்னர் அதிகரித்துக்கொள்ளலாம்.  இதற்கு  “டெலஸ்கோப்பிக் முறை” என்று பெயர்.

தேவைப்படும் ஆவணங்கள்

Ø  ஆதார் கார்டு

Ø  ரேசன் கார்டு

Ø  வங்கிக்கணக்குப் புத்தகம் நகல்

Ø  கல்லூரியின் அனுமதிக்கடிதம் ( Admission letter )

Ø  கட்டணத்திற்கான சான்றிதழ் ( Fees structure)

Ø  பெற்றோரின் வருமான சான்றிதழ்

Ø  10th , 12th மதிப்பெண் சான்றிதழ்

Ø  பள்ளி இடமாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

கல்விக்கடன் பெறும் முறை

கல்விக்கடன் பெறுவதற்கு உங்கள் பகுதியில் உள்ள வங்கியினை நேரடியாக அணுகலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் பெற்றபின்தான் உங்களால் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கமுடியும்.

மேற்சொன்ன சான்றிதழ்களோடு நீங்கள் வங்கியினை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம். தகுதியான காரணங்கள் இல்லாது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடாது. அப்படி நிராகரிக்கப்பட்டால் நீங்கள் ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்க முடியும்.

கல்விக்கடனை நீங்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் நீங்கள்  ஏதேனும் மூன்று வங்கிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

பொதுவாக நீங்கள் விண்ணப்பம் கொடுத்ததில் இருந்து 15 முதல் ஒரு மாத காலத்திற்குள் உங்கள் விண்ணப்பம் அனுமதிக்கப்படும்.

வரிச்சலுகை:

நீங்கள் திரும்பிச் செலுத்தும் கல்விக்கடனில் 80இ பிரிவின் படி வட்டித்தொகைக்கு வரிச்சலுகை கிடைக்கும். அசலுக்குக் கிடைக்காது. திருப்பிச்செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து 8 வருடங்கள் வரை மட்டுமே வரிச்சலுகை கிடைகும். அதேபோல யாருடைய படிப்புக்காக கல்விக்கடன் பெற்றார்களோ அவர் மட்டும்தான் இந்த வரிச்சலுகையினைப் பெறமுடியும்.

நடைமுறைகள்

பொதுவாக கல்விக்கடன் பெறும் மாணவர்கள் முறையாக அதனைத் திருப்பிச்செலுத்துவதில்லை என்ற காரணத்தால் அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் கொடுப்பதில் சிறு தயக்கம் காட்டுகின்றன. ஆனால் உங்கள் விண்ணப்பம் முறையாக இருக்கும் பட்சத்தில் அதனை முறையான காரணமின்றி நிராகரிக்க முடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

உங்கள் மதிப்பெண்கள் நன்றாக இருக்கும்பட்சத்தில் வங்கியாளர்கள் எந்தத் தயக்கமும் இன்றி கடன் கொடுப்பார்கள். அதே போல உங்களின் கல்லூரிக் காலத்தில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவது அவசியம்.

ஏதேனும் பாடத்தில் தேர்ச்சி அடையாவிட்டால், அந்தப் பாடத்தில் நீங்கள் தேர்ச்சி பெறும்வரை உங்கள் கடன் தொகையினை நிறுத்தி வைக்கும் அபாயம் உள்ளது.

கல்விக்கடன் குறித்த ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகின்றேன்.

இறுதியாக மாணவர்கள் கவனத்திற்கு, பொதுவாக கல்விக்கடன் பெறும் மாணவர்கள் அதனை முறையாகத் திருப்பிச்செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதுதான் வங்கிகள் புதிய கல்விக்கடன் கொடுப்பதில் காட்டும் தயக்கத்திற்குக் காரணம். உங்களின் தவறு உங்களுக்குப் பின்னால் வரும் மற்ற மாணவர்களையும் பாதிக்கிறது என்பதனைக் கருத்தில் கொள்க. மேலும் கல்விக்கடன் உங்கள் சிபில் ரிப்போர்ட் எனப்படும் உங்கள் தனிப்பட்ட கடன் விபரத்திலும் காண்பிக்கப்படும் ஆகையால், நீங்கள் முறையாகத் திருப்பிச் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வீட்டுக்கடனோ, வாகனக்கடனோ வாங்க இயலாமல் போகலாம்.

எனவே நாம் வாங்கும் கடனை நாம்தான் திருப்பிச் செலுத்தவேண்டும், அது நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு வாங்குங்கள்.

எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.   

 - நா.கோபாலகிருஷ்ணன்


 

 


Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு