இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27
இருபத்தேழு
நண்பா இன்றைக்கு
வாக்கியத்தில் வரும் சில முக்கியமான பிழைகள் குறித்துப் பார்க்கலாம் வா….
பொதுவாக நாம்
அனைவருமே செய்யும் தவறு, அஃறிணைப் பொருட்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படவேண்டிய உருபுகளை
உயர்திணைக்குப் பயன்படுத்துவது.
உதாரணமாக,
அது என்னும் உருபானது அஃறிணைக்கு உரியது. ஆனால் அதனை நாம் தவறுதலாக உயர்திணைக்குப்
பயன்படுத்துவோம்.
எ.கா.: எனது
மனைவி எனச் சொல்வது தவறு. என்னுடைய மனைவி என்று சொல்வதே சரி.
அதே போன்று
இந்த உருபினைப் பயன்படுத்தும்போது உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்றும்,
உயிர்மெய்யெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன் அது என்றும் பயன்படுத்தவேண்டும்.
எ.கா.: அஃது
இங்கே உள்ளது, அது நன்றாக உள்ளது.
இன்னொரு முக்கியமான
தவறு, ஒருமைக்கான விகுதியினைப் பன்மைக்குப் பயன்படுத்துவது. இது, அனைவருமே தம்மையறியாமல்
செய்யக்கூடும் பிழை நண்பா.
உதாரணமாக,
‘பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கின்றது’ என எழுதினால் அது தவறல்லவா…? பேருந்துகள்
என்று பன்மையில் வரும் வேளையில், நின்கின்றன
என்றுதானே குறிப்பிட வேண்டும். எனவே ‘பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கின்றன’
என்பதுதான் சரி.
அடுத்ததாக
ஒன்று என்பதனைக் குறிக்க ஓர் மற்றும் ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் ஓர் என்ற சொல்லினை உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்னும், ஒரு என்னும்
சொல்லை உயிர்மெய்யெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்னும் பயன்படுத்துதல்வேண்டும்
என்பதனை நினைவில் கொள் நண்பா…..
அடுத்ததாக,
சொற்களை எழுதும் வேளையிலும் சில முக்கிய விசயங்களை நினைவில் கொள்ளவேண்டும் நண்பா….
இரட்டைக்கிளவி
சொற்களை எப்போதும் சேர்த்தே எழுதவேண்டும்.
அதாவது சலசல
என எழுதுவது சரி. சல சல என இடைவெளி விட்டு
எழுதுவது தவறாகும்.
அதே போல பன்மையை
உணர்த்தும் ‘கள்’ விகுதியினை எப்போதும் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.
அதாவது மனிதர்கள்
என எழுதுவது சரி. அதனை மனிதர் கள் என எழுதக்கூடாது.
மேலும் உரிச்சொற்களைப்
பயன்படுத்துகையில், அவற்றைப் பெயருடனும் / வினையுடனும் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.
உதாரணமாக,
சாலச்சிறந்தது என எழுதினால் அது சரி. அதனை சாலச்
சிறந்தது என இடைவெளி விட்டு எழுதுவது தவறாகும்.
அதே போன்று
உம்மைத்தொகைச் சொற்களையும், நேரிணை அல்லது எதிரிணைச் சொற்களையும் எழுதும்போது சேர்த்தே
எழுதவேண்டும்.
உதாரணமாக,
உற்றார் உறவினர் என எழுதுவது தவறு. உற்றார்உறவினர் என எழுதுவதே சரியாகும்.
( இணைச்சொற்கள்
என்றால் சேர்ந்து வரும் சொற்கள் நண்பா. எதிர் எதிர் அர்த்தம் உள்ள இரு சொற்கள் சேர்ந்து
வந்தால் எதிரிணை என்றும் (எ.கா.: இரவும்பகலும்) ஒரே பொருள் உள்ள இரு சொற்கள் சேர்ந்து
வந்தால் (எ.கா.: சீரும்சிறப்பும்) அது நேரிணை எனவும் அழைக்கப்படும்.)
விளங்கிக்
கொண்டாயா நண்பா… மீண்டும் நாளை சந்திக்கலாம்… காத்திரு
Comments
Post a Comment