இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 25

 

இருபத்து ஐந்து

நலமா நண்பா, பிழையின்றி நம் தாய்த் தமிழினை எழுதும் முயற்சியில் அரைக்கிணறு தாண்டி விட்டோம்.

வல்லினம் மிகும் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் குறித்துப் பார்த்துவிட்டோம். அடுத்ததாக மெய்ம்மயக்கம் என்னும் அடுத்த முக்கியமான விளக்கத்தினைக் காணலாம் வா….

வல்லினம் மிகுதல் போலவே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. அதனை மெய்மயக்கம் என்பர்.

குறிப்பாக ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் இவ்வாறு மிகுந்து வரும்.

ஏழாம் நாள் பாடத்தில் உடனிலை மெய்மய்க்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் மற்றும் ஈரொற்று மெய்ம்மயக்கம் குறித்துப் படித்தோமே நினைவில் உள்ளதா…?

இல்லையெனில் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொள்.

தன் எழுத்துடன் மட்டுமே இணைந்து வரும் எழுத்துக்களை (க், ச், த், ப் ) உடனிலை மெய்ம்மயக்கம் என்றும், வேற்று எழுத்துடன் மட்டுமே இணைந்து வரும் எழுத்துக்களை (ர், ழ்) வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்றும் வகைப்படுத்தினோம் அல்லவா…?

அதே போல ய், ர், ழ் ஆகிய மெய்யெழுத்துக்கள் இன்னொரு மெய்யெழுத்துடன் சேர்ந்து வருவது உண்டு எனவும் அதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்றும் பார்த்தோம் அல்லவா…?

நினைவுக்குக்கொண்டு வா….

மெய்ம்மயக்கத்தின் சில முக்கிய விதிகளை இன்று பார்க்கலாம்

விதி 1: யகர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்.

      எ.கா.: மெய் + மயக்கம் = மெய்ம்மயக்கம்

                  மெய் + ஞானம் = பெய்ஞ்ஞானம்

அதாவது ஒரு நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்தானது யகரமாக இருப்பின் ( மெய் ), அதன் பின்னால் மெய்யெழுத்து மிகும்.

 

விதி 2: வேற்றுனிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் மெல்லினம் மிகும்

     எ.கா.:  வேய் + குழல் = வேய்ங்குழல்

                   கூர் + சிறை  = கூர்ஞ்சிறை

நிலைமொழியின் இறுதி எழுத்து ய,ர,ழ வாக இருப்பின் மெய்யெழுத்து மிகும்

 

விதி 3: புளி என்னும் சுவைப்பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்

      எ.கா.: புளி + கறி = புளிங்கறி

                   புளி + சோறு = புளிஞ்சோறு

புளி என்ற சுவைப்பெயரோடு வல்லின எழுத்து மட்டுமன்றி மெல்லின எழுத்தும் மிகுவதுண்டு.

 

விதி 4: உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப்பெயர்களுக்கு முன்னர் வல்லினம் மிகும்

       எ.கா.: மா + பழம் = மாம்பழம்

 

விதி 5:  பூ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்

       எ.கா.: பூ + கொடி = பூங்கொடி

                   பூ + சோலை = பூஞ்சோலை

 

நண்பா மெய்ம்ம்யக்கம் என்றால் என்ன என்பது குறித்த ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என நம்பிகிறேன்.

நாளை மீண்டும் சந்திக்கலாம்.

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு