இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 23

இருபத்து மூன்று

என்ன நண்பா, வல்லினம் மிகா இடங்களின் அடுத்தடுத்த விதிகளைக் காண்போமா…?

விதி 19: வினைத்தொகையில் வல்லினம் மிகாது

     எ.கா.: குடிதண்ணீர், வளர்பிறை

அது என்ன வினைத்தொகை என்பதுதானே உனது கேள்வி நண்பா….

வா … அறிந்து கொள்.

காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.

காலம் காட்டும் இடைநிலை என்பது, அந்த வினை எந்தக் காலத்தில் நிகழ்கிறது என்பதனைக் காட்டுவதாகும்.

உதாரணமாக வளர்பிறை என்ற சொல்லினைப்பார்.

இதில் காலம் மறைந்து வருகின்றது அல்லவா…? ( அதாவது வளர்ந்தபிறை, வளர்கின்றபிறை, வளரும்பிறை என்றில்லாமல் வளர்பிறை என்று குறிக்கின்றோம் அல்லவா..?)

இப்படிக் காலம் காட்டும் இடைநிலையும்., பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவதுதான் வினைத்தொகை.

இப்படியான வினைத்தொகையில் வல்லினம் மிகாது ( வளர்ப்பிறை என்று எழுதினால் தவறு)

 

விதி 20: வியங்கோள் வினைமுற்றுத்தொடரில் வல்லினம் மிகாது

     எ.கா.: வாழ்க தமிழ்

வினைமுற்று என்றால் உனக்குத் தெரியும். அது என்ன வியங்கோள் வினைமுற்று….?

முற்றுப்பெற்ற ஒரு வினைதான் வினைமுற்று அல்லவா… இப்படியான ஒரு வினைமுற்றானது வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருட்களில் மூன்று இடங்களிலும் ( அதாவது தன்மை, முன்னிலை, படர்க்கை ), ஐம்பால்களிலும் வந்தால் அது வியங்கோள் வினைமுற்று ஆகும்.

எ.கா.: வாழ்க, ஒழிக, வாழிய

புரிந்ததா நண்பா…?

இப்படியான வியங்கோள் வினைமுற்றில் வல்லினம் மிகாது.

 

விதி 21: உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

      எ.கா.: இரவுபகல், வெற்றிலைபாக்கு

‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும் தொடர்கள் உம்மைத்தொகை ஆகும். எ.கா.: உற்றார்உறவினர் ( அதாவது உற்றாரும் உறவினரும் )

இப்படியான உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

 

விதி 22: அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது

      எ.கா.: பார்பார், சலசல

ஒரே சொல் இரண்டு முறை வருகையில் அதனைப் பிரித்தால் பொருள் தருவது அடுக்குத்தொடர். பிரித்தால் பொருள் தராவிட்டால் அது இரட்டைக்கிளவி.

இவை இரண்டிலுமே வல்லினம் மிகாது.

 

விதி 23: சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத்தவிர ஏனைய உரிச்சொற்களின் பின்னால் வல்லினம் மிகாது.

       எ.கா.: உறு பொருள், நனி தின்றான், கடி காவல்

உரிச்சொல் என்றால் என்னவென்று பதிநான்காம் நாள் பாடத்தில் பார்த்தோமே நண்பா… மீண்டும் அதனை நினைவு படுத்திக்கொள்.

(செய்யுளுக்கே உரிய சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும் நண்பா…. அதாவது உரிச்சொற்கள் என்பவை பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் முன்னால் ஒரு அடையாய் வரும்)

ஏற்கனவே வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ர்க்கும் வேளையில்  சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா.

அந்த விதியினை ஒட்டியதுதான் இந்த விதியும்.

அந்த நான்கு உரிச்சொற்களைத் தவிர மீதமுள்ள அனைத்து உரிச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

சரியா நண்பா…..

மீதமுள்ள விதிகளோடு நாளை சந்திப்போம். காத்திரு.


Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு