இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

இருபத்தொன்று

வல்லினம் மிகா இடங்களின் அடுத்தடுத்த விதிகளைப் பார்ப்போமா நண்பா…?

விதி 6: இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகாது.

     எ.கா.: குயில் போன்றவள்

விதி 7: மூன்று, ஐந்து மற்றும் ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது

     எ.கா.: அண்ணனோடு போ, மரத்திலிருந்து பறி, குரங்கினது குட்டி.

பதினொன்றாம் நாள் பாடத்தில் எட்டு வேற்றுமைகளைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா…. மீண்டும் நினைவுக்குக் கொண்டு வா நண்பா.

இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ வெளிப்படையாக வந்தால் வல்லினம் மிகும் என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒருவேளை ‘ஐ’ மறைந்து வந்தால் அங்கு வல்லினம் மிகாது என்பது இங்கு விதி.

குயில் போன்றவள் என்னும் போது வல்லினம் மிகவில்லை.

குயிலைப் போன்றவள் என்னும்போது வல்லினம் மிகுந்து வரும் என்பதைக் கவனித்துக்கொள் நண்பா.

மூன்றாம் வேற்றுமை உருபுகள் -  ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - இல் இன்

ஆறாம் வேற்றுமை உருபுகள் - அது, ஆது, அ

என்பதனை ஏற்கனவே பார்த்துள்ளோம். மீண்டும் நினைவு படுத்திக்கொள் நண்பா….

இந்த வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வரும்போது வல்லினம் மிகாது என்பது விதி.

விதி 8: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்றொடர்க் குற்றியலுகரமாகவோ அல்லது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருப்பின் வல்லினம் மிகாது.

       எ.கா.: தின்று தீர்த்தான், செய்து பார்த்தான்

வல்லினம் மிகுதலின் விதி எண் 21 (பதினேழாம் நாள் பாடம்) நினைவில் உள்ளதா நண்பா…?

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்.

அதேதான். வினையெச்சமானது வன்றொடர்க் குற்றியலுகரமாக இல்லாது, மென்றொடராகவோ அல்லது இடைத்தொடராகாவோ ( அதாவது வினையெச்சச் சொல்லின் இறுதி எழுத்துக்கு முன்னால் உள்ள எழுத்து மெல்லினமாகவோ அல்லது இடையினமாகவோ) இருப்பின்  வல்லினம் மிகாது என்பது விதி.

வினையெச்சம், குற்றியலுகரம் என்பதெல்லாம் உன் நினைவில் இருக்கின்றதுதானே நண்பா. இல்லையெனில் முந்தைய நாட்களின் பாடங்களுக்குத் திரும்பிச்சென்று நினைவு படுத்திக்கொள்.

விதி 9: அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர ‘படி’ என முடியும் பிற சொற்களை அடுத்து வல்லினம் மிகாது

     எ.கா.: பாடும்படி கேட்டாள், ஓடும்படி கூறினான்

இதற்கு விளக்கம் ஒன்றும் தேவையில்லை, உனக்கே புரிந்திருக்கும் என நம்புகிறேன் நண்பா.

விதி 10: எட்டு, பத்து தவிர பிற எண்களின் பின்னே வல்லினம் மிகாது.

      எ.கா.: ஒரு சக்கரம், இரண்டு பெட்டி

எட்டு மற்றும் பத்துக்குப் பின் வல்லினம் மிகும் என்று வலிமிகுதலில் ஒரு விதி பார்த்தோமே நண்பா… நினைவில் உள்ளதா…. அதனை ஒட்டியதுதான் இந்த விதியும்.

விதி 11: அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது

    எ.கா.: அன்று சொன்னான், இன்று தருவாயா?, என்று சொன்னான், இன்றாவது கிடைக்குமா?, யாரடா பார்த்தது?, ஏனடி கொல்கிறாய்?, அவன் போன்ற கடவுள் யார்?

விளங்கியதா நண்பா….. இன்றைக்கு இந்த ஆறு விதிகள் போதும். நாளை மீண்டும் சந்திப்போம்

-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

  1. அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள: https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27