இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 20
இருபது
என்ன நண்பா
நலம்தானே….
வல்லினம்
மிகும் இடங்களைப் பற்றிப் பார்த்துவிட்டோம். அவை அனைத்தும் உன் நினைவில் இருக்கும்
என நம்புகிறேன்.
அடுத்து வல்லினம்
மிகா இடங்களைப் பற்றிப் பார்க்கலாம் வா…
நாம் ஏற்கனவே
அறிந்தது போல, வல்லினம் வரும் இடங்களில் எல்லாம் ஒற்று மிகாது. சில இடங்களில் மட்டுமே
மிகும். ஒற்று வரக்கூடாத இடங்களைத்தான் வல்லினம் மிகா இடங்கள் என்கின்றோம். அவை எந்தெந்த
இடங்கள் என்பன குறித்த விதிகளைப் பார்ப்போம் வா….
விதி 1 : எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
எ.கா.: தம்பி படித்தான், கிளி கொஞ்சும்
பதினொன்றாம்
நாள் பாடத்தில் எழுவாய் என்றால் என்ன எனப் பார்த்தோம் நினைவில் உள்ளதா நண்பா…?
எழுவாய் என்றால் அந்த வாக்கியம் எழுவதற்குக் காரணமாய்
இருப்பது.
இப்படிப்பட்ட எழுவாய் சொற்களைத் தொடர்ந்து வல்லினம்
மிகாது என்பது விதி.
விதி 2: அது, இது என்னும் சுட்டுப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது
எ.கா.: அது போல, இது தாங்குமா?
விதி 3: எது, எவை போன்ற வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.: எது கண்டாய்?, எவை தவறுகள்?
சுட்டு மற்றும் வினாவினைப் பற்றி நாம் பத்தாம் நாள்
பாடத்தில் பார்த்திருக்கின்றோம். நினைவில் கொண்டு வா நண்பா….
ஒன்றினைச் சுட்டிக்காட்டுவது சுட்டு என்றும், வினவுதலை
வினா என்றும் சொல்கின்றோம். உனக்குத் தெரியும்தானே…..
விதி 4: பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது
எ.கா.: படித்த கவிதை, எழுதாத புத்தகம்
பெயரெச்சம் மற்றும் எதிர்மறைப் பெயரெச்சம் குறித்து
பதினாறாம் நாள் பாடத்தில் பார்த்தோமே நண்பா… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வா….
முடிவுறாமல்
நிற்கும் எச்சவினையானது ஒரு பெயரைக் கொண்டு முடியும் படி அமைந்திருந்தால் அது பெயரெச்சம். அது எதிர்மறைப்பொருளில் இருப்பின்
அது எதிர்மறைப் பெயரெச்சம். சரிதானே….
நன்றாக நினைவில்
வைத்துக்கொள். எதிர்மறைப் பெயரெச்சம் என்றால் வல்லினம் மிகாது. அதுவே ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் எனில் வல்லினம் மிகும்.
விதி 5: விளித் தொடர்களில் வல்லினம் மிகாது
எ.கா.: மகளே வா
விளித்தல் என்றால் அழைத்தல் என்று பொருள். இவ்வாறான
விளித்தொடர்களில் வல்லினம் மிகாது.
விளங்கியதா
நண்பா…
இன்றைக்கு
இந்த ஐந்து விதிகள் போதும் . நாளை மீண்டும் சந்திக்கலாம்.
காத்திரு
……
Comments
Post a Comment