இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் -நாள் 19
பத்தொன்பது
நண்பா…நேற்றுவரைக்கும்
கொஞ்சம் கொஞ்சமாக நாம் வலிமிகலின் 23 விதிகளைப் பார்த்திருக்கின்றோம்.
வலிமிகல்
என்றால் என்ன என்று மீண்டும் சொல் பார்க்கலாம்…
சரிதான்…
ஒரு சொல்லின் முதல் எழுத்து க,ச,த,ப ஆகிய
வல்லின எழுத்து வரிசைகளில் ஒன்றாக இருப்பின் ( வரிசை என்றால் க, கா, கி, கீ…… ஞாபகம்
உள்ளதல்லவா…?) அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லினத்தின் மெய்யெழுதினைச்
சேர்த்து எழுதவேண்டும். இதுதான் வல்லினம் மிகல் எனப்படும்.
எந்தெந்த
இடங்களில் இது நிகழ்கின்றது என்பதற்காகத்தான் அந்த 23 விதிகளைப் பார்த்தோம்.
அவற்றையும்
ஒன்றன்பின் ஒன்றாக மீண்டும் நினைவுபடுத்திப்பார்….
விதி 1: ‘அ’ , ‘இ’ என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா.: அச்சட்டை, இப்பக்கம்
விதி 2: ‘அந்த’, ‘இந்த’ என்னும் சுட்டுத்திரிபுகளின் அடுத்து வல்லினம் மிகும்
எ.கா.: அந்தப்பக்கம், இந்தப்பக்கம்
விதி 3: ‘எ’ என்னும் வினா எழுத்தின் பின்னும், ‘எந்த’ என்னும் வினாத்திரிபை
அடுத்தும் வல்லினம் மிகும்.
எ.கா.: எத்திசை?, எந்தத்திசை?
விதி4: இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம்
மிகும்
எ.கா.: அவனைப்
பார்த்தேன்
விதி5: நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம்
மிகும்
எ.கா.: அவனுக்குத்
தெரியும்
விதி 6: ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்
எ.கா.: புலித்தோல்
விதி 7: என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
எ.கா.: எனக்கூறினான், வருவதாகச்சொல்
விதி 8: எண் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம்
மிகும்
எ.கா.: எட்டுக்குதிரைகள், பத்துகாசு
விதி 9: அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தொடர்ந்து வல்லினம் மிகும்
எ.கா.: அப்படிக்காட்டு, இப்படிச்செய்,
எப்படித்தெரியும்
விதி 10: திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்
எ.கா.: கிழக்குக்கடல், மேற்குத்திசை,
வடக்குப்பக்கம், தெற்குத்திசை
விதி 11: அதற்கு, இதற்கு, எதற்கு என்ற சொற்களின் பின்னே வல்லினம் மிகும்.
எ.கா.: அதற்குச்சொன்னேன், எதற்குத்தந்தாய்,
இதற்குக்கொடு
விதி 12: இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்
எ.கா.: இனிக்காண்போம், தனிச்சிறப்பு
விதி 13: மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்
எ.கா.: மிகப்பெரியவர்
விதி 14: மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த
மகரமெய் கெட்டு அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா.: மரம் + சட்டம் = மரச்சட்டம்
விதி15: ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
எ.கா.: பூப்பந்தல்.
விதி 16: சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்
எ.கா.: சாலச்சிறந்தது
விதி 17: தனிக்குற்றெழுத்தினை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம்
மிகும்.
எ.கா.: நிலாச்சோறு
விதி 18: உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
எ.கா.: மலர்ப்பாதம்
விதி 19: உருவகத்தில் வல்லினம் மிகும்
எ.கா.: தமிழ்த்தாய்
விதி 20: இகரத்தில் முடியும் வினையெச்சங்களை
அடுத்து வல்லினம் மிகும்
எ.கா.: ஓடிப்போனான்
ஓடி என்பது வினையெச்சச் சொல் ஆகும். இது ‘இ’
(ட்+இ = டி) யில் முடிந்துள்ளதால் இங்கே வல்லினம் மிகும்.
விதி 21: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்றொடர்க் குற்றியலுகரமாக
இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
எ.கா.: கேட்டுக்கொண்டான்
விதி 22: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.
எ.கா.: செல்லாக்காசு
விதி 23: இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
எ.கா.: மல்லிகைப்பூ
அவ்வளவுதான்
நண்பா…. சிறப்பாக விளங்கிக்கொண்டாய்.
இனி மகிழ்ச்சியுடன்
வலி மிகா இடங்களைப் பற்றி நாளை முதல் பார்க்க ஆரம்பிக்கலாம்.
காத்திரு.
Comments
Post a Comment