இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர்_ நாள் 18
பதினெட்டு
நண்பா… கடந்த
சில நாட்களாக வலிமிகலின் விதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு
வலிமிகலின் கடைசி விதியினைப் பார்க்கலாம்.
விதி 23: இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
எ.கா.: மல்லிகைப்பூ
முதலில் பண்புத்தொகை என்றால் என்ன எனப் பார்ப்போம்
நண்பா….
பண்புப்பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில்
ஆகிய, ஆன என்பன போன்ற பண்பு உருபுகளும், மை என்ற விகுதியும் மறைந்து வருவது பண்புத்தொகை
எனப்படும்.
எ.கா.: வெண்ணிலவு
புரிந்து கொள்ள ஒன்றும் துயரப்படாதே நண்பா….
ஒரு குறிப்பிட்ட பண்பினை விளக்குவது பண்புச்சொல்
ஆகும். பண்பினைக் குறிப்பதற்காக ஆகிய, ஆன என்பன போன்ற பண்பு உருபுகள் இருக்கின்றன.
நாம் ஏற்கனவே பார்த்த வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை
போன்றவற்றினை நினைவு படுத்திப்பார். அதில்
எப்படி உருபுகள் மறைந்து வருகின்றனவோ, அதே போல இங்கும் உருபுகள் மறைந்து வரும். அதோடு
சில பண்புப்பெயர்களில் மை என்னும் விகுதி இருப்பின் அவையும் மறைந்து வரும். இதுதான்
பண்புத்தொகை எனப்படும்.
மேலே சொன்ன எடுத்துக்காட்டினைப் பார்.
வெண்ணிலவு.
அதாவது வெண்மை ஆன நிலவு. சரியா….
வெண்மை என்பது பண்புப்பெயர். இதில் உள்ள மையும்,
ஆன என்னும் உருபும் மறைந்து வென்ணிலவு என வருவதால் இது பண்புத்தொகை. அவ்வளவுதான்….
சரி அது என்ன இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்று
பார்க்கின்றாயா…
சிறப்புப்பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும்
நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை
( இரண்டு பெயர் ஒட்டிய பண்புத்தொகை) எனப்படும்.
விளங்கியதா…?
இதற்குரிய உதாரணங்களைப் பார்க்கலாம்.
மல்லிகைப்பூ, முல்லைப்பூ, தமிழ்மொழி.
மல்லிகை
என்பது சிறப்புப்பெயர். பூ என்பது பொதுப்பெயர். இரண்டுக்கும் இடையில் பண்பு உருபு மறைந்துவருகின்றது.
புரிகின்றதா….
இவ்வாறான இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம்
மிகும் என்பது விதி.
வலிமிகல் அவ்வளவுதான் நண்பா….
வலி மிகலின் விதிகள் அனைத்தும் உனக்கு விளங்கியிருக்கும்
என்று நம்புகின்றேன்.
நாளை அனைத்து விதிகளையும் ஒருமுறை மொத்தமாய் நினைவு
படுத்திக்கொண்டு, வலி மிகா இடங்களைப் பற்றி அடுத்துப் பார்க்கத்துவங்குவோம்… காத்திரு….
Comments
Post a Comment