Emotional intelligence

உணர்வுசார் நுண்ணறிவு
இதனை ஆங்கிலத்தில் EMOTIONAL INTELLIGENCE என்பார்கள். 
நாளைக்கு ஒரு தேர்வு இருக்கும். அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். கிரிக்கெட் பார்ப்பதா… தேர்வுக்குப் படிப்பதா…? கிரிக்கெட் பார்க்கும் ஆசை ஜெயித்தால் தேர்வு கோவிந்தா…… உணர்வினைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால் கிடைக்கும் தோல்வி.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்.
குமார் ஒரு கடின உழைப்பாளி. மாதாமாதம் எப்படியாவது விற்பனை இலக்கை அடைந்து விடுவான். அவன் மேலாளர் அவனை விடச் சின்ன பையன், அவனிடம் திட்டு வாங்கி விடக்கூடாது என்ற கவனமும் ஒரு காரணம். 
ஒரு மாதம் வீட்டில் பிரச்சினை. விற்பனையில் கவனம் செலுத்தவில்லை. விற்பனை மிகவும் குறைந்து போயிற்று. அந்த மாதத்தின் ஊழியர்கள் சந்திப்பில் மேலாளர் குமாரைத் திட்ட ஆரம்பித்து விட்டார். அவருக்கு நல்லதொரு பணியாளன் இப்படி ஆகிவிட்டானே என்று வருத்தம். ஆகவே கொஞ்சம் அதிகமாகவே திட்ட ஆரம்பித்து விட்டார். 
குமாருக்கு வீட்டுப் பிரச்சினை ஒரு புறம். தன்னை விட வயதில் குறைந்தவனிடம் திட்டு வாங்குவது ஒரு புறம். இவையெல்லாம் சேர்ந்து கொதிப்பினை ஏற்படுத்த, எழுந்து பதிலுக்கு மேலாளரைத் திட்ட ஆரம்பித்து விட்டான். இந்த பிரச்சினை கடைசியாய் குமார் வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டது. 
பின்னர் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நாட்களில் குமார் யோசித்துப் பார்த்த போது அன்று அவன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாதது தவறு என உரைத்தது. அவன் அன்று மேலாளர் திட்டியதை சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்து டபுள் புரோமோசன் வாங்கி அந்த மேலாளருக்கு மேலாளராக வந்திருக்கலாம் அல்லவா….. ஏன் அது நடக்கவில்லை. காரணம் உணர்வுசார் நுண்ணறிவு குமார்க்கு குறைந்து போனதுதான்.
நமது மூளையில் உள்ள மூன்று முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம்.
1. தலாமஸ்
2. விஷுவல் கார்டெக்ஸ்
3. அமிக்தலா
இந்த அமிக்தலா என்னும் பாதாம் பருப்புதான் ( உண்மையில் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கும்) நம் உணர்ச்சிகள் அனைத்துக்கும் சொந்தக்காரர். 
இதனை மூளையில் இருந்து தூக்கிவிட்டால் உங்கள் உணர்வுகள் அனைத்தும் பூஜ்யமாகி விடும். வடிவேல் காமெடிக்குக் கூட சிரிப்பு வராது. சொந்த பாட்டி செத்தாலும் அழுகை வராது.
பொதுவாக நம் புலன் உறுப்புகள் ( கண், காது, மூக்கு, வாய், உடம்பு) உணரும் எந்த விசயமும் முதலில் தலாமஸ்க்குத்தான் போகும். அது மூளைக்கு புரிந்து கொள்ளும் பாஷையில் உணர்ச்சிகளை செய்திகளாக மாற்றி கார்டெக்ஸ்க்கு அனுப்பும். கார்டெக்ஸ் அவற்றைப் பிரித்து ரக வாரியாக அனுப்பி வைத்து செயல்படவைக்கும். இதில் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம் இருந்தால் அமிக்தலாவுக்கு அனுப்பி விடும். இதுதான் பொதுவான வழிமுறை.
ஆனால், சில ஆபத்து அல்லது உணர்ச்சி வசப்படும் நேரங்களில் தலாமஸ், உணர்ச்சி செய்திகளை கார்டெக்ஸ்க்கு அனுப்பும் போதே குறுக்கு வழியில் அமிக்தலாவுக்கு அனுப்பி விடும். கார்டெக்ஸ் யோசிக்கும் முன் அமிக்தலா உடனடியாக நம்மை செயல்படுத்தி அடி வாங்க வைத்துவிட்டு, செந்தில் போல அப்பாவியாக அமைதியாக உட்கார்ந்து கொள்ளும். அப்புறம்தான் கார்டெக்ஸ் அச்சச்சோ இப்படிப் பண்ணிட்டானே என யோசிக்கும். 
எனவே அமிக்டலாவின் குறுக்கு வழியைத் தேடிக்கண்டுபிடித்து அடைத்து விடுங்கள். 
ஆப்ரேசன் இல்லை ஐயா…. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திகொண்டால் அமிக்டலாவை நம் அடிமையாக்கி விடலாம். 
ஒருவர் எவ்வளவு பெரிய புத்திச்சலியானாலும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் இந்தத் திறன் இல்லையெனில் பெரிதாக சாதிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27