தீவிர வாசகர்கள்
ராஜேஷ்குமார் லாம் வாசிக்கமாட்டேன்…… எனக்கு ஜெயமோகன் மட்டும்தான் பிடிக்கும்
பாலகுமாரன் லாம் வேஸ்ட்…. சாருதான் பெஸ்ட்
வரலாற்று நாவல்கள் எல்லாம் வியாபார தந்திரம்….
வாரமலர் வாசகனா நீ?
சில நாட்களாய் இப்படியாய்ச் சில பகடிகளையும், பதிவுகளையும் காண முடிகிறது.
ஆனால் மஞ்சள் பத்திரிக்கை எழுத்துக்களைத் தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாமே ரசிக்கத் தகுந்தவைதான் அவரவர் நிலையில்.
ஒரு சம்பவம்.
மதுரையில் எனது முன்னாள் அலுவலகம் அருகில் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் அறிவியியல் சம்பந்தமான நிறைய விசயங்கள் சொல்லுவார். அவரின் குழந்தைகள் கூட அது போன்ற விசயங்களில் என்னிடம் உரையாடியது உண்டு.
அவர் படித்தது ஐந்தாம் வகுப்பு மட்டுமே. ஒருநாள் அவர் சொன்னார். நான் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல் வாசகர் சார். அதிலிருந்துதான் நிறைய தெரிந்து கொள்வேன். நான் கேட்டேன், அவர் கதையினில் சொல்லும் சில சமாச்சாரங்கள் கற்பனையாய் இருக்குமே. அதற்கு அவரின் பதில், இல்ல சார் ஒவ்வொரு அத்தியாயம் முன்னாடியும் சில விசயங்கள் தனியாக இருக்கும். அது எல்லாம் உண்மை. அதே மாதிரி அர்த்தமுள்ள அரட்டைன்னு ஒண்ணு இருக்கும். அதுல நெறைய விசயங்கள் சொல்லுவாரு. அதுல சொன்ன விசயங்களப் பத்தி ஏதேனும் ஒரு நாவல்ல கொஞ்சம் கற்பனையா சேர்த்து எழுதியிருப்பார், நாம் புரிஞ்சுக்கலாம்…..
இரண்டாவது சம்பவம்.
நான் இருந்த மேன்சனில் தங்கியிருந்த ஒரு விற்பனைப் பிரதிநிதி. வரலாற்றினைப் பற்றி எந்த விபரம் கேட்டாலும் குறிப்புக் கொடுப்பார். கிட்டத்தட்ட ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் அளவிற்கு அந்த விசயம் எப்படி சரி என்பதற்கு இலக்கியத்தில் ஆரம்பித்து கல்வெட்டுக்குறிப்புகள் வரை ஒப்பிட்டு பதில் சொல்வார்.
அவர் சொன்ன ஒரு விசயம். “பொன்னியின் செல்வன் படித்த பின்தான் வரலாறு குறித்த ஆர்வம் வந்து என் தேடலை ஆரம்பித்தேன்”.
மூன்றாவது சம்பவம்.
எனது ஆசிரியை. பள்ளியில் யாருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும், அறிவுரை கேட்க அவரிடம்தான் ஒதுங்குவர். நிறைய பெற்றோர்கள் கூட அவரிடம் அளவு கடந்த மரியாதையுடன் தம் பிரச்சினைகளைச் சொல்லி ஆறுதலும் தீர்வும் வாங்கிப்போவார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவரைப் போல் நாமும் ஆகவேண்டும் எனச்சொல்லிக்கொள்வேன்.
ஒருமுறை அவரின் வீட்டிற்குச் சென்றேன்.
எக்கச்சக்க புத்தகம். அவரின் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்கள் என அவர்
குறிப்பிட்டது ரமணிச்சந்திரன், பாலகுமாரன். இந்துமதி. அவர் சொன்னது இன்னும்
ஞாபகம் இருக்கிறது. இந்தக் கதைல எல்லாம் ஒவ்வொரு வாழ்க்கையைப்
பார்க்குறோம். நிறைய மனிதர்களோட வாழ்க்கை இந்தக் கதை மாதிரிதான் இருக்கு.
அவர் தீர்வு சொல்லும் ரகசியம் எனக்குப் புரிந்தது.
ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதம் எனப்புரிந்து கொள்வது தான் நலம்.
எல்லோரும் படிக்கப் பழகியிருக்கும் புள்ளி காமிக்ஸ், அம்புலிமாமா, சிறுவர்மலர் போன்றவற்றிலிருந்துதான் ஆரம்பித்திருக்கும்.
ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். அதனைச் சரியாய்ச்செய்வது மட்டும்தான் அந்த எழுத்தாளனின் வேலை.
நமக்கு இருக்கும் பெரிய பிரச்சினை என்னவென்றால், யாருமே தமது தட்டினைப் பார்த்து சாப்பிடுவது இல்லை. அடுத்த தட்டில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதுதான்.
எனக்கு தோசை பிடிக்கும் என்றால், இட்லி சாப்பிடுபவன் எல்லாம் முட்டாள் அல்ல.
அப்படிப்பார்த்தால் அவன் பார்வையில் நான் முட்டாளாய்த் தெரிவேன்.
தமிழ்ச்சூழலில் எழுதியே பணக்காரர் ஆகிவிட்டார் என்று எழுத்தாளர்களைக் கைகாட்டி விடமுடியாது.
ஒரு எழுத்தாளன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் திரைத்துறைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இங்கு உள்ளது. அதைத்தவிர அவனின் அன்றாட வாழ்விற்கு போஜனம் கொடுக்கும் அளவிற்குக் கூட எழுத்து சம்பாதித்துக் கொடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். (ஆகையால் வியாபரத்திற்காக எழுதுகிறார்கள் என்று சொல்வதே தவறு)
உங்கள் அளவிற்கு ஒரு புத்தகம் இல்லையெனில் அது வேறு யாருக்காகவோ எழுதப்பட்டிருக்கலாம், விட்டுவிடுங்கள்.
அதே போல உங்களின் அறிவிற்குக் குறைவான ( உங்கள் பார்வையில் குப்பை) புத்தகத்தினை யாரேனும் பிடித்திருப்பதாகச் சொன்னால் அவர்களைக் கிண்டல் செய்யாதீர்கள்.
எல்லோருக்கும் ஜெ.மோ.வைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ராஜேஷ்குமாரைப் படிப்பவர்கள் எல்லாம் வாசகர்கள் இல்லை என்று அர்த்தமும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், அவர்கள்தான் காசு கொடுத்துப் புத்தகம் வாங்குகிறார்கள்.
தீவிர இலக்கிய வாசகர்கள் எல்லாம்…. ப்ரோ PDF இருக்கா என்றுதான் அலைகிறார்கள்.
- நா.கோபாலகிருஷ்ணன்
மிக அவசியமானக் கட்டுரை. காத்திரமான பதில் கட்டுமானம்போல் உறுதிகொண்ட பதிவு.
ReplyDeleteஅறிவும் விசாலமும் அவரவர் சூழல் , எண்ணம் , மனம் மற்றும் அதன்நிலை சார்ந்தது.