பெண்களின்றி அமையாது உலகு.
சிறு வயதில்
சில நாட்களின் காலையில், ஐந்து மணிக்கு எழுவதுண்டு… அம்மா எழும்போது…!
பெரும்பாலும்
ஏழு மணிக்கு அம்மாவின் தாலாட்டில்தான் எழுவேன் என்பது வேறு விசயம்….
ஆனால் தினமும்
ஐந்து மணிக்கு எழும்பும் அம்மாவின் உலகம் உறக்கத்திற்குச் செல்ல பதினொன்று ஆவதைக் கண்டு
வியப்பாய் இருக்கும். நிற்காது சுழன்று கொண்டிருக்கும் அவளின் கால்களால்தான் எனது உலகம்
இயங்கத் தொடங்கியது……
தம்பிக்கு
வேண்டுமென்று, நான் நினைக்கும் எல்லாவற்றையும் கையில் கொண்டு சேர்த்த என் சகோதரிகள்…..
வீட்டிற்குள்
என்ன திண்பண்டம் கொடுத்தாலும் எனக்கென்று பங்கெடுத்து வைத்துக் காத்திருந்த என் ஒன்றுவிட்ட
தங்கைகள்…..
காய்ச்சலால்
நீண்ட ஒரு விடுமுறைக்குப் பின்னே, பள்ளிக்குச் சென்ற போது தன்னோடு சேர்த்து எனக்கும்
வகுப்புப்பாடங்களை எழுதி வைத்திருந்த ஒரு சினேகிதி…..
பாடம் புரியாமல்,
தேர்வு பயத்தில் சிக்கித் தவித்த போது கை கொடுத்துக் கரை சேர்த்த ஒரு கல்லூரித் தோழி….
கல்லூரி முடித்து
ஒன்றுமே தெரியாத , உலகமே தெரியாத மனிதனாய் வேலைக்குச் சேர்ந்து அலுவலகத்தில் விழித்துக்
கொண்டு நின்ற நேரத்தில் அரவணைத்து எல்லாம் சொல்லிக் கொடுத்த இரண்டு உடன் பிறவா சகோதரிகள்….
இன்றைக்கும்,
என் சிக்கலான நேரத்தில், நானே எதிர்பார்க்காமல் கை கொடுத்துப் போகும் என் சினேகிதிகள்….
அன்பினைத்
தவிர இது வரை வேறொன்றும் கேட்டறியாத என் மனைவி….
மாமாவென்ற
வார்த்தையினையே பாசத்தால் நிரப்பி அழைக்கும் சகோதரியின் மகள்கள்….
என் வாழ்க்கை
நிச்சயமாய் ஆசிர்வதிக்கப்பட்டது…. பெண்கள் என்னும் தேவதைகளால் சூழப்பட்டது……
எனில் நான்
சந்தித்த பெண்கள் எல்லாம் இனிப்பினை மட்டுமே தந்து போனவர்களா…?
சில நேரம்
கசப்பினையும் தந்து போயிருக்கக் கூடும். ஆனால் அதை நான்தான் கசப்பென்று சொல்லிக் கொள்கிறேன்….
அவர்கள் அதனை மருந்தாய்க் கூடத் தந்து போயிருக்கலாம்…. அதனையும் அவர்கள் மட்டுமே அறியக்கூடும்.
மனம் ஏதோ
ஒன்றை யாரிடமோ எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அவர்களை நோவது வழக்கம்தான். ஆனால்
நாம் எதிர் பார்க்கும் எல்லாவற்றையும் எதிரில் இருப்பவர் தர வேண்டும் என்ற அவசியம்
இல்லையே…..அது அன்பாகவே இருந்தாலும்….
ஆனால், உண்மையான
அன்பின் கரங்கள் எப்போதும் எதிர் நிற்கும் மனிதர்கள் எதிர் கொண்டு தழுவ வேண்டும் என்று
எதிர் பார்ப்பதில்லை.
அன்பில் வேலை
அன்பினைத் தருவது மட்டுமே………….
பெண்களைப்
பற்றிய சில ஆபாசமான கிண்டல்களைக் கடந்து போகையில் தோன்றுவது ஒன்றுதான், பெண்களின் அன்பென்னும்
மழையில் அவர்கள் இதுவரை முற்றிலுமாய் நனைந்திருக்க மாட்டார்கள்…. அவர்கள் கண்களின்
பார்வைகள் இன்னும் திறக்கவேயில்லை….
பார்க்கும்
பெண்களில் எல்லாம் காமம் மட்டுமே கிடைக்கும் என்ற மனநோயின் வெளிப்பாடுகளே அவை.
அவர்களுக்குச்
சொல்வதெல்லாம் ஒன்றுதான், காமம் தவிர்த்த ஒரு உறவு எல்லாப் பெண்களிடமும் இருக்கிறது…
அந்த அன்பின் மழையில் நனைய முற்படுங்கள்.. உங்கள் பார்வை மாறும்.
-நா.கோபால கிருஷ்ணன்
உங்களைப் போன்ற ஆண்களால் எம் இனம் கௌரவிக்கப்படுகிறது சகோ ... மாதராய்ப் பிறந்ததற்கு நான் இன்று கர்வம் கொள்கிறேன் .... நன்றிகள் கோடி சகோ ...
ReplyDeleteநன்றி சகோ
Deleteபிளாகருக்குள்ளே வந்திட்டீங்களா😃! முகநூல் ழந்த பிறகு இது மதிப்பிழந்து போச்சு. ஆனாலும் வரவேற்கிறேன்.
ReplyDeleteநன்றி சகோ. பதிவுகளைக் கோர்வையாக்கலாமே எனத் தோன்றியது. அதனால்தான் சகோ
Deleteநன்றி சகோ. பதிவுகளைக் கோர்வையாக்கலாமே எனத் தோன்றியது. அதனால்தான் சகோ
DeleteJust started to read you. What you are doing is very important Gopalakrishnan. May you have the interest, inspiration and motivation to keep going
ReplyDeleteThank you friend
Delete