பட்டா, சிட்டா, அடங்கல் - வருமானவரித்துறை ஆவணங்கள்

நான் வீட்டுக்கடன் துறையில் நுழைந்த போது, சில காலம் என்னை பயமுறுத்திய வார்த்தைகள் பட்டா, சிட்டா அடங்கல். அதன் பின் அதனைப் பற்றிப் புரிந்து கொண்டபோது இதுக்கா இவ்வளவு பயந்தோம் என வடிவேலு ஸ்டைலில் என்னை நானே திட்டிக் கொண்டேன். என் போன்ற சில நண்பர்களுக்காய் அவை பற்றிய சிறு விளக்கம்.

பட்டா:
பட்டா என்பதனை நில உரிமைச் சான்று எனச் சொல்லலாம். இது வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் ஆவணம். இதில் சர்வே எண், இடத்தின் அளவுகள் மற்றும் பரப்பளவு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

நடைமுறையில், நிலத்தினை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அதற்கேற்றார் போல் பட்டா வழங்கப்படுகிறது.

1. நஞ்சை நிலம்தண்ணீர் பாய்கின்ற விளை நிலங்கள்/வயல்கள்.
2. புஞ்சை நிலம்தண்ணீர் பாயாத மேட்டு நிலங்கள்.
3. நத்தம்வீட்டுமனை நிலங்கள்.
4. புறம்போக்குஅரசிற்குச் சொந்தமான நிலங்கள். தரிசு நிலம், மயானம், கரடு போன்ற நிலங்கள்.

சிட்டா:
பல பட்டாக்களின் தொகுப்புப் பதிவேடுதான் சிட்டா ஆகும். ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தினை யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதன் விபரம் மற்றும் அது தனிப் பட்டாவா, கூட்டுப்பட்டாவா போன்ற விபரங்கள் இதில் பதிய பட்டிருக்கும். மேலும் பட்டா எண், சர்வே எண், கிராமத்தின் பெயர், தாலுகா, மாவட்டம், உரிமையாளரின் பெயர்(தந்தையின் பெயருடன்) முதலிய விபரங்கள் விரிவாகக் குறிக்கப்பட்டிருக்கும்.
இது கிராம நிர்வாக அலுவலரால் (Village Administration Officer – VAO) பராமரிக்கப்படுவது. இதன் நகலானது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்படும்.

அடங்கல்:
ஒரு குறிப்பிட்ட நிலத்தில் என்ன இருக்கிறது என்று பதிவு செய்யும் ஆவணம்
அடங்கல். இது ஆண்டு வாரியாகப் பராமரிக்கப்படுகிறது.
விவசாய நிலமாக இருந்தால் விவசாயப் பயிர்களின் விபரம், அறுவடை நாள் மற்றும் மாதம், சாகுபடி விபரம் போன்றவற்றினைப் பதிந்து வைப்பார்கள். மற்ற நிலங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள் போன்றவை இருந்தால் அவற்றினைப் பற்றிய விபரங்கள் பதியப்படும்.

-பதிவேடு (A-Register):
-பதிவேடு என்பது கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் குறிப்பேடு. ஒவ்வொரு நிலத்துண்டின் பரிமாற்றங்களும் இதில் பதியப்படும். பொதுவாக சிட்டா விபரங்கள் அனைத்தும் இதில்தான் பதியப்படும்.

எஃப்.எம்.பி. ஸ்கெட்ச் (FMB Sketch):
எஃப்.எம்.பி. ஸ்கெட்ச் என்பது சர்வே எண்களுடன் வரையப்பட்ட வரைபடம். இதன் மூலம் ஒரு நிலத்துண்டின் அமைப்பினை எளிதாக அளந்து கொள்ளலாம். இதுவும் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு