வீட்டுக்கடன் வட்டி விகிதம் - தெரிந்துகொள்ளுங்கள்
வீட்டுக்கடனில் குழப்பம் தரும் முக்கியமான விசயம் வட்டி விகிதம் (Interest rate)
வட்டி என்பதினைப் பொருத்த வரை, உங்களைக் குழப்புவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. நிலையான வட்டி விகிதம் என்பார்கள். மாறுபடும் வட்டி விகிதம் என்பார்கள். டிம்னிஷிங்க் ரேட் என்பார்கள். அரியர் ஸ்கீம் என்பார்கள். (நமக்குத் தலை சுற்றிக் கீழே விழும் வரை விட மாட்டார்கள்! )
ஒன்றும் பெரிய விசயங்கள் இல்லை. மொத்தம் மூன்று பிரிவுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
1. நிலையான வட்டி விகிதம்(Fixed Rate) X மாறுபட்ட வட்டி விகிதம்(Floating Rate).
2. ஃப்ளாட் ரேட்(Flat Rate) X டிம்னிஷிங் ரேட்(Diminishing Rate)
3. அரியர் ஸ்கீம்(Arrear Scheme) X அட்வான்ஸ் ஸ்கீம்(Advance Scheme).
இப்பொது இந்த ஜோடிகளை ஒப்பிட்டால் சுலபமாய் விளங்கி விடும்.
நிலையான வட்டி விகிதம்(Fixed Rate) VS மாறுபட்ட வட்டி விகிதம்(Floating Rate).
இது வட்டி சதவிகிதத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரிவு என்று சொல்லலாம்.
ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வட்டியில் கடன் வாங்கினால், உங்கள் கடனுக்குரிய காலம் முடியும் வரை அந்த வட்டியில் மாற்றம் இருக்காது. அது ஃபிக்ஷெட் ரேட்.
சில வருடங்களுக்கு முன்னே வீட்டுக்கடன் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தில், அனைத்து நிறுவனங்களுமே முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், வட்டியினைக் குறைக்க ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக, புதிதாக வீட்டுக்கடன் வங்குபவர்கள் மிகுந்த பயன் அடைந்தனர். ஆனால், முன்னர் கடன் வாங்கியவர்கள் இன்னும் பழைய அதிக வட்டிக்கே கடனைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அப்படியான சூழலில்தான் ஃப்ளோட்டிங் ரேட் எனப்படும் மாறுபட்ட வட்டி விகிதம் அதிகப்படியான புழக்கத்திற்கு வர ஆரம்பித்தது.
இந்த முறையில் கடன் வாங்கினால், சந்தையில் வட்டி விகிதம் குறையும் போது உங்கள் கடனுக்கான வட்டியும் குறையும். ஒருவேளை அதிகரித்தால், இதுவும் அதிகரிக்கும். இதுதான் விசயம்........... நிலையான வட்டி விகிதத்தில், உங்கள் கடனுக்குரிய வட்டி கடைசி வரை மாறாது. மாறுபடும் வட்டி விகிதத்தில் சந்தைக்கேற்றது போல் மாறிக்கொண்டேயிருக்கும்.
ஃப்ளாட் ரேட்(Flat Rate) VS டிம்னிஷிங் ரேட்(Diminishing Rate)
இது வட்டி கணக்கிடும் முறையினை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுவது.
ஃப்ளாட் ரேட் வட்டி விகிதமானது பெரும்பாலும் (முற்றிலுமாக என்று கூட சொல்லலாம்) வீட்டுக்கடன் நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்படுவதில்லை. இருசக்கர வாகனக்கடன் போன்ற குறுகிய கடன்களுக்குத்தான் இம்முறையானது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
ஃப்ளாட் ரேட் வட்டி கணக்கிடும் முறையில், மொத்த தவணைக் காலத்திற்கும் மொத்தமாய் வட்டி கணக்கிடப்பட்டு அது அசலுடன் சேர்க்கப்படுகிறது. இதை மாதாமாதம் சரிசமமாகப் பிரித்து தவணையாகச் செலுத்த வேண்டும்.
இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு சிறிய கணக்கீட்டைப் பார்க்கலாம்.
ஒரு லட்ச ரூபாய், 19.99% வருட வட்டியில் கடனாகப் பெருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 3 வருடங்களில் (36 மாதத் தவணைகள்) திருப்பிச் செலுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். இப்போது ஃப்ளாட் ரேட் கணக்கீட்டின் படி, பின்வருமாறு தவணைத்தொகையினை முடிவு செய்வார்கள்.
மூன்று வருடங்களுக்கான வட்டி – ரூ.1,00,000 X 19.99% X 3வருடங்கள் – ரூ59,970. அசல் ரூ1,00,000 ஆக மொத்தம் ரூ1,59,970 னை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். உங்களின் தவணைக்காலம் 36 மாதங்கள். எனவே உங்கள் தவணைத்தொகை (ரூ1,59,970/36மாதங்கள்) – ரூ4,444.
இப்போது, டிம்னிஷிங் ரேட் பற்றிப் பார்க்கலாம்.
ஃப்ளாட் ரேட் கணக்கீட்டினைப் பார்த்த போது உங்களுக்குப் புரிந்திருக்கும் தவணைத் தொகை (EMI) என்பது அசலும் வட்டியும் சேர்த்து திருப்பிக் கட்டுவது என்று. அதுதான் மிக முக்கியம்.
ஃப்ளாட் ரேட்டைப் பொருத்தவரை, நம் தவணைத்தொகையில் உள்ள அசல் பகுதி பெரிதாய் நமக்கு உதவுவது இல்லை. ஆனால் டிம்னிஷிங் ரேட்டைப் பொருத்த வரை இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் தவணை செலுத்தும் பொழுது அதில் உள்ள அசல் தொகையானது நேரடியாக உங்கள் அசலில் கழிக்கப்படும். அதனால் என்ன பயன் என்ற கேள்வி மனதில் வரும்.
முதல் மாதம் உங்கள் கடன் தொகையிலிருந்து அந்த மாதத்திற்கானத் தவணைத் தொகையின் அசல் கழிக்கப்பட்டால், இரண்டாவது மாதம் உங்கள் கடன் நிலுவைத்தொகை கண்டிப்பாய்க் குறைந்திருக்கும் அல்லவா.... அப்படியென்றால் இரண்டாம் மாதத்தில் வட்டி குறையும் அல்லவா..... அதுதான் விசயம்.
இரண்டாம் மாதத்தில் வட்டி குறையும் பொழுது, தவணைத்தொகையில் உள்ள அசல் பகுதி தானாகவே அதிகரிக்கும். அதனால் அந்த மாதத்தில் உங்கள் கடன் நிலுவை சற்றே அதிகமாகக் குறையும். இப்படி ஒவ்வொரு மாதமும் உங்கள் தவணைத் தொகையில் உள்ள வட்டிப் பகுதி குறைந்து கொண்டே செல்ல அசல் பகுதி அதிகரித்துக் கொண்டே செல்லும்.
இந்த முறையின் இன்னொரு முக்கியமான பயன் என்னவென்றால், கடன் காலத்தின் இடையில் எப்போதேனும், நீங்கள் கடனை முடித்துக் கொள்ள விரும்பினால் அன்றைய தேதியில் உள்ள கடன் நிலுவைத் தொகையினைச் செலுத்தினால் போதும்
டிம்னிஷிங்க் ரேட்டில் மூன்று முறைகள் உள்ளன.......... டெய்லி ரெஸ்ட்(Daily Rest) , மன்த்லி ரெஸ்ட்(Monthly Rest) மற்றும் இயர்லி ரெஸ்ட்(Yearly Rest).
இது ஏதோ பெரிய விசயம் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் தவணைத் தொகையில் உள்ள அசல் பகுதியானது உங்கள் கடன் நிலுவைத்தொகையில் கழிக்கப்பட்டு, அடுத்த மாதத்தில் அதற்கான வட்டி குறைக்கப்படும்......இதுதான் மன்த்லி ரெஸ்ட். அதாவது மாதம்தோறும் குறையும் திட்டம். இயர்லி ரெஸ்ட் என்பதில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நீங்கள் கட்டிய அசல் பகுதி கடன் நிலுவையில் கழிக்கப்படும். அது வருடந்தோறும் குறையும் திட்டம். டெய்லி ரெஸ்ட் என்பது தினசரி குறையும் திட்டம்.
இன்றைய நடைமுறையினைப் பொருத்தவரை, மன்த்லி ரெஸ்ட் எனப்படும் மாதம்தோறும் குறையும் திட்டம்தான் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது.
அரியர் ஸ்கீம்(Arrear Scheme) VS அட்வான்ஸ் ஸ்கீம்(Advance Scheme):
இது தவணைத் தொகையினை செலுத்தும் முறையினைப் பொருத்து சொல்லப்படும் பிரிவு.
அந்தந்த மாதங்களின் தவணையை அதே மாதத்தில் செலுத்துவதை அட்வான்ஸ் ஸ்கீம் என்றும் நடப்பு மாதத்தின் தவணையை அடுத்த மாதத்தில் செலுத்துவதை அரியர் ஸ்கீம் என்றும் சொல்லுவார்கள்.
இவ்வளவுதான் விசயம்.........
இனி யாரும் உங்களை டிம்னிஷிங், மன்த்லி ரெஸ்ட், அரியர் ஸ்கீம் என்று பயமுறுத்த முடியாது என்று நம்புகின்றேன்.
-நா.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment