இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் - நாள் 9

ஒன்பது

நலம்தானே நண்பா…..

கடந்த எட்டு நாட்களாக நாம் எழுத்துக்களின் இலக்கணம் குறித்த அடிப்படை விசயங்களைப் பார்த்தோம்.

இனி நாம் சொற்கள் குறித்த சில அடிப்படை இலக்கணமும் தெரிந்து கொள்வது நலம்.

இன்றைக்கு நாம் திணை, பால், எண், இடம் ஆகியவை பற்றிய விளக்கத்தினைப் பார்ப்போம்.

இதனை எதற்காக இப்போது பார்க்கவேண்டும் என்று கேட்கின்றாயா…?

சொல்கிறேன்.

எழுத்துக்களின் இலக்கணம் அறிவதன் மூலம் ஒற்றுப்பிழை, மயங்கொலிப்பிழை  முதலான எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க இயலும்,

சொற்களின் இலக்கணம் அறிவதன் மூலம் வாக்கியங்கள் அமைக்கும்போது நாம் ஏற்படுத்தும் பிழைகளைத் தவிர்க்க இயலும்.

முக்கியமாக, திணை, பால், எண், இடம் ஆகியன குறித்த முறையான அறிதல் இருந்தால் பெருவாரியான வாக்கியப்பிழைகளைத் தவிர்க்கலாம்.

வா….. ஒவ்வொன்றினைக் குறித்தும் பார்ப்போம்.

திணை

 திணை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள்.

இது உயர்திணை, அஃறிணை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒன்றும் குழப்பிக்கொள்ளாதே…. சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்.

      யார் என்ற கேள்விக்கு விடையாக வருவது உயர்திணை.

      உதாரணம்: முருகன்

      என்ன என்ற கேள்விக்கு விடையாக வருவது அஃறிணை

      உதாரணம்: பசு

பால்:

திணையின் உட்பிரிவினைப் பால் என்று அழைக்கிறோம்.

பால் என்றால் தன்மை அல்லது பகுப்பு என்று பொருள் கொள்ளலாம்.

இது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்.

     ஆண்பால் என்பது ஒரு ஆணைக் குறிப்பது – எ.கா.: கண்ணன்

     பெண்பால் என்பது ஒரு பெண்ணைக் குறிப்பது – எ.கா.: மலர்விழி

     பலர்பால் என்பது பலரைக் (உயர்திணை) குறிப்பது – எ.கா.: மக்கள்

     ஒன்றன்பால் என்பது ஒரு அஃறிணைப் பொருளைக் குறிப்பது – எ.கா.: மரம்

     பலவின்பால் என்பது பல அஃறிணைப் பொருட்களைக் குறிப்பது – எ.கா.: மரங்கள்

எண்:

எண் என்பது எண்ணிக்கையினைக் குறிப்பது

இது ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

ஒருமையைப் பன்மையாக மாற்ற “கள்” என்னும் விகுதியினைச் சேர்க்கவேண்டும்

இடம்:

இடம் என்பது சொற்கள் வழங்குவதற்குரிய இடம்.

இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

      பேசுபவன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பது தன்மை எனப்படும். 

      உதாரணம்: நான், யான் (தன்மை ஒருமை),

                             நாம், நாங்கள், யாம் ( தன்மைப் பன்மை)

 

        முன் நிற்போரைக் குறிப்பது முன்னிலை எனப்படும்

         உதாரணம்: நீ  (முன்னிலை ஒருமை)

                                 நீங்கள் ( முன்னிலைப் பன்மை)

        தன்மை, முன்னிலை இல்லாத மற்ற எல்லோரையும் குறிப்பது படர்க்கை ஆகும்.

        உதாரணம்: அரசன், அரசி ( உயர்திணை ஒருமை)

                                மக்கள் (உயர்திணைப் பன்மை)

                                மாடு ( அஃறிணை ஒருமை)

                                மாடுகள் (அஃறிணைப் பன்மை)

இடம் குறித்த விளக்கம் புரிந்ததா நண்பா…. இல்லையெனில் கீழே உள்ள வாக்கியத்தினைப் பார்.

“நான் கொடுத்ததை நீ அவனுக்குக் கொடு”

இதில் ‘நான்’ என்பது தன்மை. ‘நீ’ என்பது முன்னிலை. ‘அவன்’ என்பது படர்க்கை  

அவ்வளவுதான் விசயம் நண்பா.

 இன்றைக்குப் பாடம் அவ்வளவுதான் நண்பா.

இன்றைய பாடம் மிக எளிதாகவே இருந்திருக்கும். ஆனால் இது முக்கியமான பாடம் என்பதனை மறந்து விடாதே.

“நீ வந்தாய்” என்று சொல்வதற்குப் பதில் “நீ வந்தது” என்று சொன்னால், “நான் என்ன மாடா” என என்னை அடிக்க வந்துவிடுவாய் அல்லவா….. அதனால்தான் சொன்னேன் இது மிக முக்கியம் என்று.   

ஒருமுறை கீழே உள்ள வரைபடத்தினைப் பார்த்து மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்.


Comments

  1. அருமையான, மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கம் சகோ.. தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27