இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 8

எட்டு

வணக்கம் நண்பா…..

இன்றைக்கு முதல், இடை மற்றும் இறுதி நிலை எழுத்துக்களைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.

அதாவது ஒரு வார்த்தையின் முதலில், இடையில் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள் எவை எவையென்று பார்க்கப்போகின்றோம்.

நாம் நேற்றுப் பார்த்த நட்பு எழுத்துக்கள் மற்றும் மெய்மயக்கத்தினை ஞாபகப்படுத்திக்கொள். அது இங்கே உனக்கு உதவும்.

முதலில், ஒரு வார்த்தைக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றிப் பார்த்துவிடலாம்.

முதல் எழுத்து

ஒரு சொல்லின் முதல் எழுத்தாக  மொத்தம் 22 எழுத்துக்கள் (வரிசை) மட்டுமே வரும்.

                 உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் முதல் எழுத்தாக வரும்.

                 மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனி மெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வராது.

                 உயிர் மெய்யில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசையில் உள்ள எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும். வரிசை என்று சொல்லும் போது அதில் உள்ள 12 எழுத்துக்களையும் குறிக்கும். ( உதாரணமாக க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கொ, கௌ ஆகிய அனைத்தும் )

                 உயிர் மெய்யில் ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசையில் உள்ள எழுத்துக்களும்   முதல் எழுத்தாக வராது.

                ஆய்த எழுத்து முதல் எழுத்தாக வராது.

அடுத்து சொல்லின் இடையில் வரும் எழுத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

இடை எழுத்து

                க்,ச்,த்,ப் ஆகிய மெய்யெழுத்துக்களை அடுத்து அவற்றின் உயிர்மெய் மட்டுமே வரும். (நேற்றுப் பார்த்த உடனிலை மெய் மயக்கம் ஞாபகம் உள்ளதா நண்பா…?)  - உதாரணம் : பக்கம், வருத்தம்

                ர், ழ்  ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் உயிர் மெய்கள் வராது ( வேற்று நிலை மெய் மயக்கத்தை ஞாபகம் கொள் நண்பா) – உதாரணம்: சார்பு, வாழ்வு

                 கர வரிசையில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் ( அதாவது ட, டா, டி, டீ, டு, டூ, டெ, டே, டை, டொ, டோ, டௌ ) ‘ட்’ மற்றும் ‘ண்’ க்குப் பின்னால் மட்டுமே வரும் ( இனிமேல் சண்டை க்கு ரெண்டு சுழி ‘ன்’னா அல்லது மூன்று சுழி ‘ண்’ ணா என்று சண்டையிட்டுக்கொள்ள மாட்டாயே நண்பா…?) – உதாரணம் : எட்டு, சண்டை

              கர வரிசை உயிர்மெய்கள் (ற, றா….)  ற், ன் ஆகிய மெய்களை அடுத்து மட்டுமே வரும். – உதாரணம்: வெற்றி, மன்றம்

              ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும் ( நேற்றுப் பார்த்தோமே நண்பா….).அதாவது இந்த மெய்யினை அடுத்து க்,ச்,த்,ப்,ங்,ஞ்,ந்,ம் ஆகிய மெய்களும் சேர்ந்து வரும். – உதாரணம் : காய்ச்சல், வாழ்த்து.

            தனிக்குறில் எழுத்தை அடுத்து ( அதாவது ஒரே ஒரு குறில் எழுத்தினை அடுத்து ) ர், ழ் ஆகிய மெய்கள் வராது.

 சரியா நண்பா….

முதல் மற்றும் இடையில் வரும் எழுத்துக்களைப் பற்றிப் பார்த்து விட்டோம். அடுத்ததாக என்ன இறுதி எழுத்துக்கள்தானே… வா அதனையும் பார்த்து விடலாம்….

இறுதி எழுத்துக்கள்

             உயிர் எழுத்துக்கள்  பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

             நண்பா நன்றாக நினைவில் வைத்துக்கொள். உயிர் எழுத்துக்கள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் வடிவமாகவே  ( அதாவது க, ச, தா, மி …. என்பன போல)  சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.  அதே போல, ‘எ’ என்னும் குறில் எழுத்து அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். (அளபெடை ஞாபகம் உள்ளதா…. இல்லையெனில் நான்காம் நாள் பாடத்தினை மீண்டும் பார் ….. அளபெடை – மாத்திரையினை அதிகரித்தல்)      

           புரிந்ததா….?

           மெய் எழுத்துக்களில் ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்னும் பதினோரு எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்.

           ஞாபகம் வைத்துக்கொள் ‘க்,ச்,த்,ப்,ட்,ற்’ ஆகிய வல்லின மெய் ஆறும், ‘ங்’ என்ற மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வராது.

           அடுத்ததாக இலக்கண வழக்கப்படி குற்றியலுகர எழுத்தினையும் இறுதி எழுத்துக்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். ( குற்றியலுகரம் நினைவில் உள்ளதா நண்பா…. இல்லையெனில் நாம் ஆறாம் நாள் படித்துப் பார்த்த பாடத்தினை எடுத்துப்பார்த்து குறுமை+இயல்+உகரம் என்பதனை மீண்டும் நினைவுபடுத்திக்கொள் )

        இப்படியாக உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்களில் 11 மற்றும் குற்றியலுகரம் சேர்த்து மொத்தம் 24 எழுத்துக்கள் சொற்களுக்கு இடையில் வரும்.

        புரிந்து கொண்டாயா நண்பா எவை எவை முதலில் வரும் , எவை எவை இடையிலும் இறுதியிலும் வரும் என்று….?

         இன்றைய பாடத்தை மீண்டும் ஒருமுறை அசைபோட்டுப்பார்……. நாளை சந்திப்போம் ……



 

-    



Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27