இலக்கணம் கற்போம்... பிழைகளைத் தவிர்ப்போம் - தொடர் - 1

முன்வாசல்

தமிழ் இலக்கணம் பள்ளியில் படித்த காலத்தோடு போயிற்று.

தொடர்ச்சியாகத் தமிழில் எழுதும் வழக்கமும் கல்லூரியில் காணாமல் போனது.

பின்னாட்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுத அமரும்போதெல்லாம், மனசுக்குள் ஒரு சிறிய பயம் இருக்கும். ஒற்றுப்பிழை எங்கேனும் இருக்கிறதா… வாக்கியப்பிழைகள் எங்கேனும் இருக்கிறதா எனத் தேடித்தேடிச் சரி செய்தாலும், சில பிழைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

அப்போதெல்லாம் தொடர் வாசிப்பு பிழைகளைக் குறைக்க உதவியது.

(ஆனால் இப்போது சில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் பிழையான தமிழைப் பார்க்கையில், நாம் கற்றுக்கொண்டதும் மறந்து விடும் போல் உள்ளது)

பின்னர், ஒரு முழு முயற்சியாகத் தமிழ் இலக்கணம் கற்றுக்கொள்ளலாம் என்று,  தொல்காப்பியம் மற்றும் நன்னூலில் ஆரம்பித்து சில தங்கிலீஷ் இலக்கணப்புத்தகம் வரை மல்லுக்கட்டிக் கொஞ்சமே கொஞ்சமாய்த் தெரிந்து கொண்டாயிற்று.

தமிழ் இலக்கணம் உண்மையில் மற்றவர்கள் சொல்வது போலக் கடினமான ஒன்றில்லை… படிக்கப் படிக்க இனிமையாகவே இருக்கின்றது. ஆனால் அதன் ஆழம் சென்று தொடுவதுதான் ஒரு சுவையான சவாலாய்க் கண்முன் நிற்கின்றது.

 கிண்டில் மின்னூலுக்காக “தமிழ் இலக்கணம்” பற்றி எழுதியபோதுதான் புரிந்தது, தமிழ் இலக்கணத்தின் வாசலுக்குள் மட்டுமே நுழைந்திருக்கிறோம், இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும் என்று.

இலக்கணம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததே பிழைகளைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகத்தானே…. அதனால், பிழைகளைத் தவிர்ப்பது குறித்து நேரடியாகவே எழுதலாமே என்று யோசித்ததன்  முனைப்புதான் இந்தத் தொடருக்கான ஆரம்பம்.

உள்ளே நுழையும் முன் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நான் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழைக்கற்றுக்கொள்ள முயலும் மாணவன்தான். எனக்காக நான் எடுத்துக்கொண்ட குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கும் உதவும் என்று நம்புகின்றேன். எனவே ஒரு சக மாணவனோடு பயணப்படுவதைப்போல நினைத்துக்கொண்டு என்னோடு பயணப்படுங்கள்.

**********

ஒன்று

இரண்டு நூல் ஐந்து இலக்கணம்

நண்பா, தமிழ் இலக்கணம் ஒன்றும் பெரிய கடினமான விசயம் இல்லை. முதலில் இரண்டு புத்தகம் சொல்கிறேன் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தொல்காப்பியம், நன்னூல்.

இது இல்லாமல் இலக்கணநூல்கள் என்று பெரிய வரிசையே இருக்கிறது. அது நமக்கு வேண்டாம்.

முதலில் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம். இது நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

நீங்கள் நினைப்பது போல இதுதான் தமிழுக்கு இலக்கணம் வகுத்த நூல் கிடையாது. இது ஒரு தொகை நூல்தான்.

அதாவது அதற்கு முன்னரே சொல்லப்பட்டிருந்த தமிழுக்கான இலக்கணங்களைத் தொகுத்து வழங்கிய நூல்.

இது எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

பொருள் இலக்கணத்திலேயே யாப்பு மற்றும் அணி இலக்கணம் சேர்க்கப்பட்டிருந்தது

அதற்குப்பின்னால் பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் நன்னூல் என்ற இலக்கணநூலை எழுதினார்.

நன்னூல் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறிய நூல். ( எப்படி நாம் தேர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் படிப்போமோ அதுபோல) எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களை இந்நூல் விவரித்துள்ளது.

அவ்வளவுதான்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகையில் உள்ளது.

1.       எழுத்து இலக்கணம்

2.       சொல் இலக்கணம்

3.       யாப்பு இலக்கணம்

4.       அணி இலக்கணம்

5.       பொருள் இலக்கணம்

இது எல்லாம் என்ன? இவற்றைக் கற்றபின்தான் பிழைகளைக் குறைப்பது பற்றிப்பேசமுடியுமா என யோசிக்கின்றாயா நண்பா….?

நன்றாக யோசி … நாளை விடை கொடுக்கிறேன்…..

 

-         நா.கோபாலகிருஷ்ணன்


Comments


  1. நன்றி சகோ. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான ஆரம்பம் சகோ.. தொடருங்கள்

    ReplyDelete
  3. தமிழ் இலக்கணம் மிகவும் தேவையானது அதை தெரிந்துகொள்ள இதுபோன்ற ஒரு முயற்சி எங்களுக்கு ஊக்கமளிக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு