இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 17

பதினேழு

நண்பா…. வினையெச்சம் குறித்து நேற்றுப் பார்த்தவை நினைவில் இருக்கின்றதா…? இல்லையெனில் மீண்டும் நினைவுபடுத்திக்கொள். இன்றைக்குப் பார்க்கப்போகும் மூன்று விதிகளும், நேற்றைய பாடத்தின் அடிப்படையில் அமைந்தவைதான்.

வா …..வலிமிகலின் அடுத்த விதிகளைக் காண்போம்.

விதி 20:  இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்

      எ.கா.: ஓடிப்போனான்

       ஓடி என்பது வினையெச்சச் சொல் ஆகும். இது ‘இ’ (ட்+இ = டி) யில் முடிந்துள்ளதால் இங்கே வல்லினம் மிகும்.

விதி 21: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

     எ.கா.: கேட்டுக்கொண்டான்

      கேட்டு என்பது வினையெச்சச்சொல் என்பதனை அறிவோம். அது என்ன வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதுதானே உன் கேள்வி நண்பா….?

குற்றியலுகரம் பற்றி ஆறாம் நாள் பாடத்தில் படித்தோமே நினைவில் உள்ளதா..?

ஆம்… குறுமை + இயல் + உகரம். அதாவது குறுகிய ஓசையினை உடைய உகரம்.

சரிதானே..

இந்தக் குற்றியலுகரமானது இறுதி எழுத்துக்கு முன்னால் வரும் எழுத்தினைப் பொருத்து ஆறு விதமாகப் (நெடில் தொடர், ஆய்தத்தொடர், உயிர்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர்) பிரிக்கப்படுகின்றது.

வன்றொடர்க் குற்றியலுகரமென்றால் அந்தச் சொல்லின் இறுதி எழுத்துக்கு முன்னால் உள்ள எழுத்து வல்லினமாக (க்,ச்,த்,ட்,ப்,ற்) இருக்கும் என்று பொருள்.

‘கேட்டு’  என்ற வார்த்தையில் இறுதியாக உள்ள குற்றியலுகர எழுத்துக்கு முன்னால் உள்ள ‘ட்’ என்பது வல்லினம்.

புரிகின்றதா….?

இப்படி வன்றொடர்க்குற்றியலுகரமாக வரும் வினையெச்சத்தில் வல்லினம் மிகும் என்பதுதான் இந்த விதி.

 

விதி 22: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

         எ.கா.: செல்லாக்காசு

  செல்லாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம் என்பது உனக்குத்தெரியும்.

  ‘த’ கெட்டு செல்லா என இருக்கும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகுந்திருக்கின்றது.

சரிதானே நண்பா…. புரிந்து கொண்டாயா…

நாளை வலிமிகுதலின் கடைசி விதியினைப் பார்க்கலாம்.

காத்திரு….

 


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27