இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 16

பதினாறு

என்ன நண்பா நலம்தானே….

வலி மிகுதலின் அடுத்தடுத்த விதிகளைப் பார்க்கத் தயாராகி விட்டாயா…?

அவற்றைப் பார்க்கச் செல்லும் முன் இன்றைக்கு இன்னும் சில புதிய பொருள்களைக் கற்றுக்கொள்ளலாம் நண்பா. அதன்பின்னே மீதம் உள்ள விதிகளைப் பார்ப்போம்.

இன்றைக்கு வினையெச்சம் என்பது குறித்துப் பார்த்துவிடலாம்.

முதலில் வினைச்சொல் என்றால் என்ன …?

ஒரு செயலைக்குறிக்கும் சொல் வினைச்சொல் … சரிதானே…

அதாவது ஒன்றன் தொழிலை உணர்த்தி, காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

இதனை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒரு தொழிலைக் குறித்து வந்து முற்றுப்பெற்ற சொல் முற்றுவினை எனப்படும்

எ.கா.: எழுதினான்

முழுமையாக முடிவுறாமல் நிற்கும் வினைச்சொல்லானது எச்சவினை எனப்படும்.

எ.கா.: படித்த.

புரிந்ததா….?

இப்போது இந்த எச்சவினையை மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.

அவை வினையெச்சம், பெயரெச்சம்.

முடிவுறாமல் நிற்கும் இந்த எச்சவினையானது ஒரு வினையைக் கொண்டு முடியும் படி அமைந்திருந்தால் அது வினையெச்சம்.

எ.கா.: வந்து போனான்

இங்கே, வந்து என்ற எச்சவினையானது போனான் என்ற வினைச்சொல்லினைக் கொண்டு முடிக்கப்படுவதால், இது வினையெச்சம்.

அதே போல முடிவுறாமல் நிற்கும் எச்சவினையானது ஒரு பெயரைக் கொண்டு முடியும் படி அமைந்திருந்தால் அது பெயரெச்சம்

எ.கா.: படித்த பையன்

இங்கே படித்த என்ற எச்ச வினையானது பையன் என்ற பெயரினைக் கொண்டு முடிவதால், இது பெயரெச்சம்.

( படித்த என்ற இந்த எச்சவினையினை வேறு எந்த வினைச்சொல்லினைக் கொண்டும் முடிக்கமுடியாது. முயன்று பார் நண்பா….)

அடுத்ததாக இன்னொரு முக்கியமான பொருள் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது.

பெயரெச்சம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியும். எதிர்மறைப் பொருளில் வரும் பெயரெச்சமானது எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

எ.கா.: படிக்காத

இந்த எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து கெட்டு (அதாவது கடைசி எழுத்து இல்லாமல்) வருவது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

அவ்வளவுதான் நண்பா, விளங்கிக்கொண்டாயா…?

நன்று…. நாளை மீண்டும் சந்திப்போம் … 

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27