இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 15

பதினைந்து

வா நண்பா…. கடந்த சில நாட்களாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வலி மிகல் விதிகளில் சுலபமான இன்னும் இரண்டு விதிகளை இன்று பார்த்துவிடலாம்.

விதி 18: உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

          எ.கா.: மலர்ப்பாதம்

விதி 19: உருவகத்தில் வல்லினம் மிகும்

          எ.கா.: தமிழ்த்தாய்

அது என்ன உவமை மற்றும் உருவகம் என்று கேட்காதே…. அடுத்து அதற்குத்தான் வருகின்றேன்.

நேற்று நாம் இருவரும் உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் நீ என்ன சொன்னாய்  என்று நினைவில் இருக்கின்றதா….?

“பூ போல இட்லி இருக்கு…”

அதாவது இட்லியின் மென்மைத்தன்மையைக் காட்டுவதற்காக பூவினை ஒப்பிட்டுக்கூறினாய் அல்லவா….

அதுதான் உவமை நண்பா…

போல என்ற சொல்லினை பயன்படுத்தினாயே, அதனை உவம உருபு என்போம்.

தமிழில் உள்ள உவம உருபுகளைக் கீழே கூறியுள்ளேன். அவற்றையும் உன் அறிவினை விரிவு செய்யத்தெரிந்துகொள்.

“போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன”

சரி உவமை என்பது புரிகின்றது. அது என்ன உவமைத் தொகை என்பதுதானே உன் அடுத்த கேள்வி? வா… சொல்கிறேன்.

பன்னிரண்டாம் நாள் பாடத்தில் வேற்றுமைத்தொகை என்பதனைக் குறித்துப் பார்த்தோம், நினைவில் உள்ளதா….?

வேறுமை உருபு வெளிப்படையாக வராமல் மறைந்து வருவது வேற்றுமைத்தொகை எனப்படும். சரிதானே…. அதேதான் இங்கும்…

உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

அதாவது முத்துப் போன்ற பல் என்று சொன்னால் அதனை விரி உவமை என்றும் , முத்துப்பல் என்று சொன்னால் அதனை உவமைத்தொகை ( அல்லது தொகைஉவமை) என்றும் சொல்வார்கள்.

இவ்வாறான உவமைத்தொகையில் வல்லினம் மிகும் என்பதுதான் விதி.

அடுத்ததாக உருவகம்.

உவமை (ஒப்பிட்டுக்கூறப்படும் பொருள்) வேறு, உவமானம்  (உவமையால் விளக்கப்படும் பொருள்) வேறு என்று தோன்றாத வகையில் சொல்லப்படுவது உருவகம் ஆகும்.

உவமையில், உவமை முன்னாலும் உவமேயம் பின்னாலும் வரும்.

உருவகத்தில் உவமேயம் முன்னாலும், உவமை பின்னாலும் வரும்.

இன்னும் நீ சரியாகப் புரிந்துகொள்ள, கீழ்க்கண்ட விளக்கத்தினைப் பார்.

‘மதி போன்ற முகம்’ என்பது விரிஉவமை

‘மதிமுகம்’  என்பது உவமைத்தொகை

‘முகமதி” என்பது உருவகம்.

அவ்வளவுதான் நண்பா…. உருவகம் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்த உருவகத்தில் வல்லினம் மிகும் என்பது விதி.

சரியா நண்பா…. புரிந்து கொண்டாயா….

இன்னும் சில விதிகளுடன் நாளை சந்திக்கலாம்….. காத்திரு…..


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27