இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 14

பதிநான்கு

என்ன நண்பா நலம்தானே…

நேற்றுப் பார்த்த விதிகளெல்லாம் மிகச்சுலபமாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

இன்றைக்கும் சுலபமான சில விதிகளைப் பார்க்கலாம்.

விதி15: ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

       எ.கா.: பூப்பந்தல்.

அது என்ன ஓரெழுத்து ஒருமொழி என்று பயந்துவிடாதே….ஒரு சொல் என்பது பல எழுத்துக்கள் சேர்ந்தது என்று நீயறிவாய். அவை மட்டுமல்லாது ஒரு எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருவதும் உண்டு. அவ்வாறு தமிழில் மொத்தம் 42 சொற்கள் உள்ளன. இவை ஓரெழுத்து ஒருமொழி என அழைக்கப்படும்.

இவ்வாறு வரும் ஒற்றை எழுத்துச் சொற்களோடு, வல்லினம் சேரும் போது அது மிகும் என்பதுதான் இந்த விதி.

தமிழில் உள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிச்சொற்களைக் கீழே கொடுத்திருக்கிறேன் நண்பா…. தெரிந்து கொள்… உன் அறிவினை விரிவு செய்துகொள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, கா, கூ, கை, கோ, சா, சீ, சே, சோ, தா, தீ, தூ, தே, தை, நா, நீ, நே, நை, நோ, பா, பூ, பே, பை, போ, மா, மீ, மூ, மே, மை, மோ, யா, வா, வீ, வை, வௌ, நோ, து

 

விதி 16: சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

            எ.கா.: சாலச்சிறந்தது

செய்யுளுக்கே உரிய சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும் நண்பா…. அதாவது உரிச்சொற்கள் என்பவை பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் முன்னால் ஒரு அடையாய் வரும்.

தமிழில் பல உரிச்சொற்கள் உள்ளன. அவற்றில் சால, தவ, தட, குழ என்ற நான்கு உரிச்சொற்களை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அவற்றின் பின் வல்லினம் மிகும்.

 

விதி 17: தனிக்குற்றெழுத்தினை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.

         எ.கா.: நிலாச்சோறு

இதுவும் மிகச்சுலபமான விதிதான் நண்பா.

தனிக்குற்றெழுத்து என்றால் தனியாக உள்ள ஒரு குறில் எழுத்து என்று பொருள்.

அதன் பின்னே ஆகார எழுத்து வரும்போது என்று சொல்கின்றனர்.  அதாவது ‘ஆ’ வரிசையில் வரும் எழுத்து.

இன்னும் சுலபமாக இரண்டு எழுத்துச்சொல், முதல் எழுத்து குறிலாக வரும், இரண்டாம் எழுத்து “ஆ” வரிசையில் வரும்  என்று நினைவில் வைத்துக்கொள் நண்பா.

இவ்வாறான சொற்களுக்குப் பின்னே வல்லினம் வரும்பொழுது வலி மிகும்.

அவ்வளவுதான் நண்பா….

இன்றைக்கு இந்த மூன்று விதிகள் போதும் …. மீதமுள்ளவற்றை நாளை தொடரலாம்…. காத்திரு


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27