இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 13

பதிமூன்று

என்ன நண்பா உற்சாகமாக உள்ளாயா…?

வலிமிகுதலின் ஆறு விதிகளைப் படித்துப் புரிந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சியினை உணர்கின்றாயா….

வா…. இன்னும் சில விதிகளைப் பார்ப்போம்.

இன்றைக்கு வெகு சுலபமான, நேரடியாகப் புரிந்துகொள்ளக் கூடிய சில விதிகளைப் பார்த்துவிடலாம் நண்பா….

விதி 7: என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

              எ.கா.: எனக்கூறினான், வருவதாகச்சொல்

விதி 8: எண் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்

               எ.கா.: எட்டுக்குதிரைகள், பத்துகாசு

விதி 9: அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தொடர்ந்து வல்லினம் மிகும்

               எ.கா.: அப்படிக்காட்டு, இப்படிச்செய், எப்படித்தெரியும்

விதி 10: திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்

               எ.கா.: கிழக்குக்கடல், மேற்குத்திசை, வடக்குப்பக்கம், தெற்குத்திசை

விதி 11: அதற்கு, இதற்கு, எதற்கு என்ற சொற்களின் பின்னே வல்லினம் மிகும்.

                எ.கா.: அதற்குச்சொன்னேன், எதற்குத்தந்தாய், இதற்குக்கொடு

விதி 12: இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்

               எ.கா.: இனிக்காண்போம், தனிச்சிறப்பு

விதி 13: மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்

                எ.கா.: மிகப்பெரியவர்

இந்த விதிகள் அனைத்தும்  உனக்கு நேரடியாகவே புரிந்திருக்கும் என்பதனால், உனக்கு நினைவில் வைப்பதும் சுலபம்.

அடுத்ததாகக் கீழ்க்கண்ட விதியினைப் பார்.

விதி 14: மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகரமெய் கெட்டு அவ்விடத்தில் வல்லினம் மிகும்.

             எ.கா.: மரம் + சட்டம் = மரச்சட்டம்

இது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை நண்பா…. மகரமெய்யில் ( அதாவது ‘ம்’) முடியும் ஒரு சொல்லோடு வல்லினத்தில் தொடங்கும் ஒரு சொல் சேரும்போது, அந்த ‘ம்’ காணாமல் போய்விடும். அதன்பின் அந்த வல்லினத்திற்குரிய மெய்யெழுத்து மிகுந்து வரும்.

 எடுத்துக்காட்டினைப் பார் நண்பா. ‘மரம்’ என்பதில் உள்ள ‘ம்’ காணாமல் போய், ‘சட்டம்’ என்பதில் உள்ள ‘ச’ விற்கு இனமான ‘ச்’ தோன்றியுள்ளது.

அவ்வளவுதான்…

இன்றைய பாடம் உனக்கு மிக எளிமையாகவே இருந்திருக்கும் நண்பா…நாளை மீதம் உள்ள விதிகளைக் காண்போம். காத்திரு ……


Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21