இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர்_ நாள் 12

பன்னிரண்டு

நேற்றைக்கு வேற்றுமை உருபுகள் பற்றிப் பார்த்தது அனைத்தும் நினைவில் உள்ளதா நண்பா…..?

இல்லயெனில் கண்களை மூடி மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொள்.

செய்து விட்டாயா…?

சரி இப்போதைக்கு இரண்டாம் வேற்றுமை மற்றும் நான்காம் வேற்றுமையினை மட்டும் ஞாபகம் செய்.

செய்துவிட்டாயா…?

வா… வல்லினம் மிகுதலின் அடுத்த இரண்டு விதிகளைப் பார்ப்போம்.

விதி4: இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்

எ.கா.: அவனைப் பார்த்தேன்

விதி5: நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்

எ.கா.: அவனுக்குத் தெரியும்

சரியா….?

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ என உன் நினைவில் இருக்கும். அது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை போன்ற பொருள்களில் வரும் என்பதும் உன் நினைவில் இருக்கும்.

சரிதானே …. இனி எங்கெல்லாம் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வருகின்றதோ அங்கெல்லாம் மறக்காது ஒற்றினை இட்டு விடு…

அடுத்து நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என உன் நினைவில் இருக்கும். அது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பலபொருட்களில் வரும் என்பதும் நினைவில் இருக்கும்.

இனி ‘ஐ’ யினைப் போலவே ‘கு’ என்னும் வேற்றுமை உருபும் எங்கெல்லாம் வெளிப்படையாக வருகின்றதோ அங்கெல்லாம் மறக்காது ஒற்றினை இட்டு விடு…

அவ்வளவுதான் நண்பா….

வா அடுத்த விதியினைப் பார்க்கலாம்.

விதி 6: ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

  எ.கா.: புலித்தோல்

அது என்ன வேற்றுமைத்தொகை..?

ஒன்றும் குழப்பம் வேண்டாம் நண்பா….வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வந்தால் அது வேற்றுமைத் தொகாநிலை  எனப்படும். வேற்றுமை உருபுகள் மறைந்து வந்தால், அது வேற்றுமைத்தொகை என அழைக்கப்படும்.

 விதி 4 மற்றும் 5 ல் உருபுகள் வெளிப்படையாக வரும் எனக்குறிப்பிட்டிருந்தோம் என்பதனைக் கவனி.

மாறாக இந்த விதி எண் ஆறில் உருபு மறைந்து வரும் என்பதனையும் கவனி.

எடுத்துக்காட்டினைப் பார்.

புலித்தோல். அதாவது புலியினது தோல். அது என்பது ஆறாம் வேற்றுமைக்கான உருபு என நேற்றுப் பார்த்தோம் அல்லவா…? அந்த உருபு இங்கே மறைந்து வருகின்றது. இவ்வாறு ஆறாம் வேற்றுமை உருபு  (அது, ஆது, அ) மறைந்து  வரும் வேளையில் வல்லினம் மிகும்.

புரிந்து கொண்டாயா….

அவ்வளவுதான் நண்பா…. சுலபமாக நீ ஆறு விதிகளைக் கற்றுக்கொண்டாய்.

இனி மீதமுள்ள விதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் இனிவரும் நாட்களில் பார்க்கலாம்…. காத்திரு ……


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27