இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 11

பதினொன்று

வா நண்பா… நலம்தானே….

வலி மிகுதலில் மூன்று விதிகளை நேற்றுப் பார்த்தோம். நினைவில் உள்ளதா…?

இன்று அடுத்தடுத்த விதிகளைத் தொடர்வதற்கு முன் வேற்றுமை உருபுகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்துகொள்வோம்.

ஏனெனில் அடுத்த மூன்று விதிகளுக்கு இதுகுறித்த அறிமுகம் முக்கியம்.

கீழ்க்கண்ட வாக்கியத்தினைப் பார்.

“முருகனைக் கண்டான்”

இதன் பொருள் என்ன..? யாரோ பெயர் குறிப்பிடப்படாத ஒருவன் முருகனைப் பார்த்தான் என்பதுதானே…. சரி, ஒருவேளை இதனைக் கீழ்க்கண்டவாறு எழுதினால் என்ன ஆகும்?

“முருகன் கண்டான்”

வாக்கியத்தின் பொருளே மாறிவிட்டது அல்லவா…?

‘ஐ’ என்ற உருபினை முருகன் என்ற பெயர்ச்சொல்லோடு சேர்த்ததன் மூலம் நாம் சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னோம்  என்று புரிந்து கொண்டாய் அல்லவா…?

இப்படி ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக்காட்ட உதவும் உருபே வேற்றுமை உருபு என அழைக்கப்படுகின்றது.

இது எட்டு வகைப்படும்.

அவை ஒவ்வொன்றைப் பற்றியும் மிகச் சுருக்கமாய்ப் பார்த்துவிடலாம் … வா…

முதல் வேற்றுமை (அல்லது) எழுவாய் வேற்றுமை

முதல்வேற்றுமைக்குத் தனி உருபு கிடையாது.

ஒரு எழுவாய் இயல்பான பயனிலை கொண்டு முடிவது முதல்வேற்றுமை ஆகும்.

எ.கா.: கண்ணன் வந்தான், அவன் கண்ணன்.

அது என்ன எழுவாய் என்று குழப்பிக்கொள்ளாதே… அதனையும் தெரிந்துகொள் … வா…

தமிழில், ஒரு வாக்கியத்தினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) எழுவாய்,  

2) பயனிலை,  

3)செயப்படுபொருள்

எழுவாய் என்றால் அந்த வாக்கியம் எழுவதற்குக் காரணமாய் இருப்பது.

பயனிலை என்றால் அந்த வாக்கியத்தின் பயன் நிலைத்து நிற்கும் இடம் ஆகும்.

செயப்படுபொருள் என்றால் எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே செயப்படுபொருள் ஆகும்.

உதாரணமாக, கீழ்க்கண்ட சொற்றொடரைப் பார்.

“கண்ணன் தேரினை ஓட்டினான்”

யார் ஓட்டினார் ? – கண்ணன் – எழுவாய்

எதை ஓட்டினான்? – தேரினை – செயப்படுபொருள்

என்ன செய்தான் ? – ஓட்டினான் – பயனிலை

அவ்வளவுதான் பொருள்….. விளங்கிக்கொள்.

இரண்டாம் வேற்றுமை / செயப்படுபொருள் வேற்றுமை

வேற்றுமை உருபு – ‘ஐ”

இது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை போன்ற பொருள்களில் வரும்.

சில எடுத்துக்காட்டுகளைப் பார் உனக்குப் புரியும்.

எ.கா.:

ஆக்கல் – “பள்ளியைக் கட்டினான்”

அழித்தல் – “பகைவரை அழித்தான்”

அடைதல் - “கோவிலை அடைந்தான்”

நீத்தல் –“சினத்தை விட்டான்”

ஒத்தல் – “குயிலைப் போன்றவள்”

உடைமை – “செல்வத்தை உடையவன்”

புரிந்ததா நண்பா…?

மூன்றாம் வேற்றுமை:

வேற்றுமை உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

எ.கா.:

நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

தூங்குகையான் ஓங்கு நடை

தாயொடு மகள் வந்தாள்

தந்தையோடு தாய் வந்தாள்

தந்தையுடன் தம்பியும் வந்தான்

நான்காம் வேற்றுமை

வேற்றுமை உருபு – கு

கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பலபொருட்களில் இந்த வேற்றுமை வரும்.

எ.கா.:

நந்தினிக்குப் பரிசு கிடைத்தது (கொடை)

நோய்க்குப் பகை மருந்து (பகை)

பாரிக்கு நண்பர் கபிலர் (நட்பு)

வீட்டுக்கு ஒரு பிள்ளை (தகவு)

வளையலுக்குப் பொன் (அதுவாதல்)

கூலிக்கு வேலை (பொருட்டு)

கோவலனுக்கு மனைவி கண்ணகி (முறை)

திருத்தணிக்கு வடக்கே வேங்கடம் (எல்லை)

ஐந்தாம் வேற்றுமை             

வேற்றுமை உருபுகள் – இல், இன்

நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய பொருட்களில் வரும்.

எ.கா.:

தலையின் இழிந்த மயிர் (நீங்கல்)

பாலின் நிறம் கொக்கு (ஒப்பு)

இந்தியாவின் தெற்கு எல்லை குமரி (எல்லை)

கொடையில் சிறந்தவர் பாரி (ஏது)

ஆறாம் வேற்றுமை

வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ

இது உரிமைப் பொருளில் வரும்.

எ.கா.:

இராமனது வீடு

ஏழாம் வேற்றுமை

வேற்றுமை உருபுகள் – இல், கண், இடம், உள், மேல், கீழ்

இடம், காலம் ஆகியவற்றினைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை வரும்.

‘இல்’ என்னும் உருபு ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வந்தால் அது ஐந்தாம் வேற்றுமை என்பதனை நினைவில் வைத்துக்கொள் நண்பா…

எ.கா.:

வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது

பெட்டிக்குள் பணம் இருக்கின்றது

கூரையின் மேல் சேவல் உள்ளது

கட்டிலின் கீழ் நாய் படுத்துள்ளது

மணியில் ஒலி

எட்டாம் வேற்றுமை / விளிவேற்றுமை

உருபு கிடையாது. 

விளித்தல் பொருளில் வரும்.

படர்க்கைப் பெயரினை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதனையே விளிவேற்றுமை என்கின்றோம். (தன்மை, முன்னிலை, படர்க்கை எல்லாம் நினைவில் உள்ளதுதானே நண்பா… இல்லையெனில் ஒன்பதாம் நாள் பாடத்தினை மீண்டும் படித்துப்பார்)

எ.கா.: கந்தா வா.

அவ்வளவுதான் நண்பா…. எவ்வளவு சுருக்கமாகப் பார்க்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக வேற்றுமை உருபுகளைப் பற்றிப் பார்த்து விட்டோம்.

இனி நாளை வல்லினம் மிகும் இடங்களின் அடுத்த மூன்று விதிகளைப் பார்ப்போம். காத்திரு …….


Comments

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27