இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 10

பத்து

வணக்கம் நண்பா….. ஒன்பது நாள் பாடங்களையும் முடித்துவிட்டு வெற்றியுடன் பத்தாம் நாள் சந்திக்கின்றோம்.

இன்றிலிருந்து நமது முக்கிய குறிக்கோளான பிழை திருத்தம் குறித்து நேரடியாகப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

பொதுவாக நம் பிழைகளை எழுத்துப்பிழை, சொற்பொருட்பிழை, சொற்றொடர்ப்பிழை மற்றும் பொதுவானபிழைகள் என்னும் நான்கு முக்கிய தலைப்புகளுக்குள் அடைத்துவிடலாம்.

எழுத்துப்பிழைகள் குறித்துதான் முதலில் நாம் பார்க்கப் போகின்றோம்.

எழுத்துப்பிழைகளை,  ஒற்றுப்பிழைகள்,  மயங்கொலிப்பிழைகள்,   குறில் நெடில் பிழைகள் மற்றும் துணையெழுத்துப்பிழைகள் எனப் பிரித்துக்கொள்வோம்.

ஒற்றுப்பிழைகள் என்பது தேவையான இடத்தில், தேவையான ஒற்றினை இடாமல் இருப்பதும் , தேவையற்ற இடத்தில் ஒற்றினைப் பயன்படுத்துவதுமாகும்.

மயங்கொலிப்பிழைகள் என்றால் ற-ர, ந-ன-ண, ல-ள-ழ  வித்தியாசம் தெரியாமல் பேசுவதும் எழுதுவதும் ஆகும்.

குறில் எழுத்துக்குப்பதில் நெடிலினைப் பயன்படுத்துவது, நெடிலுக்குப் பதில் குறிலினைப் பயன்படுத்துவது குறில் நெடில் பிழைகள் ஆகும்.

எடுத்துக்காட்டு: பள்ளிக்கூடம் – பள்ளிக்குடம்  (குடம் என்றால் தண்ணீர் நிரப்பும் பாத்திரம்)

தேவையான இடங்களில் துணையெழுத்தினை இடாமல் விடுவதும் தேவையற்ற இடங்களில் இடுவதும் துணையெழுத்துப்பிழைகள் ஆகும். ( இதனால் குறில் நெடிலாகவும், நெடில் குறிலாகவும் மாறும்)

எ.கா.: சாப்பாடு – சப்படு, நகரம் – நாகாரம்

சரியா நண்பா…..

வா இப்போது ஒற்றுப்பிழையினைத் தவிர்ப்பதற்கான இரண்டு முக்கியமான பொருள்களைப் பற்றிப் பார்ப்போம்.

வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்

வலி என்றவுடன் அடித்தால் வருவது என என்ணிக்கொள்ளாதே…. வல்லினம் என்பதுதான் அதன் பொருள்.

முதலில் வல்லினம் மிகும் இடங்கள் பற்றிப் பார்க்கலாம்.

வலி மிகும் இடங்கள்

படித்து பார் – படித்துப்பார்

இரண்டில் எது சரி…? உச்சரிக்கும்போதே உனக்குத் தெரிந்திருக்குமே படித்துப்பார் என்பதுதான் சரியென்று….

இதனைத்தான் வலிமிகும் இடம் என்றேன்

அதாவது, ஒரு சொல்லின் முதல் எழுத்து க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளில் ஒன்றாக இருப்பின் ( வரிசை என்றால் க, கா, கி, கீ…… ஞாபகம் உள்ளதல்லவா…?) அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லினத்தின் மெய்யெழுதினைச் சேர்த்து எழுதவேண்டும். இதுதான் வல்லினம் மிகல் எனப்படும்.

பயந்து ஓடாதே… இங்கே வா…. உனக்குப் புரியும் வகையில் சொல்கிறேன்…

தொடக்கத்தில் நாம் பார்த்த எடுத்துக்காட்டினைப் பார்.

“படித்துப் பார்”

சரியா…..?

இதில் பார் என்ற வார்த்தையின் முதல் எழுத்து ப என்னும் வல்லின எழுத்தின் வரிசையில் (பா) வருகின்றதா……

இப்போது ப என்னும் உயிர்மெய்யெழுத்தின் மெய்யெழுத்தான ‘ப்’ என்பதனைச் சேர்த்து எழுதப்போகின்றோம்.

அதுதான் “படித்துப்பார்”.

இதுதான் வலிமிகுதல்.

இந்த வலிமிகுதல் எல்லா இடங்களிலும் நடக்குமா என்றால் இல்லை….. சில வேளைகளில் நடக்காது அதுதான் வலி மிகா இடம்.

அவ்வளவுதான்….

இப்போது நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் எங்கெங்கு வலி மிகும், எங்கெல்லாம் வலி மிகாது என்பதுதான்….

 ஏற்கனவே சொன்னதுபோல வல்லினம் மிகும் இடங்களைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

வல்லினம் மிகுதலுக்கு நிறைய விதிகள் உள்ளன.

ஒவ்வொரு விதியினையும் ஒன்றன்பின் ஒன்றாகப் புரிந்துகொள்ளலாம்…வா…

விதி 1: ‘அ’ , ‘இ’ என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

               எ.கா.: அச்சட்டை, இப்பக்கம்

விதி 2: ‘அந்த’, ‘இந்த’ என்னும் சுட்டுத்திரிபுகளின் அடுத்து வல்லினம் மிகும்

              எ.கா.: அந்தப்பக்கம், இந்தப்பக்கம்

விதி 3: ‘எ’ என்னும் வினா எழுத்தின் பின்னும், ‘எந்த’ என்னும் வினாத்திரிபை அடுத்தும் வல்லினம் மிகும்.

             எ.கா.: எத்திசை?, எந்தத்திசை?

என்னடா… சுட்ட எழுத்து, சுடாத எழுத்து என்று குழப்புகிறாயே என்று கேட்கின்றாயா….. அச்சம் வேண்டாம், வா அதனையும் என்னவென்று பார்த்துவிடலாம்.

சுட்டுப்பொருளை, அதாவது சுட்டிக்காட்டும் பொருளை உணர்த்தும் எழுத்துக்களான அ, இ, உ ( எ.கா.: அவன், இவன், உவன்) ஆகியவை சுட்டெழுத்துக்கள் என்று அழைக்கப்படும்.

இதனை அகச்சுட்டு, புறச்சுட்டு என இரண்டாகப் பிரிக்கலாம்

சொல்லின் உள்ளே நின்று பொருள் தந்தால் அது அகச்சுட்டு. இதில் சுட்டெழுத்தினை நீக்கி விட்டால் அந்தச்சொல்லுக்குப் பொருள் இருக்காது.     எ.கா. அவன், இவன்

சொல்லுக்கு வெளியே நின்று பொருள் தந்தால் அது புறச்சுட்டு. இதில் சுட்டெழுத்தினை நீக்கி விட்டாலும் அந்தச் சொல்லுக்குப் பொருள் இருக்கும். எ.கா.: அவ்வீடு, இக்குதிரை

சிலவேளைகளில் அவ்வீடு, இக்குதிரை எனக் கூறுவதற்குப் பதிலாக அந்த வீடு, இந்தக் குதிரை எனவும் கூறலாம். இது சுட்டுத்திரிபு எனப்படும்.

சரியா… இப்போது விதி 1 மற்றும் 2 ல் உள்ள சுட்டெழுத்து மற்றும் சுட்டுத்திரிபு பற்றி விளங்கிவிட்டதல்லவா…?

அடுத்து விதி 3 ல் உள்ள வினா எழுத்து, வினாத்திரிபினைத் தெரிந்துகொள்.

வினாப்பொருளினை உணர்த்தும் ஆ, யா, ஒ, எ, ஏ ஆகிய ஐந்து எழுத்துக்களும் வினா எழுத்துக்கள் ஆகும். எ.கா.: அவனா?, யார்?, அன்றோ?, எது?, ஏன்?

இந்த எழுத்துக்களையும், அகவினா, புறவினா மற்றும் வினாத்திரிபு என சுட்டெழுத்துக்களைப் போலவே வகைப்படுத்தமுடியும்.

புரிந்ததா… இந்த வினா எழுத்துக்களில் ‘எ’ என்னும் வினா எழுத்தினைப் பற்றி மட்டும்தான் விதி 3 ல் சொல்லப்பட்டுள்ளது என்பதனை உற்றுநோக்கவும்.

நண்பா…. இன்றைக்கு இந்த மூன்று விதிகள் போதும்.

இனிவரும் நாட்களில் மற்ற விதிகளையும் விளக்கமாகப் பார்க்கலாம்.

காத்திரு…

 


Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27