யாதும் ஊரே யாவரும் கேளிர்
இலக்கியம் என்பது வாழ்வினைச் சார்ந்தது என்று கூறாமல் கூறியவர்கள் நம் முன்னோர்கள். வாழ்வின் நிகழ்வுகளை அகம் புறம் எனப்பிரித்து அதன் அடிப்படையில் இலக்கியம் வரைந்தவர்கள். புற வாழ்க்கையின் சிறப்பினைப் பேசும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு பெருமை வாய்ந்த நூல் புறநானூறு. புறநானூற்றின் 192 வது பாடல், கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல், ஒரு நிறை வாழ்விற்கான அர்த்தம் சொல்லும் பாடல். உலகம் முழுதையும் ஒன்றெனக் காணக் கூறும் பாடல். “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” - எல்லா ஊர்களும் எனது ஊர். எல்லா மக்க...